மீனவர்களுக்கு ஆண்டுதோறும் ரூ 6,000, அரசுபணிகளில் பெண்களுக்கு 30% இடஒதுக்கீடு போன்ற வாக்குறுதிகளுடன் முதல் அமைச்சரவையிலேய சிஏஏ அமல்படுத்தப்படும் என்று வாக்குறுதியும் மேற்குவங்க பாஜக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மேற்குவங்கத்தில் அடுத்தவாரம் முதல்கட்டமாக 30 தொகுதிகளில் சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. இதன்காரணமாக அனைத்து கட்சிகளும் தங்கள் பிரசாரத்தை தீவிரப்படுத்தியுள்ளன.

திரிணாமுல் காங்கிரஸ் கட்சி சிலநாட்களுக்கு முன்னர், தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டிருந்தது. இந்நிலையில், மேற்குவங்க தேர்தலுக்கான பாஜகவின் தேர்தல் அறிக்கையை உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று வெளியிட்டார்.

அப்போது பேசியவர், “தலைசிறந்த வங்காளத்தை மீண்டும் உருவாக்குவதே இந்த தேர்தல் அறிக்கையின் நோக்கம். ஒருகாலத்தில் இந்தியாவின் ஒட்டுமொத்த உற்பத்தியில் சுமார் 30% வங்கத்தில் இருந்தே உற்பத்திசெய்யப்பட்டன. ஆனால் இப்போது மோசமான நிர்வாகத்தால் அது 8% குறைந்துவிட்டது. இது தேர்தல்அறிக்கை மட்டுமில்லை பாஜகவின் தீர்மானம்” என்று அவர் பேசினார்.

நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் ரூ. 6000 வழங்கப்படுகிறது. அதேபோல மீனவர்களுக்கும் ஆண்டுதோறும் ரூ. 6000 வழங்கப்படும் என்றும் பாஜக தேர்தல் அறிக்கையில் கூறப் பட்டுள்ளது. அதேபோல மேற்கு வங்கத்தில் உள்ள 75 லட்சம் விவசாயிகளுக்கு கடந்த 3 ஆண்டுகளாக வழங்கவேண்டி 18,000 ஆயிரம் ரூபாய் உடனடியாக வழங்கப்படும்.

அரசுப்பணிகளில் பெண்களுக்கு 30% இடஒதுக்கீடு வழங்கப்படும். பொது போக்குவரத்தில் பெண்கள் இலவசமாகப் பயணிக்கலாம். ஆரம்பக்கல்வி முதல் முதுகலைக் கல்விவரை கல்வி அனைவருக்கும் இலவசமாக வழங்கப்படும். துர்கா பூஜை, சரஸ்வதி பூஜைகளுக்கு எவ்வித கட்டுப்பாடுகளும் விதிக்கப்படாது. மாநில அரசு ஊழியர்களுக்கு 7வது ஊதியக்குழு பரிந்துரை உடனடியாக அமல்படுத்தப்படும். கிராமப்புறபகுதிகளில் சுகாதாரத்தை மேம்படுத்தப் புதிதாக மூன்று எய்ம்ஸ் மருத்துவமனைகள் கட்டப்படும்.

பாஜக ஆட்சி அமைந்தவுடன் நடைபெறும் முதல் அமைச்சரவையிலேயே குடியுரிமை திருத்தச்சட்டம் அமல்படுத்தப்படும். இதன்மூலம் கடந்த 70 ஆண்டுகளாக இந்தியாவில் அகதிகளாக வாழ்பவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கப்படும். ஒவ்வொரு அகதிகளின் குடும்பத்திற்கும் ஆண்டு தோறும் 10 ஆயிரம் விதம் ஐந்து ஆண்டுகளுக்கு வழங்கப்படும். எல்லைகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு, அந்நியர்கள் நாட்டில் நுழைவது தடுத்துநிறுத்தப்படும் உள்ளிட்ட வாக்குறுதிகள் பாஜக தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ளன.

Comments are closed.