முதல்வர் ஜெயலலிதா மீண்டும் தன்பணிகளை கவனிக்கும் வரை, அவரின் பொறுப்புக்களை நிதியமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் கவனிப்பார் என தமிழக ஆளுநர் (பொறுப்பு) வித்யா சாகர் ராவ் அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக ஆளுநர் மாளிகை அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ''இந்திய அரசியலமைப்பு சட்டப் பிரிவு 166, உட்பிரிவு 3ன் படி, முதல்வர் ஜெயலலிதா கவனித்துவந்த துறைகள், நிதி, பணியாளர் நலன் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறை அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

அமைச்சரவைக் கூட்டங்களுக்கு இனி நிதியமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தலைமை வகிப்பார். முதல்வர் ஜெயலலிதாவின் ஆலோசனையின்படி, அவர் மீண்டும் தன்பணிகளை கவனிக்கும் வரை இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முதல்வர் பதவியில் ஜெயலலிதாவே நீடிப்பார்.

முதல்வர் ஜெயலலிதா நலம்பெற்று திரும்பும்வரை இந்த ஏற்பாடு தொடரும்'' என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply