கடந்த ஆட்சியில் தங்களிடம் பிடிபட்ட இந்தியவீரர்களின் தலையை வெட்டி அட்டூழியத்தில் ஈடுபட்ட பாகிஸ்தான், இப்போது, நமதுவீரரை பத்திரமாக திருப்பி அனுப்பும் அளவுக்கு நிலைமையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது என்று பாஜக தேசியத்தலைவர் அமித்ஷா கூறியுள்ளார்.
ஜார்க்கண்ட் மாநிலம் கோதாவில் செவ்வாய்க் கிழமை நடைபெற்ற பாஜக தொண்டர்கள் கூட்டத்தில் அவர் பேசியதாவது:

கடந்த ஆட்சியில் பாகிஸ்தான் நமது நாட்டு விஷயத்தில் எப்படி நடந்து கொண்டது? இப்போது அதில் எப்படிமாற்றம் ஏற்பட்டுள்ளது என்பதை சற்று சிந்தித்துப்பாருங்கள். முன்பு நமது எல்லையில் புகுந்து நமது ராணுவ வீரர்களின் தலையை துண்டிக்கும் அளவுக்கு பாகிஸ்தான் அட்டூழியத்தில் ஈடுபட்டது. ஆனால், இப்போது, தங்களிடம் பிடிபட்ட நமது விமானப் படை கமாண்டரை 48 மணிநேரத்தில் பத்திரமாக திருப்பி அனுப்பி வைத்துள்ளது. இதன் மூலம் பாகிஸ்தானுக்கு இப்போதைய மத்திய அரசு எந்தமாதிரியான பாடத்தைக் கற்பித்துள்ளது என்பதை புரிந்து கொள்ள முடியும்.

இதற்கு முன்பு 10 ஆண்டுகளாக மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ்கூட்டணி அரசு ஜார்க்கண்ட் மாநிலத்துக்கும், நமது நாட்டுக்கும் எந்தமாதிரியான பணிகளை ஆற்றியது? குறிப்பிட்டுக் கூறும் அளவுக்கு அவர்கள் எதையும் செய்யவில்லை. மேலும், ஊழல் நிறைந்த ஆட்சியாகவே முந்தைய மத்தியஅரசு இருந்தது. ஆனால், இப்போதைய அரசு அனைத்தையும் முற்றிலுமாக மாற்றியுள்ளது. நிர்வாகத்தில் வெளிப்படைத் தன்மை, நேர்மை, பொருளாதார வளர்ச்சிக்கான சிறப்பான திட்டங்கள் ஆகியவற்றின் மூலம் நாட்டை வளர்ச்சிப்பாதையில் அழைத்து சென்றுள்ளோம் என்றார் அமித்ஷா.

Leave a Reply