வளர்பிறை பிரதமை திதியில் இருந்து நவமி திதிவரை ஒன்பது நாட்கள் நடைபெறும் நவராத்திரி விழாவில் முதல் மூன்று நாட்கள் துர்க்கை (பார்வதி) வழிபாடு. இடை மூன்று நாட்கள் லட்சுமிவழிபாடு. கடைசி மூன்று நாட்கள் சரஸ்வதி வழிபாடு. முப்பெரும் தேவிகள் முக்கியத்துவம் பெறும் விழாவாக இந்த நவராத்திரி விழா உள்ளது.

துர்க்கை தேவி

நெருப்பின் அழகு, ஆவேசப்பார்வை, வீரத்தின் தெய்வம், சிவ பிரியை, இச்சா சக்தியான துர்க்கையை, ‘கொற்றவை’, ‘காளி’ என்றும் அழைப்பார்கள். வீரர்களின் தொடக்கத்திலும், முடிவிலும் வழிபாட்டுக் குரியவர் துர்க்கை. மகிஷன் என்ற அசுரனுடன் ஒன்பது இரவுகள் போரிட்டாள். இவையே நவராத்திரி விழாவாக கொண்டாடப் படுகிறது. வெற்றியை கொண்டாடிய 10-ம் நாள் விஜய தசமியாகும்.

வன துர்க்கை, சூலினி துர்க்கை, ஜாதவேதோ துர்க்கை, ஜ்வாலா துர்க்கை, சாந்தி துர்க்கை, சபரி துர்க்கை, தீப் துர்க்கை, சூரி துர்க்கை, லவண துர்க்கை ஆகியோர் நவதுர்க்கை என்று அழைக்கப்படுகின்றனர். இவர்கள் அனைவரும் துர்க்கையின் அம்சங்கள்.

லட்சுமி தேவி

மலரின் அழகு, அருள் பார்வையுடன் அழகாக விளங்குகிறாள். செல்வத்தின் தெய்வம், விஷ்ணு பிரியை, கிரியாசக்தி, லட்சுமி அமுதத்துடன் தோன்றியவள். அமுத மயமானவள். பொன்னிற மேனியுடன் கமலாசனத்தில் வீற்றிருப்பவள். இவளை நான்கு யானைகள் எப்போதும் நீராட்டிக் கொண்டிருக்கும். செல்வ வளம் தந்து, வறுமையை அகற்றி அருள் புரிபவள். திருப்பதியிலுள்ள திருச்சானூரில் லட்சுமிக்கு தனி கோவில் அமைந்துள்ளது.

ஆதி லட்சுமி, மகா லட்சுமி, தன லட்சுமி, தானிய லட் சுமி, சந்தான லட்சுமி, வீர லட்சுமி, விஜய லட்சுமி, கஜ லட் சுமி ஆகிய 8 பேரும் அஷ்ட லட்சுமிகள் எனப்படுவர். இவர் கள் அனைவரும் லட்சுமி தேவியின் அம்சங்கள் ஆவர்.

சரஸ்வதி தேவி

வைரத்தின் அழகு, அமைதிப் பார்வையுடன் அழகாகப் பிரகாசிப்பவள். கல்வியின் தெய்வம், பிரம்மபிரியை, ஞான சக்தியான சரஸ்வதி தேவிக்கு, தஞ்சாவூர் மாவட்டம் கூத்தனூரில் தனிக் கோவில் அமைந்துள்ளது. நவராத்திரியின் ஆறாவது, ஏழாவது நாளில் மூலநட்சத்திரம் உச்சமாக இருக்கும்போது, சரஸ்வதியை வழிபாடுசெய்வது முறையாகும். இது தேவியின் அவதார நாள். சரஸ்வதி பூஜை திருவோணம் என்ற நட்சத்திரம் உச்ச மாகும் நாளில் நிறைவு பெறுகிறது. திருவோணம் அன்றே விஜய தசமி. ஞானத்தின் தெய்வமான சரஸ்வதியைப் பூஜிப்பது சரஸ்வதி பூஜை. பலகுழந்தைகள் கல்வியை அன்று தான் தொடங்குவார்கள். அன்று தொடங்கும் அனைத்து நற்காரியங்களும் வெற்றி தரும் என்பது ஐதீகம்.

வாகீஸ்வரி, சித்ரேஸ்வரி, துளஜா, கீர்த்தீஸ்வரி, அந்தரிட்ச சரஸ்வதி, கடசரஸ்வதி, நீலசரஸ்வதி, கினி சரஸ்வதி ஆகிய 8 பேரும் அஷ்ட சரஸ்வதிகள் என்று அழைக்கப்படுகின்றனர்.
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *