'என் முப்பாட்டன் முருகன்' என பச்சைக் கலர் உடையில் காவடி தூக்கிவந்த நாம் தமிழர் கட்சியினருக்குப் போட்டியாக, 'வேல் சங்கம யாத்திரை'யைத் தொடங்கியிருக்கிறார் பி.ஜே.பி-யின் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா! 

பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு, முருகக் கடவுளரின் அறுபடை வீடுகளிலிருந்தும் ரதங்களில் 'வேல்' எடுத்துவரப்பட்டு (வருகிற மார்ச் 29 ஆம் தேதி) மதுரைக்குப் பயணமாகிறார்கள் இந்த யாத்திரைக் குழுவினர். எப்போதும் பரபர செய்திகளின் பின்னணியிலேயே பயணித்துக் கொண்டிருக்கும் ஹெச்.ராஜாவிடம் 'இது என்ன புதுப்போட்டி?' என்றக் கேள்வியோடு பேச ஆரம்பித்தோம்…

''சீமானுக்குப் போட்டியாக, இந்துக்களின் ஓட்டுகளைக் கவரும் விதமாகவே 'வேல் சங்கம யாத்திரை'யை கையில் எடுத்திருக்கிறீர்களா?''

''இந்து ஒற்றுமைக்காக எடுக்கப்படும் இந்த விழாவில், அரசியல் எங்கே இருக்கிறது? முருகப்பெருமான் பெயரால், தமிழகத்திலுள்ள அனைத்து சமுதாய மக்களையும் ஒருங்கிணைப்பதற்காக வேல் சங்கம விழாவை மதுரையில் பொதுக்கூட்டமாக அரங்கேற்றவிருக்கிறோம். இதேபோல அறுபடை வீடுகளிலிருந்து எந்தவித வழிபாட்டு முறையையும் சீமான் ஆரம்பிக்கவில்லையே…?''

'' 'முருகன் எங்கள் மூதாதையர் – முப்பாட்டன்' என தமிழர்களுக்கான கடவுளாக சித்தரித்து வருகிறார் சீமான். நீங்களோ முருகனை 'இந்து கடவுள்' என அடையாளப்படுத்துகிறீர்களே… எப்படி?''

''முருகன் கடவுள்; யாருக்கும் தாத்தா இல்லை…! 

சீமான், ஏற்கெனவே இந்து மதத்தைக் கேவலமாகப் பேசியிருக்கிறார். குறிப்பாக ராமனை மிக மோசமாகப் பேசியிருக்கிறார். ஆக இந்த இமேஜை மாற்றுவதற்காக 'முப்பாட்டன் முருகன்' என்றக் கோஷத்தைக் கையில் எடுத்திருக்கிறார். ஆக, இந்த விஷயத்தில் அவர் செய்துவருவது வேஷம்! ஆனால், நாங்கள் அப்படியல்ல… ஏற்கெனவே மக்களிடம் இருக்கும் ஆன்மிகத்தையும் ஒற்றுமையையும் அதிகரிப்பதற்காக இந்த முயற்சியை செய்துவருகிறோம்.''

''குறிஞ்சி நிலக் கடவுளான முருகருக்கும் இந்து மதத்துக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை' என்கிறாரே சீமான்?''

''இந்துவும் தமிழும் வெவ்வேறு அல்ல. முல்லை, மருதம், நெய்தல், பாலை, குறிஞ்சி என தமிழர்களின் ஐவகை நிலங்களுக்கும் தனித்தனியே கடவுளர்கள் இருக்கிறார்கள். அதில் குறிஞ்சிக்கு முருகன் இருப்பதைப் போலவே, மற்றைய நிலங்களுக்கும் கொற்றவை, துர்கை, திருமால், வருணன், இந்திரன் என எல்லா இந்துக் கடவுள்களுமே இருக்கிறார்கள். 

புறநானூறு, அகநானூறு என சங்க இலக்கியங்களில், ராம பிரானைப் பற்றிப் பல இடங்களில் பாடப் பெற்றுள்ளன. அதுமட்டுமல்ல… சிலப்பதிகாரம் தமிழ் இலக்கியம்தானே…? அதில் கோவலன் – கண்ணகி திருமணம் பற்றிக் குறிப்பிடும் இடத்தில், 'வயது முதிர்ந்த அந்தணன் வேதத்தின் வழியைக்காட்ட தீயை வலம் வந்து திருமணம் செய்துகொண்டதைப் பார்ப்பதற்கு கண்கள் விரதமிருந்திருக்க வேண்டும்' என்று சொல்லப்பட்டுள்ளது. ஆக, கண்ணகியின் திருமணமே வேத முறைப்படி நடந்துள்ளது என சொல்லப்பட்டுள்ளது. எனவே, இந்துவையும் தமிழனையும் பிரித்தேப் பார்க்கமுடியாது.

ஆனால், 'தமிழனை இந்துவாகப் பார்க்கமுடியாது' என்ற சர்ச்சை எழுப்பப்பட்டுள்ளதற்கான அடிப்படையாக இருப்பது, 160 ஆண்டுகளுக்கு முன் கால்டுவெல்லும் ஜி.யு.போப்-பும் பரப்பிய துஷ்பிரசாரம்தானே ஒழிய, அதில் எந்தவித உண்மையும் இல்லை. 
சைவமும் வைணவமும் தமிழா இல்லையா…? ஆழ்வார்களும், நாயன்மார்களும் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே பாடியிருக்கிற தேவாரம், திருவாசகம், திவ்யப் பிரபந்தம் எல்லாம் தமிழனுடைய வாழ்க்கையின் ஓர் அங்கமா இல்லையா? 
ஆனால், ஜி.யு.போப்-பும் கால்டுவெல்லும் 'ஒப்பிலக்கணம்' என்ற பெயரில் தமிழக மக்களிடையே பல பொய்களைப் பரப்பிய இந்த 160 வருடங்கள்தான் தமிழனுடைய சரித்திரமா?எனவே, இந்து வேறு; தமிழ் வேறு என்று யாராலும் பிரிக்கவே முடியாது. இந்த உண்மைகளை எல்லாம் தெரிந்துகொண்டு வேண்டுமென்றே இவர்கள் குழப்பம் செய்கிறார்கள். அல்லது இந்த உண்மைகளைப் பற்றி என்னவென்றே தெரியாமல் புரியாமல் செய்கிறார்கள் என்றே அர்த்தம்!''

''நாம் தமிழர் கட்சி, முருக வழிபாட்டைக் கையில் எடுத்திருப்பது அரசியல் லாபத்துக்கான வழி என்கிறீர்களா?''

''கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்த சீமான், கடந்த காலங்களில், முழுக்க முழுக்க இந்து விரோதமாகத்தான் பேசிக்கொண்டிருந்தவர். இப்போது தமிழக மக்களை ஏமாற்றுவதற்காக, தனது வேஷத்தை மாற்றுவதற்காக முருகனைக் கையில் எடுத்துள்ளார்…. அவ்வளவுதான்!''

''கர்நாடகத்தில் 'லிங்காயத்துகள் இந்துக்கள் இல்லை' என்ற கோஷம் கிளம்பியிருப்பதையொட்டி, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முருகனை இந்து கடவுளாக்க நீங்கள் முயல்கிறீர்களா?''

''இப்போதுதான் நாங்கள் இந்த விழாவை எடுத்திருப்பதாக நினைக்கக்கூடாது. இதே தமிழகத்தில், விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பாக ஏற்கெனவே 'ஞான ரதம்' என்ற பெயரில், முருகக் கடவுளுக்காக வழிபாடு நடத்தப்பட்டிருக்கிறது. அதேபோல், சமயபுரம் மாரியம்மன் கோயிலிலிருந்து 'சக்தி ரதம்' எடுத்துவரப்பட்டிருக்கிறது. அதனால், இது ஒன்றும் புதிதில்லை என்பதை முதலில் தெரிந்துகொள்ளுங்கள்.


சமீபத்தில், திருச்செந்தூர் முருகன் கோயில் மதில் சுவர் இடிந்துவிழுந்து ஒரு பெண்மணி இறந்துபோனார். அதேபோல், மதுரை மீனாட்சி அம்மன் கோயில், திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள திருவாலங்காடு கோயில் மற்றும் கும்பகோணத்திலுள்ள கும்பேஸ்வரர் கோயில் ஆகியவற்றில் தீ விபத்துகள் நடந்துள்ளன. ஆகவே ஆன்மிக பலத்தை அதிகரிப்பதற்காக முருக வழிபாட்டை நாங்கள் கையில் எடுத்திருக்கிறோம்!''

நன்றி விகடன்

 

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.