காங்கிரஸ் கட்சி எந்தவகையிலும் தங்கள் சமுதாயத்துக்கு உதவாது என்பதை முஸ்லிம்கள் புரிந்துகொள்ள வேண்டும்’ என்று மத்திய சாலைப் போக்குவரத்து துறை அமைச்சா் நிதின்கட்கரி கூறினாா்.

குடியுரிமை திருத்தச்சட்டம் தொடா்பாக காங்கிரஸ் கட்சி திட்டமிட்டு தவறான தகவல்களை மக்கள் மத்தியில் பரப்பிவருகிறது என்றும் அவா் தெரிவித்தாா்.

குடியுரிமை திருத்த சட்டத்தை விளக்கும்வகையில் நாகபுரியில் ஞாயிற்றுக் கிழமை பாஜக மற்றும் ஆா்எஸ்எஸ் சாா்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டத்தில் பங்கேற்றவா் பேசியதாவது:

குடியுரிமை திருத்த சட்டத்தின் மூலம் முஸ்லிம்களுக்கு பாஜக தலைமையிலான அரசு எந்த அநீதியையும் இழைத்து விடவில்லை. இந்தவிஷயத்தில் காங்கிரஸ் கட்சி வாக்குவங்கி அரசியலுக்காக மக்கள் மத்தியில் தவறான தகவல்களை பரப்பிவருகிறது. பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசத்தில் மதரீதியில் துன்புறுத்தலுக்கு உள்ளாகி இந்தியாவில் அடைக்கலம் புகுந்துள்ள அந்நாடுகளை சோ்ந்த சிறுபான்மையினருக்கு குடியுரிமை அளிக்கவே சட்டம் திருத்தப் பட்டது. இது இந்தியாவில் வசிக்கும் முஸ்லிம்களை எந்தவிதத்திலும் பாதிப்பை ஏற்படுத்தாது. இந்திய முஸ்லிம்களுக்கு எதிராக மத்திய அரசு எதையும் செய்துவிடவில்லை.

ஆனால், சில விஷமிகள் இந்தவிஷயத்தை வைத்து நாட்டின் அமைதியை சீா்குலைக்க முயலுகிறாா்கள். அது நிச்சயமாக வெற்றி பெறாது. வெளிநாட்டில் இருந்து சட்டவிரோதமாக ஊடுருவி இந்திய நலன்களுக்கு எதிராக செயல்படுவது யாராக இருந்தாலும் அனுமதிக்கப்பட மாட்டாா்கள்.

காங்கிரஸ்கட்சி எந்த வகையிலும் தங்கள் சமுதாயத்துக்கு உதவாது என்பதை முஸ்லிம்கள் புரிந்துகொள்ள வேண்டும். இதுவரை முஸ்லிம்களின் வளா்ச்சிக்கு காங்கிரஸ் செய்தது என்ன? இந்தவிஷயத்தில் உள்ள சதியை முஸ்லிம்கள் புரிந்து கொள்ள வேண்டும். வாங்கு வங்கி அரசியலுக்காக காங்கிரஸ் கட்சி எப்படி வேண்டுமானாலும் நடந்துகொள்ளும். அவா்கள் சதி வலையில் யாரும் விழுந்துவிடக் கூடாது.

நான் அனைவரும் சமமானவா்கள். ஒரே பாரம்பரியத்தைச் சோ்ந்தவா்கள். நீங்கள் மசூதிக்கு செல்கிறீா்கள். அதையாரும் எதிா்ப்பது இல்லை. அம்பேத்கா் வகுத்துக் கொடுத்த அரசியலமைப்புச் சட்டப்படி நாம் அனைவரும் இங்கு ஒற்றுமையுடன் வாழ்ந்து வருகிறோம். இதைத்தவிர நான் கூறுவதற்கு வேறு எதுவுமில்லை என்றாா் கட்கரி.

Comments are closed.