தலாக் பிரச்சினை இந்துமுஸ்லிம் பிரச்சினையோ, அரசியல் பிரச்சினையோ அல்ல. பா.ஜனதா தான் உத்தரபிரதேசத்தை உத்தமபிரதேசமாக மாற்ற முடியும் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.

உத்தரபிரதேச மாநில சட்ட சபைக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற இருக்கிறது. இதையொட்டி அம்மாநிலத்தில் உள்ள பின் தங்கிய பகுதியான பண்டெல்கண்ட் பகுதியில் பா.ஜனதா கட்சியின் தேர்தல்பிரசார தொடக்க விழா நேற்று நடந்தது. பிரதமர் மோடி கலந்துகொண்டு பிரசாரத்தை தொடங்கிவைத்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது:–

உத்தரபிரதேசம் நாட்டுக்கு பலபிரதமர்களை கொடுத்துள்ளது. எனக்கும் அந்த வாய்ப்பை இந்தமாநிலம் வழங்கி உள்ளது. மற்ற அனைத்து பிரதமர்களும் செய்த ஒட்டுமொத்த பணிகளையும் விட நான் அதிகமாக பணியாற்ற விரும்புகிறேன். பண்டெல்கண்ட் பகுதியில் பல்வேறு திட்டங்களுக்கு நிதி ஒதுக்கப் பட்டுள்ளது. ஆனால் ஒரு பணியும் இங்கு நடைபெறவில்லை.

உத்தரபிரதேசத்தின் இந்தபூமி நமது தாய். எனவே நமது தாயை இனியும் சூறையாட நாங்கள் அனுமதிக்க மாட்டோம். பா.ஜ.க ஆளும் மத்திய பிரதேசத்தில் நிறைவேற்றப் பட்டுள்ள பலபணிகள் இன்னும் இங்கு தொடங்கப்படவே இல்லை.

இங்கு ஒருகட்சி தனது குடும்பத்தை காப்பாற்ற கடுமையாக சண்டை போட்டுக் கொண்டு இருக்கிறது. இன்னொரு கட்சி ஆட்சியை கைப்பற்றுவதில் அனைத்துவகையிலும் தோல்வி அடைந்ததால் அது தங்கள் குற்றச் செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. மூன்றாவது கட்சியான பா.ஜ.க, இந்த மாநிலத்தையும், மக்களையும் பாதுகாக்க முயற்சித்துக் கொண்டு இருக்கிறது.

இந்தபொறியில் இருந்து நீங்கள் விடுபட வேண்டு மானால், சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் கட்சிகளின் மாயையில் இருந்து வெளியே வர வேண்டும். இரு கட்சிகளும் மாறி, மாறி ஆட்சிக்குவந்து கொள்ளையடித்துக் கொண்டு இருக்கிறது. ஒருவர் ஆட்சியை பிடித்ததும் கடந்த ஆட்சியில் ஊழல்செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவிப்பார்கள், ஆனால் ஒரு போதும் நடவடிக்கை எடுக்க மாட்டார்கள்.

ஏனென்றால் இருகட்சிகளும் மாறி, மாறி ஆட்சிக்கு வருவார்கள். இந்தவிளையாட்டை நிறுத்தா விட்டால் இந்த மாநிலம் தனது செயல் திறனை அடையமுடியாது. பா.ஜ.க அரசால்தான் உத்தரபிரதேச மாநிலத்தை உத்தமபிரதேச மாநிலமாக மாற்றமுடியும்.

இந்தமாநிலத்தில் 2014 பாராளுமன்ற தேர்தலைபோன்ற நிலைமை தான் இப்போதும் நிலவுகிறது. எனவே மக்கள் பா.ஜனதாவுக்கு பெருவாரியான ஆதரவுஅளித்து வரலாற்று வெற்றி அடைய செய்வார்கள். ஒருபெரும்பான்மை அரசு அமையும் வகையில் மக்கள் பா.ஜனதாவை ஆதரிப்பார்கள்.

முந்தைய மத்திய, மாநில அரசுகளின் செயல் பாடற்ற தன்மையால் இந்தபகுதி இன்னும் பின்தங்கிய பகுதியாகவே உள்ளது. இங்கு ஆட்சியில் இருக்கும் கொள்ளையர்களால் அனைத்து திட்டங்களும் அறிவிப் பிலேயே இருப்பதால் மக்கள் பெரிதும் பாதிக்கப் பட்டுள்ளனர்.

மத்திய மந்திரி உமாபாரதியின் பெட்வா, கனே ஆறுகள் இணைப்புதிட்டம் நிறைவேறும் போது இங்குள்ள விவசாயிகள், மக்களின் நிலங்கள் பொன்விளையும் பூமியாக மாறும். முந்தைய மத்திய அரசு ஆறுகள் இணைப்பு திட்டத்தை நிறைவேற்றுவதில் மந்தமாக செயல்பட்டது. இது வாஜ் பாயியின் கனவுதிட்டம்.

பெண்சிசுக்களை கருவிலேயே அழிப்பவர்கள் சிறையில் அடைக்கப்படவேண்டும். அப்படிப்பட்டவர்கள் இந்துவாக இருந்தாலும் சரி, நடவடிக்கை எடுத்து வருகிறோம். அரசின் பெண் குழந்தைகள் மேம்பாட்டு திட்டம் நல்லபலனை அளித்துவருகிறது. பாலின இடைவெளியை குறைக்கவும் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

இப்போது ‘தலாக்’ பிரச்சினை வெளிவந் துள்ளது. தொலைபேசியில் மூன்று முறை தலாக்கூறுவதன் மூலம் ஒரு முஸ்லிம் பெண்ணின் வாழ்க்கையை அழிப்பதுதான் ஒரு ஆணுக்கு அழகா? பெண்களுக்கும் சம உரிமை வழங்குவதற்கு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும். இது இந்து, முஸ்லிம் பிரச்சினை அல்ல. ஓட்டுக்காக சில கட்சிகள் முஸ்லிம் பெண்களிடம் இருந்து பறிக்கப்பட்ட அடிப்படை உரிமைகளை 21–ம் நூற்றாண்டுக்கும் கொண்டுசெல்ல நினைப்பது என்னை அதிர்ச்சிக்கு உள்ளாக் குகிறது. இந்த பிரச்சினையை அரசியலாக்க வேண்டாம்.

பெண்களின் உரிமை தொடர்பான பிரச்சினையை முஸ்லிம்–இந்து பிரச்சினையாக பேச வேண்டாம் என தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்பவர்களிடம் கேட்டுக்கொள்கிறேன். இது முன்னேற்றத்துக்கான பிரச்சினை. இந்த விவாதம் மறுசீரமைப்பு வேண்டுவோர் மற்றும் வேண்டாதோர் அடங்கிய முஸ்லிம் அறிஞர்களுக்கு இடையே நடத்தப்பட வேண்டும். முஸ்லிம் பெண்களுக்கு அரசியல்சாசனத்தின் அடிப்படையில் நீதி வழங்க வேண்டிய பொறுப்பு அரசுக்கும், நாட்டு மக்களுக்கும் உள்ளது.

இந்த தீபாவளிக்கு மக்கள் அனைவரும் நமது போர் வீரர்களுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் வாழ்த்துகளை தெரிவிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.

Leave a Reply