பிரதமர் நரேந்திரமோடி அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள லோக்சபா தேர்தலில் ஒடிஷா மாநிலத்தில் போட்டியிடலாம் என்று தகவல்கள் கூறுகின்றன. அதேபோல பாஜக தேசியதலைவர் அமித்ஷா கொல்கத்தா வடக்கு தொகுதியில் போட்டியிடக்கூடும் என்றும் பாஜக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

வரலாறுகாணாத வகையில் வடகிழக்கு மாநிலங்களில் பாஜகவின் இருப்பு முன்பைவிட வலுவாக ஆரம்பித்துள்ளது. இதனால்தான் பாஜகவின் இருபெரும் தலைவர்களான மோடியும், அமித்ஷாவும் அங்கு போட்டியிட முடிவு செய்திருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.

இதுகுறித்து மேற்கு வங்கத்திலிருந்து வெளியாகும் அனந்தபஜார் பத்திரிகா செய்தி வெளியிட்டுள்ளது. அதில்தான் இதுகுறித்து விரிவாக விவரிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான திட்டத்தில் பாஜக இருப்பதாக பத்திரிகா தெரிவிக்கிறது.

மேற்கு வங்கம் மற்றும் ஒடிஷா ஆகிய இருமாநிலங்களிலும் சேர்த்து மொத்தம் 63 லோக்சபா எம்.பிக்கள் உள்ளனர். இதைக் குறிவைத்தே இந்த இரு மாநிலங்களிலும் மோடியையும், அமித் ஷாவையும் நிறுத்த பாஜக திட்டமிடுவதாக தெரிகிறது.

 

2014ல் நடந்த லோக்சபா தேர்தலின்போது மேற்கு வங்கத்தில் பாஜகவுக்கு மொத்தம் உள்ள 42 இடங்களில் 2 இடத்தில் மட்டுமே வெற்றிகிடைத்தது. அதேபோல ஒடிஷாவில் மொத்தம் உள்ள 21 இடங்களில் ஒரு தொகுதியில் மட்டுமே பாஜக ஜெயித்தது.

ஆனால் இந்தமுறை கூடுதல் லாபம் கிடைக்கும் என பாஜக கணக்கு போடுகிறது. அதை மனதில்வைத்துத்தான் இரு மாநிலங்களையும் மோடி, அமித் ஷாவுக்காக அது தேர்ந்தெடுத்திருப்பதாக சொல்லப் படுகிறது.

மோடி அனேகமாக ஒடிஷா மாநிலம் பூரிதொகுதியில் போட்டியிடக்கூடும் என்று சொல்கிறார்கள். தற்போது அவர் உறுப்பினராக இருக்கும் காசியைப் போலவே இதுவும் ஒருபுனித நகரம்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

அமித் ஷா கொல்கத்தா வடக்குதொகுதியில் போட்டியிடக் கூடும். இதுதவிர அசன்சோல் தொகுதியும்கூட பரிசீலனையில் உள்ளதாம். இந்த இரண்டு தொகுதிகளில் ஒன்றில் அமித்ஷா போட்டியிடலாம் என்று சொல்லப்படுகிறது.

 

கொல்கத்தா வடக்கு தொகுதியில் பெங்காலிகல் குறைவாம். அதாவது பெங்காலி அல்லாத இனத்தவர் இங்கு கணிசமானளவில் உள்ளனர். எனவேதான் அமித்ஷாவை இங்கு களம் இறக்க பாஜக திட்டமிட்டுள்ளதாம். மேலும் கடந்த 2014 தேர்தலில் இந்தத்தொகுதியில் பாஜகவுக்கு நல்ல வாக்குகள் கிடைத்தன.

 

2009 லோக்சபா தேர்தலில் கொல்கத்தா வடக்கு தொகுதியில் பாஜக 37,044 வாக்குகளுடன் 3வது இடத்தையே பிடித்தது. ஆனால் 2014 தேர்தலில் 26 சதவீத வாக்குகளுடன் 2வது இடத்தைப் பிடித்து அசத்தியது. சிபிஎம் வேட்பாளருக்கு 3வது இடமே கிடைத்தது. மறுபக்கம் அசன்சோல் தொகுதியில் கடந்த 2014 தேர்தலில் பாஜக யாரும் எதிர்பாராத வகையில் வெற்றிபெற்று அதிர வைத்தது நினைவிருக்கலாம்.

Leave a Reply

Your email address will not be published.