பிரான்ஸ் நாட்டின் தஸ் சால்ட் ஏவியேசன் நிறுவனத்திடம் இருந்து 126 ரபேல் போர்விமானங்கள் வாங்க இந்தியா விரும்பியது. 3 ஆண்டுகள் பேரம்பேசியும், விலை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளால் இதில் இறுதிமுடிவு எடுக்கப்படாமல் இருந்து வந்தது. 
 
இந்தநிலையில், பிரதமர் நரேந்திர மோடி  கடந்த ஆண்டு  பிரான்ஸ் சென்றார். அவர் அந்தநாட்டின் அதிபர் பிராங்கோயிஸ் ஹாலண்டேயை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது அவர், பிரான்சிடம் இருந்து இந்தியா நடுத்தரமானதும், பன்முக பயன்பாடு கொண்டதுமான 36 போர் விமானங்களை, பறக்கும்நிலையில் வாங்குவதாக உறுதி அளித்தார்.  
 
 
ரபேல் போர் விமானம் வாங்கும் ஒப்பந்தமானது கடந்த மேமாத இறுதியில் நிறைவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், விமானத்தின் விலையை குறைப்பது தொடர்பாக பிரான்சிடம் இந்தியா பேரத்தில் ஈடுபட்டுவந்தது.  முதலில் வெளியான டெண்டர்படி 65 ஆயிரம் கோடி என கூறப்பட்டது. இந்த விலையை 59 ஆயிரம் கோடி அளவுக்கு குறைக்க வேண்டும் என்று பிரான்சிடம் இந்தியா பேரம் பேசிவந்தது. இறுதியாக, 750 மில்லியன் யூரோக்களை மிச்சப்படுத்தும் வகையில் பேரம்பேசி முடிக்கப்பட்டது. 
 
இதையடுத்து, பிரான்ஸ் நாட்டிடம் இருந்து 7.84 பில்லியன் யூரோக்கள் விலையில் 36 நவீனரக ரபேல் போர் விமானங்களை வாங்கும் ஒப்பந்தத்தில் இந்தியா கையொப்பமிட்டது. 36 மாதங்களில் இருந்து 66 மாதங்களுக்குள் இந்தியாவிடம் ஒப்படைக்கப் படவுள்ள இந்த 36 ரபேல் போர்விமானங்களும் சக்திவாய்ந்த ஏவுகணைகளை சுமந்தபடி பாய்ந்துச்சென்று எதிரிகளின் இலக்குகளை தாக்கி அழிக்கும் ஆற்றல் மிக்கதாகும்.இந்தப் போர்விமானங்கள் இந்திய விமானப்படையின் தேவைக்கேற்ப வடிவமைத்து தரவும் பிரான்ஸ் நாட்டின் தஸ்சால்ட் ஏவியேசன் நிறுவனம் ஒப்பந்தத்தில் சம்மதித்துள்ளது.
 
இந்த ஒப்பந்தத்தில் இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் மனோகர்பாரிக்கரும், இந்தியாவுக்கு வருகை தந்துள்ள பிரான்சு பாதுகாப்புத்துறை அமைச்சர் ஜீன் ஒய்வேஸும் கையெழுத்திட்டனர்.

Leave a Reply