மேற்குவங்கத்தில் ரதயாத்திரை நடத்த கொல்கத்தா உயர் நீதிமன்ற பெஞ்ச் தடைவிதித்த நிலையில், அதை எதிர்த்து உச்சநீதிமன்ற விடுமுறை கால அமர்வில் பாரதிய ஜனதா மேல்முறையீடு செய்ய முடிவெடுத்துள்ளது.

2019 நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னர், மேற்குவங்கத்தில், 3 ரத யாத்திரைகளை நடத்த பாரதிய ஜனதா முடிவெடுத்தது. ஆனால், இந்த ரதயாத்திரையால், மத ரீதியாக கலவரங்கள் ஏற்படக்கூடும் என கூறி, மம்தா பேனர்ஜி தலைமையிலான அம்மாநில அரசு அனுமதி வழங்கவில்லை. இதுதொடர்பாக கொல்கத்தா உயர்நீதிமன்ற தனி நீதிபதி முன் தொடுக்கப்பட்ட வழக்கில் ரதயாத்திரையை நடத்தலாம் என உத்தரவிடப்பட்டது.

அதை எதிர்த்து அம்மாநில அரசு, உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அடங்கிய அமர்வின் முன் மேல்முறையீடு செய்தது. அதில், தனிநீதிபதியின் உத்தரவை தடைசெய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். வழக்கை தனி நீதிபதி மீண்டும் விசாரித்து, அம்மாநில உளவுத் துறையின் அறிக்கையை மறுபரிசீலனை செய்யுமாறு தலைமை நீதிபதி அமர்வுகூறியது.

இந்நிலையில், உயர் நீதிமன்ற அமர்வின் உத்தரவை, உச்ச நீதிமன்ற விடுமுறை கால அமர்வின் முன் மேல்முறையீடு செய்ய பாரதிய ஜனதா தலைமை முடிவெடுத்துள்ளது.

Leave a Reply