1. ஐ.மு.,கூட்டணி 126 ரபேல் விமானங்களை வாங்க முடிவுசெய்தது. மோடி அரசு 36 விமானங்களை மட்டுமேவாங்க முடிவு எடுத்தது ஏன்?


ப: மோடி அரசு பதவியேற்றபோது, ஒப்பந்தம் ரத்தாகும் நிலையில் இருந்தது. அதற்கு காரணம் இந்தியாவில் இந்த விமானத்தை உற்பத்தி செய்யும் விஷயத்தில் டசால்ட் மற்றும் ஹிந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் நிறுவனங்களிடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டு விட்டது. மற்றொரு புறம், இந்திய விமானப்படைக்கு அனுமதிக்கப்பட்ட படை பிரிவு எண்ணிக்கை, 42. ஆனால், 33 படை பிரிவுதான் செயல்பாட்டில் இருந்தன. தற்போது படைப்பிரிவு எண்ணிக்கை 31 ஆக குறைந்து விட்டது.


படைப்பிரிவு எண்ணிக்கை குறைந்து கொண்டே வருவதால், அவற்றை சரிகட்ட, விமானப்படைக்கு அவசரமாக போர் விமானங்கள் தேவைப்பட்டன. போர்விமான தொழில்நுட்ப பரிமாற்றம், உள்நாட்டில் உற்பத்தி செய்வது போன்ற விஷயங்களுடன் கூடிய ஒப்பந்தத்தை மேற்கொள்வது இந்தநேரத்தில் சரியாக தென்படவில்லை. இதன்படி ஒப்பந்தம் போட்டால், போர் விமானங்களை சப்ளை செய்ய பல ஆண்டுகள் ஆகும்.


மேலும், போர் விமானத்தை உற்பத்தி செய்யும் அளவுக்கு ஹிந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் நிறுவனம் தனது உள்கட்டமைப்பை மேம்படுத்தவேண்டி இருக்கும். இதற்கும் பல ஆண்டுகளாகும்.எனவே, பறக்கும் நிலையில் 36 விமானங்களை வாங்க மோடி அரசு முடிவு எடுத்தது. விமானப் படை கூடுதல் விமானங்களை வாங்க ஏற்கனவே நடவடிக்கை எடுத்து விட்டது. அந்தவிமானங்கள் இந்தியாவில் தான் உற்பத்தி செய்யப்பட உள்ளன. எனவே, அவசர தேவைக்கு 36 விமானங்கள் மட்டும் வாங்கினால் போதும் என்பது மோடி அரசின் முடிவை விளக்கும் வகையில் உள்ளது.


ரபேல் விமானத்தின் விலைஅதிகம். எனவே, 126 விமானங்கள் வாங்கும் அளவுக்கு மத்திய அரசுக்கு வசதி இருக்கிறதா என்ற கேள்வியும் எழுகிறது. ஐ.மு., கூட்டணி அரசில் ராணுவ அமைச்சராக இருந்த ஏ.கே.அந்தோணி, ஒரு முறை 126 விமானங்கள வாங்க அரசிடம் போதிய நிதி இல்லை என்றே குறிபிட்டு இருந்தார்.

2. இந்த ஒப்பந்தத்தில், ஹிந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் நிறுவனம் ஏன் இடம் பெறவில்லை


ப: இந்த ஒப்பந்ததில், ' மேக் இன் இந்தியா' என்ற இந்தியாவில் உற்பத்தி செய்யப்படவேண்டும் என்ற பிரிவு இடம் பெறவில்லை. எனவே, ஹிந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் நிறுவனம் ஒப்பந்தத்தில் இடம் பெறவில்லை. குறைந்த எண்ணிக்கையிலான போர் விமானங்களை உள்நாட்டில் உற்பத்திசெய்வது குறைந்த செலவில் நடைபெறாது என்பதால்தான் பறக்கும் நிலையில் விமானங்களை வாங்க மோடி அரசு முடிவு செய்துள்ளது.
இந்த ஒப்பந்தத்தில் ஹிந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் நிறுவனம் இடம் பெறவில்லை என்றாலும், டசால்ட் மற்றும் ரிலையன்ஸ் உள்ளிட்ட இந்தியாவின் தனியார் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுக்கு இடையேயான ஒப்பந்தத்தை நிறைவேற்றும் இடத்தில்தான் ஹிந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் நிறுவனம் உள்ளது.

ஐ.மு., கூட்டணி அரசில் இந்த ஒப்பந்தம் குறித்த பேச்சு வார்த்தை நடந்த போது அதில் இடம் பெற்ற விமான படை அதிகாரி,' டசால்ட் மற்றும் ஹிந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் நிறுவனம் இடையே தீர்க்க முடியாத அளவுக்கு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டதால்தான் ஒப்பந்தம் நிறைவேறாமல் போனது' என, கூறியுள்ளார்.

3. ரபேல் விமானத்தை அதிக விலைக்கு வாங்குவது நியாயமா?

பாதுகாப்புதுறை நிபுணர் அபிஜித் அய்யர் மித்ரா என்பவர்,' கத்தார் நாடு ஒரு ரபேல் விமானத்தை ரூ.2,044 கோடி என்ற விலைக்கு வாங்கிஉள்ளது. எகிப்து நிறுவனம், அதேவிமானத்தை ரூ.1,722 கோடி என்ற விலைக்கு வாங்கி உள்ளது. ஆனால், இந்திய அரசு ரூ.1,701 கோடி என்ற விலைக்குதான் வாங்க உள்ளது' என்று கூறியுள்ளார். எனவே, மற்ற நாடுகளை விட குறைந்த விலைக்கே இந்திய அரசு வாங்குகிறது என்பது தெளிவாகிறது.

இத்துடன், இந்திய அரசு போட்டுள்ள ஒப்பந்தத்தில், விமானசப்ளை மட்டும் அல்லாது அதற்கான பராமரிப்பு உதவி, ஆயுதங்கள், பயிற்சி மற்றும் கூடுதல் அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. விமான படை கேட்ட கூடுதல் அம்சங்கள் இடம் பெற்றுள்ளதால் விமானத்தின்விலை சற்று அதிகமாகி விட்டது. கத்தார் மற்றும் எகிப்து நாடுகள் வாங்கிய விமானங்களில் இந்த கூடுதல் அம்சங்கள் இல்லை. கூடுதல் அம்சங்களுடன் அந்த நாடுகளை விட குறைந்த விலைக்கு இந்தியா வாங்க உள்ளது.

இத்துடன் விமான விற்பனை மூலம் டாசல்ட் நிறுவனத்திற்கு கிடைக்க கூடிய வருவாயில் 50 சதவீத தொகை அதாவது ரூ.59 ஆயிரம் கோடியை இந்தியாவில் அந்தநிறுவனம் மறுமுதலீடு செய்ய வேண்டும் என ஒப்பந்தத்தில் ஒரு பிரிவு இடம் பெற்றுள்ளது. இது உள்நாட்டில் ராணுவ தளவாட பொருட்கள் உற்பத்தியை ஊக்குவிக்கும்.

இதுதவிர, ஐ.மு., கூட்டணி அரசு குறிப்பிட்ட விமானத்தின் விலை, பலஆண்டுகளுக்கு முந்தையது. தற்போதய பண வீக்கம், உற்பத்தி செலவு ஆகியவற்றை கணக்கில்கொண்டே விமானத்தின் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது என மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி விளக்கம் அளித்துள்ளார்.

4. ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் போது பாதுகாப்புக்கான அமைச்சரவைகுழு மற்றும் ராணுவ தளவாட கொள்முதல் தொடர்பான பிரிவுகளை கருத்தில் கொள்ளாமல் மோடி அரசு செயல்பட்டதா?

ப: ஐ.மு., கூட்டணி அரசு ஏற்படுத்திய ராணுவ தளவாடங்கள் கொள்முதல் நடைமுறைகள் – 2013ன்படிதான் இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. நாட்டின் பாதுகாப்பு தொடர்பான ஒப்பந்தங்கள் போடும்போது பாதுகாப்பு கையகப்படுத்துதல் கவுன்சில், பாதுகாப்பு கொள்முதல் வாரியம் மற்றும் அமைச்சரவை குழு ஒப்புதல் தேவையில்லை என ஐ.மு., கூட்டணி அரசு போட்ட உத்தரவில் கூறப்பட்டுள்ளது.


5. இந்த ஒப்பந்தத்தில் ரிலையன்ஸ் நிறுவனம் இடம் பெற்றது எப்படி? அனில் அம்பானியின் நிறுவனத்துக்கு சாதகமாக மோடி அரசு செயல்பட்டதா?

ப: காங்கிரஸ் கூறுவது போல், இந்த ஒப்பந்த்தில் ஹிந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் நிறுவனத்திற்கு பதிலாக ரிலையன்ஸ் நிறுவனம் இடம் பெறவில்லை. விமானத்தை உற்பத்தி செய்யும் டசால்ட் நிறுவனம் இந்தியாவில் தனது பங்குதார நிறுவனத்தை தேர்வு செய்யும் உரிமை கொண்டதாக உள்ளது. மேலும், ரிலையன்ஸ் மட்டுமே இந்த ஒப்பந்தத்தில் இடம் பெறவில்லை. பாதுகாப்பு ஆய்வு மற்றும் மேம்பாட்டு நிறுவனமான டி.ஆர்.டி.ஓ., ஹிந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் நிறுவனம் மற்றும் ஏராளமான தனியார் நிறுவனங்கள் இடம் பெற்றுள்ளன.

மோடி அரசு பதவிக்கு வருவதற்கு முன், டசால்ட் நிறுவனத்துடன் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனத்தின் தளவாடங்கள் பிரிவு டசால்ட் நிறுவனத்துடன் ஒப்பந்தம்போட்டு இருந்தது. ஆனால், 2014ம் ஆண்டுக்கு பிறகு முகேஷ் அம்பானி நிறுவனம் தளவாடங்கள் தொழிலில் ஈடுபடவில்லை.அவரது தம்பி அனில் அம்பானியின் நிறுவனம்தான் டசால்ட் நிறுவனத்துடன் தொடர்ந்து செயல்பட்டது. ஒருவேளை, 2012ல் இந்த ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டு இருந்தால் முகேஷ் அம்பானி நிறுவனம்தான் அதில் இடம் பெற்று இருக்கும். அப்போது மட்டும் தொழில் அதிபர்களுக்கு சாதகமாக அரசு செயல்படுகிறது என்ற குற்றச்சாட்டு எழாமல் இருந்திருக்குமா.


6. பிரான்ஸ் நாட்டின் முன்னாள் அதிபர் ஹாலண்டே, மோடி அரசை குற்றம் சாட்டுவது ஏன்?

ப: 2016ம் ஆண்டு ஜனவரியில் நடந்த குடியரசு தின விழாவில் பங்கேற்க ஹாலண்டே இந்தியாவிற்கு வந்தபோது தான் ரபேல் விமானம் வாங்குவதற்கான ஒப்பந்தம் போடப்பட்டது. அதற்கு இரண்டு நாள் கழித்து ஹாலண்டேவின் தோழி ஜூலி கேய்ட் நடத்திவரும் திரைப்பட நிறுவனத்துடன், அனில் அம்பானியின் ரிலையன்ஸ் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் ஒருஒப்பந்தம் போட்டது. இதன் மூலம் ஒருதிரைப்படம் எடுக்கவும் முடிவு செய்யப்பட்டது என கடந்த ஆகஸ்ட் மாதம் இந்திய நாளிதழ் ஒன்றில் செய்தி வெளியானது.


இந்த செய்தி, இந்தியாவில் மட்டுமல்ல பிரான்ஸ் நாட்டிலும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அதாவது திரைப்பட தயாரிப்புக்கு நிதிஉதவி அளிப்பது என்பது ஹாலண்டே பெற்ற லஞ்சபணமா என்ற கேள்வி பிரான்ஸ் நாட்டில் எழுந்தது. அப்போதுதான் இந்திய அரசு பரிந்துரையின் பேரில்தான் ரிலையன்ஸ் நிறுவனம் தேர்வு செய்யப்பட்டது. அதை விட்டால் எங்களுக்கு வேறு எந்தவாய்ப்பும் அளிக்கப்படவில்லை என ஹாலண்டே விளக்கம் அளித்தார்.

அதாவது தன்மீதான ஊழல் புகாரை மறுக்கும் வகையில், மோடி அரசு மீது பழியை சுமத்தினார். அவது குற்றச்சாட்டை பிரான்ஸ் அரசும், டசால்ட் நிறுவனமும் மறுத்துவிட்டன. இதன் பிறகேதான் முன்பு தெரிவித்த குற்றச்சாட்டுக்கு மாறாக, 'இந்த விஷயத்தில் டசால்ட் நிறுவனம் தான் கருத்து தெரிவிக்க முடியும்' என, ஹாலண்டே 'பல்டி' அடித்தார்.

நன்றி தினமலர்

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.