ரயில்வேயை தனியார் மயமாக்கும் திட்டம் எதுவும் மத்திய அரசிடம் இல்லை என்று ரயில்வே அமைச்சர் பியூஷ்கோயல் கூறியுள்ளார்.ரயில்வேயின் நான்காண்டு சாதனையை விளக்கி, டெல்லியில் நேற்று ரயில்வே அமைச்சர் பியூஷ்கோயல் அளித்த பேட்டி:ரயில்வேயை தனியார் மயமாக்கும் திட்டம், மத்திய அரசிடம் இல்லை. இப்பொழுது மட்டுமின்றி எதிர் காலத்திலும் தனியார் மயமாக்கப்படாது. ரயில்வேயின் தொழில்நுட்ப மேம்பாடு மற்றும் நவீனமயமாக்கல் போன்றவற்றிற்காக வெளிநாட்டு முதலீட்டை எதிர்நோக்கி சில நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகிறது. இத்தகைய நடவடிக்கைகளே, ரயில்வே தனியார் மயமாக்கப்படும் என்பதுபோன்ற பயத்தை ஏற்படுத்தியுள்ளது.

பாஜ அரசின் லட்சிய திட்டமான புல்லட் ரயில்திட்டம் விரைவில் செயல்பாட்டிற்கு வரும். இந்தியாவை பொருத்த வரையில்,புதிய திட்டங்களுக்கு முட்டுக்கட்டை எப்பொழுதும் வரும். ஆனால் பிரச்னைகளுக்கான தீர்வைகண்டு அதை தொடர்ந்து நடைமுறை படுத்த வேண்டியது அவசியம். கடந்த 2009 முதல் 2014 வரையில் நாளொன்றுக்கு 4.1 கிமீ ரயில்பாதை அமைக்கும்பணி நடைபெற்றது. ஆனால், பாஜ ஆட்சியில் கடந்த நான்கு ஆண்டுகளில் இது 6.53 கிமீ ஆக உயர்ந்துள்ளது.
கூடுதல் சுமைகளை கொண்டுவரும் பயணிகளிடம் வருவாய் ஈட்டுவது ரயில்வேயின் நோக்கமல்ல. ஆனால், ஒருகுடும்பத்தினர் அதிகமான சுமைகளை கொண்டு வந்தால் சக பயணிகளுக்கு சிரமம் ஏற்படும் என்றார்.இந்த கூட்டத்தில் ‘ரயில் மதாத்’, மற்றும் ‘மெனு ஆன் ரயில்ஸ்’ என்ற 2 மொபைல் செயலிகளை பியூஷ் தொடங்கி வைத்தார். இதன் மூலம், புகார்களை பதிவு செய்யலாம் மற்றும் ரயில்களில் வழங்கப்படும் உணவுகள் விலையை அறியலாம்.

Leave a Reply