உத்தரப்பிரதேசத்தில் கான்பூர் அருகே இந்தூர் – பாட்னா விரைவுரயில் தடம்புரண்ட விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 125-ஆக உயர்ந்துள்ளது என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பலத்த காயம டைந்துள்ள பலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப் படுகிறது. இந்நிலையில், மத்திய ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு சம்பவம் நிகழ்ந்த இடத்தை நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.

மத்தியபிரதேச மாநிலம் பாட்னா இடையே செல்லும் 22 பெட்டிகள்கொண்ட இந்தூர் – பாட்னா விரைவுரயில் நேற்று மதியம் 2 மணிக்கு இந்தூரில் இருந்து புறப்பட்டது. போபால், ஜான்சி, கான்பூர், லக்னோ, வாரணாசி வழியாக பாட்னா செல்லக்கூடிய இந்த ரயில், அதிகாலை 3 மணி அளவில் ரயில் கான்பூரை அடுத்த புர்கராயம் என்ற இடத்தில் திடீரென்று தடம்புரண்டு விபத்துக்குள்ளானது.  

ரயில் அப்போது வேகமாக சென்றுகொண்டு இருந்ததால் பெட்டிகள் ஒன்றுடன் ஒன்று மோதி தண்டவாளத்தை விட்டு விலகி ஓடி கவிழ்ந்தது. இதில் ரயிலின்14 பெட்டிகள் தடம்புரண்டன. இதில் ‘எஸ்1, எஸ்2, எஸ்3, எஸ்4' பெட்டி மிக மோசமான அளவுக்கு சேதம் அடைந்தது. அந்தப்பெட்டியில் இருந்த பலர் உயிரிழந்தனர்.

இதுவரை 125 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக தகவல்கள்வெளியாகி உள்ளது. 250 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் அனைவரும் அருகில் உள்ள பல்வேறு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளவர்களில் பலத்த காயமடைந்துள்ள 76 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. தொடர்ந்து ரயில்வே மீட்பு குழுவினர், போலீஸார் மற்றும் தீயமணைப்பு வீரர்கள், தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

காயம் அடைந்தவர்களை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் பணியில் 30 ஆம்புலன்ஸ்கள் மற்றும் தனியார் வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். காயமின்றி மீட்கப்பட்ட பயணிகள் சிறப்பு பேருந்துகள் மூலம் அவரவர் செல்லவேண்டிய ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றனர்.

 

ரயில் விபத்து குறித்து தகவல் அறிய இந்தூர், உஜ்ஜைன், ரத்லம், ஓராய், ஜான்ஷி, பொக்ரயான் ஆகிய ரயில் நிலையங்களில் தொலைபேசி உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. தேசிய பேரிடர் மீட்பு குழு, மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

உத்தரப்பிரதேச ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத் தினருக்கு நரேந்திர பிரதமர் மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் இரங்கல் தெரிவித்துள்ளார்.

விபத்து தொடர்பாக ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபுவுடன் பேசியதாகவும், மீட்புப்பணிகளை அவர் உன்னிப்பாக கவனித்து வருவதாகவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

விபத்து நிகழ்விடத்தில் மீட்பு பணிகளை மேற்கொள்ள தேசியபேரிடர் மீட்புப்படையை அனுப்ப உத்தரவிட்டிருப்பதாக மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், ரயில் விபத்துக்கான காரணம் என்ன என்பது குறித்து உடனடியாக தகவல் தெரியவில்லை. எதிர்பாராமல் நடந்த இந்தவிபத்தில் அனைத்து மீட்பு மற்றும் நிவாரண பணிகளும் வேகமாக நடைபெற்று வருகின்றன.

விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடந்த உத்தரவிட்டுள்ளதாகவும், விபத்து நிகழ்ந்த இடத்தில் ரயில்வே உயரதிகாரிகளும் அப்பகுதியைசேர்ந்த எம்பி, எம்எல்ஏக்களும் மீட்பு பணிகளை கவனித்து வருகின்றனர். மருத்துவ குழுவினர் சம்பவ இடத்திலேயே முகாமிட்டு காயம் அடைந்தவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளித்து வருகிறார்கள் என அமைச்சர் சுரேஷ் பிரபு தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் விபத்து நடந்த இடத்தினை மத்திய ரயில்வேதுறை அமைச்சர் சுரேஷ் பிரபு மாலை 7.30 மணியளவில் நேரில்சென்று ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.

120 பேரை பலி கொண்ட இந்த ரயில்விபத்து நாட்டு மக்களை பெரும்சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. தொடர்ந்து மீட்புப் பணிகளும், நிவாரண பணிகளும் வேகமாக நடைபெற்று வருகின்றன.

Leave a Reply