இருதினங்களுக்கு முன் ராகுல்காந்தி வெளியிட்ட கருத்துக்கு பதிலடி கொடுக்க நினைத்த பாஜக இளைஞர் அணித் தொண்டர்கள், அவருக்கு புதியகுர்தா ஆடையொன்றை அனுப்பி வைத்துள்ளனர்.

நேற்று முன்தினம் உத்தரகண்ட்டில் நடைபெற்ற ஒருகூட்டத்தில், தான் அணிந்திருந்த குர்தா ஆடையின் பைக்குள் கையை விட்டுத்தூக்கி அது கிழிந்திருப்பதை மக்கள் முன் காட்டிய ராகுல்காந்தி, “எனது ஆடை கிழிந்திருக்கிறது. அது பற்றி எனக்கு கவலையில்லை. ஆனால் ஏழைகளைப் பிரதிநிதித்துவம் செய்வதாக கூறிக்கொள்ளும் பிரதமர் மோடி ஒருபோதும் கிழிந்த ஆடையை அணியமாட்டார். அவர் ஏழைகளைப் பிரதிநிதித்துவம் செய்யவில்லை. ஏழைகளுடன் விளையாடுகிறார்” என்று தெரிவித்திருந்தார்.

ஆனால் எதிர்பாராத விதமாக அவரது இந்தக்கருத்து அவருக்கு எதிராகவே திரும்பியது.

ஓரிருநாட்களுக்கு முன்பாகவே வெளிநாட்டில் தனது விடுமுறையைக் கழித்து விட்டு வந்திருந்த ராகுல் காந்தியை சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சித்திருந்தனர்.

இந்நிலையில், பாஜக இளைஞரணி தொண்டர்கள் ஒருபடி மேலே போய், புதிய குர்தா ஆடையொன்றை ராகுல் காந்திக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

ராகுல் காந்தியின் சிறுபிள்ளைத் தனமான நடவடிக்கைகளுக்கு தகுந்தபாடம் கற்பிக்கவுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.