பிரதமருக்கு ஓய்வு அவசியம் என்று காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தி தெரிவித்த கருத்து மலிவானது என்று மத்திய அமைச்சர் வெங்கய்யநாயுடு விமர்சித்தார்.


உத்தரப் பிரதேசத்தில் அண்மையில் நடைபெற்ற தேர்தல்பிரசார கூட்டம் ஒன்றில் ராகுல்காந்தி பேசுகையில், ’நரேந்திர மோடி மிகவும் களைப்படைந்துள்ளார். அவரது சுமையை மாநில முதல்வர் அகிலேஷ்யாதவால் குறைக்க முடியும். மீண்டும் முதல்வராவதன் மூலம், பிரதமருக்கு சற்று ஓய்வுகொடுக்கவும் அவரால் முடியும்' என்று குறிப்பிட்டார்.


ராகுலின் இந்தக் கருத்துக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரும், மத்திய அமைச்சருமான வெங்கய்ய நாயுடு, தில்லியில் செய்தியாளர்களிடம் செவ்வாய்க் கிழமை கூறியதாவது:
நாட்டைவிட்டு வெளியேறுவது மற்றும் திடீரென்று அரசியல் களத்தில் இருந்து மாயமாகிவிடுவது என்ற தனது சொந்த அனுபவத்தின் அடிப்படையில் ஓய்வுகுறித்து ராகுல் பேசியிருக்கலாம். அவர் முக்கியமான விவாதங்களில் பங்கேற்பதற்குக்கூட நாடாளுமன்றத்துக்கு வருவதில்லை.


காங்கிரஸ் கட்சிதான் மிகவும் களைப்படைந்துவிட்டது. அதற்கு ஓய்வுகொடுக்க வேண்டும் என்று மக்கள் விரும்புகின்றனர். அதுதான் தற்போது நடைபெற்று வருகிறது. 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் அடையப் போகும் தோல்வி தொடர்பான தங்களின் விரக்தியை மூடி மறைப்பதற்காக இதுபோன்ற மலிவான கருத்துகளைத் தெரிவிக்கின்றனர்.


பிரதமர் நரேந்திர மோடி இரவுபகல் பாராமல் உழைக்கிறார். அவர் குறுகிய காலத்திலேயே 40 நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வந்துள்ளார். சர்வதேளவில் அவர் இந்தியர்களுக்காக ஆதரவு திரட்டியுள்ளார். உள்நாட்டில் அவர் பயணம் மேற்கொள்ளாத மாநிலமேஇல்லை. அவர்கவனம் செலுத்தாத பிரச்னையும் இல்லை.
காஷ்மீரை நாம் இழந்துவிட்டோம் என்று முன்னாள் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் கூறிய கருத்து விரும்பத்தகாதது.

நாட்டு மக்கள் இதனால் கொதிப்படைந்துள்ளனர். காஷ்மீர்மக்கள் நம்முடன் இணைந்து பணியாற்றி வருகின்றனர். காஷ்மீர் பண்டிட்டுகள் சிவராத்திரி பண்டிகையைக் கொண்டாடுவதற்கு முஸ்லிம்கள் உதவ முன் வந்துள்ளனர். முஸ்லிம்களே கோயிலைச் சுத்தப்படுத்திக் கொடுத்துள்ளனர்.காங்கிரஸ் கட்சியானது ஜாதீய, மதவாத, பிரிவினைவாத சக்திகளுடன் கூட்டணி அமைத்துள்ளது என்றார் வெங்கய்ய நாயுடு.

 

Leave a Reply