உத்தரப்பிரதேச சட்டசபைக்கு 7 கட்டமாக தேர்தல்நடக்கிறது. முதல் கட்டதேர்தல் வருகிற 11-ந் தேதி நடப்பதால் பிரசாரம் உச்ச கட்டத்தை எட்டியுள்ளது. காங்கிரஸ்-சமாஜ்வாடி கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து ராகுல்காந்தியும் அகிலேஷ் யாதவும் கூட்டாக பிரசாரம் செய்தார்கள்.

பா.ஜனதாவுக்கு ஆதரவாக பிரதமர் மோடி பிரசாரகளத்தில் குதித்தார். நேற்று அவர் 11-ந் தேதி தேர்தலைசந்திக்கும் மீரட்டில் நடந்த பிரமாண்ட கூட்டத்தில் பேசி ஆதரவு திரட்டினார்.

மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் நேற்று உத்தரப்பிரதேசத்தில் தேர்தல்பிரசாரத்தை தொடங்கினார். பதாயூனில் நடந்த பா.ஜ.க பிரசார கூட்டத்தில் ராஜ்நாத் சிங் பேசியதாவது:-

சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ் யாதவும், பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதியும் நல்லநாட்கள் எப்போது வரும் என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். வருகிற சட்ட சபை தேர்தலில் இந்த இருகட்சிகளும் தோற்கடிக்கப்பட்டால் தான் உத்தரப்பிரதேசத்துக்கு நல்ல நாள் வரும்.

மத்தியில் பா.ஜனதா ஆட்சிக்குவந்து 3 ஆண்டுகள் ஆகப்போகிறது. ஆனால் பா.ஜனதா தலைவர்கள் ஒருவர் மீது கூட ஊழல்குற்றச்சாட்டு இல்லை.

காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி ரூபாய் நோட்டு வாபஸ் விவகாரம் தொடர்பாக பாராளுமன்றத்தில் தன்னை பேச அனுமதித்தால் பூகம்பம்வரும் என்றார். ஆனால் அவர் பேசினால் பூகம்பம் அல்ல, காற்றுகூட வராது. தன்னிடம் ஏதாவது உருப்படியான தகவல்கள் இருந்தால் ராகுல் காந்தி தாராளமாக பேசலாம்.

முலாயம் சிங் யாதவ் தனது கடினமான உழைப்பால் சமாஜ்வாடி கட்சியை நிறுவினார். அவர் காங்கிரஸ் – சமாஜ்வாடி கூட்டணியை எதிர்க்கிறார். ஆனால் அவரது மகன் அகிலேஷ்யாதவ் பஞ்சரான சைக்கிளை வைத்துக் கொண்டு காங்கிரசுடன் கை கோர்த்துள்ளார். மாநிலத்தில் கூலிப் படையினரின் ஆதிக்கத்தை ஒடுக்க வேண்டுமானால் பா.ஜனதா வுக்கு ஓட்டுப்போடுங்கள் இவ்வாறு ராஜ்நாத்சிங் பேசினார்.

Leave a Reply