பிரதமர் மோடியை பொதுமக்கள் கம்புகொண்டு அடித்து விரட்டுவர் என ராகுல் பேசியது மட்டும் சரியா என காங்., கட்சிக்கு, பா.ஜ., மூத்த தலைவரும், மத்திய அமைச்சருமான ரவிசங்கர்பிரசாத் கேள்வி எழுப்பி உள்ளார்.

இந்தியாவில் வாட்ஸ்அப், பேஸ்புக்கை பா.ஜ., மற்றும் ஆர்.எஸ்.எஸ்., கட்டுப்படுத்துவதாக காங்., எம்.பி., ராகுல் குற்றச்சாட்டியுள்ளார். மேலும், அவர் தனது டுவிட்டர் பதிவில், சமூகவலைதளங்களில் போலி செய்திகளை பரப்பி வாக்காளர்களிடம் தாக்கத்தை ஏற்படுத்த முயற்சி செய்வதாகவும், பேஸ்புக்கின் உண்மை நிலையை அமெரிக்க ஊடகங்கள் வெளிக்கொண்டு வந்துள்ளன என்றும் பதிவிட்டுள்ளார். இது குறித்து விளக்கமளித்துள்ள பேஸ்புக், ராகுலின் குற்றச்சாட்டை திட்டவட்டமாக மறுத்துள்ளது.

இந்தநிலையில் இந்தியாவின் தேர்தல் ஜனநாயகத்தில் பேஸ்புக் இந்தியாநிர்வாகம் தலையிடுவது குறித்தும், அதன் செயல்பாடுகள் குறித்தும் விசாரணை நடத்த வேண்டும் என, பேஸ்புக் நிறுவனத்தின் சிஇஓ மார்க் ஜுக்கர்பர்கிற்கு காங்., கட்சி கடிதம் எழுதியுள்ளது. இதற்கு பா.ஜ., கடும்கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறியதாவது: காங்., தலைவர் சோனியாவும், ராகுலும் பிரதமர் மோடியை கடந்தகாலங்களில் கடுமையாக விமர்சித்துள்ளனர். பிரதமர் மோடியை பொதுமக்கள் கம்புகொண்டு அடித்து விரட்டுவார்கள் என ராகுல் பேசியுள்ளார். இது வெறுப்புபேச்சு இல்லையா என்பதை காங்., தெளிவுபடுத்த வேண்டும். பிறகட்சி தலைவர்களை தரக்குறைவாக விமர்சித்து வரும் காங்., தலைவர்களுக்கு இதுகுறித்து புகார் அளிக்க எந்த தகுதியும் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.

Comments are closed.