ஊழலையும், கருப்புப் பணத்தையும் ஒழிக்கும் வகையில், ரொக்கப்பண பரிமாற்றம் இல்லாத சமுதாய அமைப்பை (கேஷ் லெஸ் சொசைட்டி) உருவாக்குவதே அரசின் நோக்கம் என அண்மையில் பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.


நமது அன்றாட ரொக்கப் பரிமாற்றங்களைக் குறைத்துக் கொண்டு, மின்னணு பணப் பரிமாற்றங்களை தொடங்குவதன் மூலமும், பிளாஸ்டிக் பணம் (அதாவது கடன் அட்டைகள், டெபிட் கார்டுகள் போன்றவை) மூலமும் இந்த இலக்கை நிச்சயமாக அடைய முடியும்.


சில்லறை அளவிலும் (ரீடெய்ல்) மொத்த அளவிலும் பணம் இல்லா பரிமாற்றம் செய்து கொள்ளுவதற்கு தேவையான நிதி மற்றும் மின்னணு கட்டமைப்பு நம் கைவசம் இருப்பதால் மேற்கூறிய மாற்றத்தைக் கொண்டு வருவது நிச்சயம் சாத்தியமே.


சமீப காலமாக எல்லா இடங்களிலும் "பே டிஎம்', "இ-வேலட்' போன்ற சொற்களை நாம் அதிகமாக கேட்க முடிகிறது. சில்லறை அளவில் காய்கறி வியாபாரிகளுக்கும், சிறிய சிற்றுண்டி நிலையங்களிலும், நாம் தர வேண்டிய சிறிய தொகையைக் கொடுப்பதற்கு பயன்படும் மின்னணு பணப் பரிமாற்ற சாதனங்கள் தான் 'Pay tm' போன்றவை.
இது எப்படி பயன்படுகிறது என்பதைப் பார்ப்பதற்கு முன், நம் நாட்டில் பணமில்லா பரிமாற்ற முறை எப்படித் தோன்றி, வேகமாக வளர்ந்து வருகிறது என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டியது அவசியம்.


பணமில்லா பரிமாற்றத்தின் முன்னோடி கடன் அட்டைகள் (கிரெடிட் கார்டு) தான். தேசிய மயமாக்கப்பட்ட வங்கியான சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா முதன் முதலில், இந்தியாவிலேயே வடிவமைக்கப்பட்டு, ஒரு தேசிய வங்கியால் செயல்படுத்தப்பட்ட, கிரெடிட் கார்டை (சென்ட்ரல் கார்டு) 1980-இல் அறிமுகம் செய்தது.


அதற்கு முன்பு வெளிநாட்டு "டைனர்ஸ் கிளப்' கார்டுதான் இருந்தது. அப்போது, நான் அந்த வங்கியின் மும்பை தலைமை அலுவலகத்தில் பணிபுரிந்ததால் எனக்கு ஒரு கிரெடிட் கார்டு வழங்கப்பட்டது! நான் கையிலிருந்த கிரெடிட் கார்டைப் பார்த்து, "இது எந்த அளவு நடுத்தர மக்களிடம் வரவேற்பு பெரும் என்று வியந்தேன்.
ஆனால், அடுத்த சில வருடங்களில், மேலும் சில அரசுடமை வங்கிகளும், பாரத ஸ்டேட் வங்கியும் தங்கள் கிரெடிட் கார்டுகளை அறிமுகம் செய்தன.


இன்று நம் நாட்டில் 80 கோடி கடன் அட்டைகளும், பண அட்டைகளும் புழக்கத்தில் உள்ளன. அது மட்டுமல்ல. ஒருவரே பல வங்கிகளின் கடன் அட்டைகளையும் வைத்துள்ளனர்.அதேபோல், 2000-ஆம் ஆண்டுகளில் அறிமுகம் ஆன ஏ.டி.எம். அட்டைகள் சுமார் இரண்டு லட்சத்து இருபது ஆயிரம் புழக்கத்தில் உள்ளன.


நம் நாட்டில், சில்லறை அளவிலான பணப் பட்டுவாடா நடைமுறைகளை ஒரே குடையின் கீழ் கொண்டு வருவதற்கும், ரொக்கப் பணப் பரிமாற்றத்தைக் குறைத்து, மின்னணு பணப் பரிமாற்றத்தை அதிகரிப்பதற்காகவும் பாரத ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதலின் பேரில் இந்திய வங்கிகள் சங்கத்தால் (இண்டியன் பேங்ஸ் அசோசியேஷன்) நேஷனல் பேமெண்ட்ஸ் கார்பரேஷன் ஆஃப் இந்தியா (என்.பி.சி.ஐ.) நிறுவப்பட்டது.


சில ஆண்டுகள் முன்பு வரை நாம் நினைத்துக் கூட பார்க்க முடியாத மாற்றங்கள், நம் நாட்டில் பணப் பரிமாற்றம்,
பணமில்லா பரிமாற்றம் ஆகியவற்றில் நிகழ்ந்துள்ளன. உதாரணமாக ஐ.எம்.பி.எஸ். (இம்மீடியட் பேமெண்ட் சர்வீஸ்) மூலம் குறைந்த செலவில், சில்லறை அளவில், உடனடியாக நடைபெறும் பரிமாற்றம். இதன்மூலம், வாடிக்கையாளர்கள், ஒரு தனிநபருக்கோ, சிறு அல்லது பெரு வியாபாரிக்கோ, சிறிய அல்லது பெரிய தொகையை, உள்ளூரில் அல்லது வெளியூரில் பட்டுவாடா செய்யலாம். ஆண்டு முழுவதும், எல்லா நாட்களிலும், இரவு, பகல் எந்த நேரத்திலும் பரிமாற்றம் செய்யலாம்.


இந்த முறையை நேஷனல் பேமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா 2010 ஆண்டு அறிமுகம் செய்தது. இந்தப் பரிமாற்றத்தை, செல்லிடப்பேசி (மொபைல் ஃபோன்) அல்லது வங்கிக் கணக்கு அல்லது ஆதார் எண் மூலம் எளிதாகச் செய்திட முடியும். செல்லிடப்பேசி, இணையதளம், ஏ.டி.எம். மூலம் பரிமாற்றம் செய்யலாம். எனவே வங்கி வாடிக்கையாளர்கள் மட்டும் அல்லாமல், வங்கி அல்லாத நிறுவனங்களின் வாடிக்கையாளர்களும் (அதாவது ரிசர்வ் வங்கியின் அனுமதிக்கப்பட்ட பிரீபெயிடு சாதனங்கள் வழங்கும் நிறுவனங்கள் மூலம்) ஐ.எம்.பி.எஸ். பரிமாற்றம் செய்யலாம்.


இந்த நடைமுறை முற்றிலும் பாதுகாப்பானது. கணக்கில் வைக்கப்படும் பற்று அல்லது வரவு உடனுக்குடன் குறுஞ்செய்தி (S.M.S.) மூலம் வாடிக்கையாளருக்கு தெரிவிக்கப்பட்டு விடும். நம் கணக்கிலிருந்து பயணச்சீட்டு வாங்குதல், பொருள்கள் வாங்குதல், கடன் அட்டையில் பட்டுவாடா செய்தல், பள்ளி, கல்லூரிகளுக்கு கட்டணம் செலுத்துதல், மருத்துவமனைக்கு பணம் செலுத்துதல், கணினி மூலம் (ஆன்லைனில்) பொருள் வாங்குதல் என அன்றாடம் நாம் மேற்கொள்ளும் பணப் பரிவர்த்தனைக்கு ஐ.எம்.பி.எஸ். கை கொடுக்கிறது.


இது எப்படி செயல்படுத்தப்படுகிறது, சாதாரண மக்கள் இதைப் பயன்படுத்த முடியுமா என்று ஐயங்கள் எழலாம். நிச்சயமாக முடியும். காரணம், நடைமுறை எளிதானது. ஒருவர் மொபைல் போனைப் பயன்படுத்தி பணம் செலுத்துகிறார் என்று வைத்துக் கொள்வோம். அவர் தனது மொபைல் எண்ணை வங்கியில் பதிவு செய்து கொள்ள வேண்டும். எம்.எம்.ஐ.டி., எம்.பின். (M-Pin)ஐ பணம் அனுப்புபவருக்கு வங்கி வழங்குகிறது. தேவையான நடைமுறை விபரங்களை வங்கி வாடிக்கையாளருக்கு விளக்கவும் செய்கிறது.


M.M.I.D. எண் என்பது ஏழு இலக்கம் கொண்ட Mobile Money Identifier என்கிற அடையாள எண். இது பயனாளியின் விபரங்களை அறிந்து கொள்ள உதவுகிறது. பணம் பெறுபவர் வங்கியிலிருந்து M.M.I.D.ஐ பெற்றுக் கொண்டு பணம் அனுப்புபவருக்கு அதை தெரிவிக்க வேண்டும். அல்லது பணம் பெறுபவர் தனது வங்கிக் கணக்கு எண் I.F.S. Code (Indian Financial System) குறியீடு அல்லது ஆதார் எண்ணை பணம் அனுப்புபவருக்கு தெரிவிக்க வேண்டும்.
பணம் அனுப்புபவர் ஸ்மார்ட் போன், சாதாரண மொபைல் ஃபோன், இணையதளம், ஏ.டி.எம். என எந்த சாதனத்தை வேண்டுமானாலும் பரிமாற்றத்துக்கு பயன்படுத்தலாம்.


பணம் அனுப்புபவர், யாருக்கு பணம் செலுத்துகிறாரோ அவரது விவரங்களைப் பதிவு செய்கிறார். அதாவது M.M.I.D.,மொபைல் எண், அல்லது வங்கிக் கணக்கு எண், I.F.S. code அல்லது ஆதார் எண், அனுப்ப வேண்டிய தொகை, அனுப்புபவரது M-Pin ஆகிய விபரங்களைப் பதிவு செய்ய வேண்டும்.÷பணம் அனுப்புபவர், பணம் பெறுபவர் ஆகிய இருவருக்கும் குறுஞ் செய்தி அனுப்பப்படுகிறது.÷யாருக்குப் பணம் அனுப்புகிறோமோ அவரது ஆதார் எண் அவரது வங்கிக் கணக்கில் பதிவு செய்யப்பட்டிருந்தால், அதைப் பயன்படுத்தி, IMPS மூலம் அவருக்குப் பணம் அனுப்ப முடியும்."ரூ பே' டெபிட் கார்டுகளை எல்லா ஏ.டி.எம்.களிலும் பயன்படுத்தி பணம் பெறலாம்.
அதுமட்டும் அல்லாமல், நாட்டில் உள்ள PoS (Points of Sales) விற்பனை யூனிட்களில் 95 சதவிகித PoSகளில், அதாவது சிறு வியாபார நிலையங்களில், ரூ பே கார்டு ஏற்றுக் கொள்ளப்படுகிறது. அங்கு நாம் பொருள்கள் அல்லது தேவையான சேவைகளைப் பெற்றுக் கொள்ளலாம்.


இதற்கான வழிமுறை என்னவெனில், முதலில் கார்ட்டை நாம் swipe (ஸ்வைப்) அல்லது Dip செய்தல்; பிறகு வியாபாரி பணம் எவ்வளவு என்பதை பதிவு செய்வார்; அடுத்து, நாம் ரகசிய எண்ணைப் (PIN) பதிவு செய்வோம்; (PIN) மிகவும் ரகசியமானது என்று சொல்லத் தேவை இல்லை) நிறைவாக, நாம் கையெழுத்து இட வேண்டும்.
நாம் மின்னணு பணப் பரிமாற்றங்களைப் பழகிக் கொள்வதற்கு இதுவே சரியான தருணம். மேற்கூறியவை தவிர, சிறிய தொகைகளுக்குப் பொருள்கள் வாங்குவதற்கும், சேவைகளைப் பெறுவதற்கும், சிற்றுண்டி அருந்துதல், தேநீர் பருகுதல் போன்றவற்றுக்கும் வசதியாக 'Pay tm', 'Mobikwik', 'Ola Money' உள்ளிட்ட சாதனங்களை எளிதாகப் பயன்படுத்தலாம்.


இவற்றுக்குப் பொதுவாக, E-Wallet  என்கிறார்கள். நம் கையில் இருக்கும் மொபைலில் குறிப்பிட்ட "பிராண்டு' e-wallet சாதனத்தின் appஐ பதிவிறக்கம் செய்து பணம் இல்லா பரிமாற்றம் செய்து கொள்ளலாம். பொதுமக்களிடையே மொபைல் போன் பயன்படுத்தும் பழக்கம் அபரிமிதமாக அதிகரித்திருப்பதால், இந்த முறைகளை கையாளுவதில் சிரமம் இருக்காது.


÷பெருநகரங்களில் மருத்துமனைகள், நெடுஞ்சாலைகளில் சுங்கச்சாவடிகளிலும் மிகப்பெரிய அளவில் PoS யூனிட்கள் பயன்படுத்தப்படுகின்றன.÷தற்போது, 10 கோடி மக்கள் இந்த வழிமுறைகளைப் பயன்படுத்துவதாக செய்திகள் கூறுகின்றன.÷ரொக்கப்பண பரிமாற்றத்தை கணிசமாகக் குறைப்பதற்கு இந்த உத்திகள் உதவும். ரொக்கப்பண பரிமாற்றம் எந்த அளவு குறைகிறதோ அந்த அளவு கருப்புப் பணத்தைக் குறைக்க முடியும் என்பதில் இருவேறு கருத்துகள் இல்லை.÷எப்படி நம் நாட்டில், கடன் அட்டைகள், ஏ.டி.எம். அட்டைகள் சில வருடங்களிலேயே அசுர வேகத்தில் நகரங்கள் முதல் கிராமங்கள் வரை பரவியதோ அதேபோல், மின்னணு பணப் பரிமாற்ற சாதனங்களின் பயன்பாடும், வெகு வேகமாக அதிகரிக்கும், கருப்புப் பணம் நாட்டிலிருந்து முற்றாக நீக்கப்படும்.

கட்டுரையாளர்:
வங்கி அதிகாரி (ஓய்வு)

nandri

Tags:

Leave a Reply