காவிரி மேலாண்மை வாரியம் சட்டப் பூர்வமாக கொண்டு வரப்படும் என்று தஞ்சையில் சி.பி.ராதாகிருஷ்ணன் கூறினார்.

மத்திய கயிறுவாரிய தலைவரும், பாஜக. தேசிய செயற்குழு உறுப்பினருமான சி.பி.ராதாகிருஷ்ணன் தஞ்சையில் நிருபர்களிடம் கூறியதாவது:–

பிரதமர் மோடியின் அதிரடி நடவடிக்கையால் இந்தியாவில் பதுக்கிவைக்கப்பட்டுள்ள அத்தனை கருப்பு பணத்தையும் ஒரே நாளில் வெறும் காகிதமாக மாற்றிக்காட்டி உள்ளார். அதை பொறுக்கமுடியாத பணமுதலைகள் இதற்கு எதிராக பேசுகிறார்கள். லஞ்சம் வாங்கி பணம் சேர்த்து வைத்தவர்கள் இதனால் கதிகலங்கி போய் உள்ளனர். தி.மு.க. தலைவர் கருணாநிதி, வங்கி பணம் 2 கண்டெய்னர்களில் பிடிக்கப்பட்டபோது அது யாருடையது என நீதிமன்றத்துக்கு சென்றார்.

ஆனால் இப்போது பதுக்கி வைக்கப்பட்ட கருப்பு பணம் பிடிக்கப்படாமல் அழிக்கப்பட்டுள்ளது. இதனால் ஏழைகள் யாரும் பாதிக்கப்படவில்லை. தவறு எந்தரூபத்தில் வந்தாலும் மத்திய அரசு அதனை தடுக்கும். கோவை மாவட்டத்தில் மட்டும் தபால் நிலையங்களில் ரூ.36 கோடி மாற்றப்பட்டுள்ளது. இதனை பார்க்கும்போது ஏழைகள் எங்கே பாதிக்கப்பட்டுள்ளனர். பணத்தை பதுக்கிவைத்தவர்கள் தான் பதறுகிறார்கள். ஏழை, நடுத்தர வர்க்க மக்களை காப்பாற்றத்தான் இந்த நடவடிக்கை. மக்கள் நியாயமாக சம்பாதித்த பணத்தை மாற்றத்தான் கைவிரலில் மை வைக்கப்படுகிறது.

ஜல்லிக்கட்டு பாரம்பரிய விளையாட்டு. கடந்த ஆட்சிக் காலத்தில் இருந்தவர்கள் அதனை காப்பாற்றாமல் விட்டு விட்டனர். மத்தியமந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் ஜல்லிக்கட்டை நடத்த முயற்சி எடுத்துவருகிறது. அவரின் முயற்சிக்கு தமிழக பாஜக துணை நிற்கிறது. ஜல்லிக்கட்டு நடத்த அனைத்து முயற்சியும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மத்தியில் பாஜக ஆட்சிபொறுப்பேற்ற பின்னர் தமிழக மீனவர்கள், இலங்கை ராணுவத்தினரால் சுட்டுக்கொல்லப்படுவது தடுக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டவர்களும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். ஆனால் மீனவர்கள் விடுதலை செய்யும்போது இங்கு ஆட்சியில் இருப்பவர்கள் தாங்கள் செய்ததுபோல் போலியான கணக்கு காட்டப்படுகிறது.

பிரதமர் மோடியின் கரங்களில்தான் ஈழத்தமிழர்கள், மீனவர்கள் நலன் உள்ளது. பலமுறை மத்திய அரசு, இலங்கை ராணுவம் வரம்புமீறியதை கண்டித்துள்ளது. இனி தமிழக மீனவர்கள் மீது இலங்கை ராணுவம் துப்பாக்கிசூடு நடத்தவது நடைபெறாமல் தடுக்கப்படும். காவிரிமேலாண்மை வாரியம் சட்டப்பூர்வமாக வரும். தமிழர்களின் உரிமை மறுக்கப்படாத வகையில் மேலாண்மை வாரியத்தை அமைக்க மோடி நடவடிக்கை எடுத்து வருகிறார்.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply