லண்டன் அருங் காட்சியகத்தில் பிரதமர் மோடியின் மெழுகுசிலை அடுத்தமாதம் திறந்து வைக்கப்படுகிறது.
இது குறித்து அருங்காட்சியக செய்தித் தொடர்பாளர் கீரண் லான்சினி கூறும்போது, “இந்திய பிரதமர் மோடி உலகரசியலில் முக்கிய நபராக விளங்குகிறார். டைம் இதழின் சிறந்த மனிதர்கள்பட்டியலில் (2015) மோடி 10-ம் இடத்தில் உள்ளார்” என்றார்.
மேடம் டுசாட்ஸ் அருங்காட்சியகத்தின் கலைஞர்கள் இந்தஆண்டு தொடக்கத்தில் டெல்லி வந்திருந்தனர். அப்போது பிரதமர் மோடியை சந்தித்து மெழுகுசிலை தயாரிப்பு குறித்து ஆலோசனை நடத்தினர்.
இதுகுறித்து மோடி கூறும்போது, “மேடம் டுசாட்ஸ் அருங்காட்சியகம் மிகவும் பிரபலமான உலகத் தலைவர்களுக்கு மெழுகுசிலை வைத்துள்ளது. அந்த வரிசையில் எனது சிலை இடம்பெறுவதற்கு எந்தவகையில் நான் தகுதியானவன் என்று தெரியவில்லை” என்றார்.
மோடியின் மெழுகுசிலை, அவருக்கு மிகவும்பிடித்த கிரீம் வண்ண குர்தாவுடன் ஜாக்கெட் அணிந்தபடி வடிவமைக்கப்பட்டு வருகிறது. சிங்கப்பூர், ஹாங்காங், பாங்காக் உள்ளிட்ட நகரங்களில் அமைந்துள்ள மேடம் டுசாட்ஸ் அருங்காட்சியகத்தின் கிளைகளிலும் மோடியின்சிலை இடம் பெறும்.
உலகப்புகழ்பெற்ற மேடம் டுசாட்ஸ் அருங்காட்சியகத்தில் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, இந்தி நடிகர்களான ரித்திக்ரோஷன், அமிதாப் பச்சன், மாதுரி தீட்சித், சல்மான்கான், ஐஸ்வர்யா ராய் பச்சன், கத்ரினா கைப் உள்ளிட்டோரின் சிலைகளும் இடம்பெற்றுள்ளன.