குஜராத் மாநிலம் வதோதராவில், நாட்டின் முதல் ரயில்வேபல்கலையை அமைக்க திட்டமிட்டுள்ளதாக, பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.

குஜராத்தில், முதல்வர் விஜய்ரூபானி தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்குள்ள வதோதரா விமான நிலையத்தில், ஒருங்கிணைந்த முனையகட்டடத்தை, பிரதமர் நரேந்திரமோடி, துவங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில், பிரதமர் மோடி பேசியதாவது: நாட்டின் வளர்ச்சிக்கு, விமானபோக்குவரத்தை அதிகரிப்பது மிகவும் அவசியம். தற்போது, நம் நாட்டில் உள்ள விமான நிலையங்களின் மூலம் வேகமான வளர்ச்சியை அடைய முடியாது.

இதற்குமுன், மத்தியில் ஆட்சிசெய்த காங்., தலைமையிலான அரசு, நாட்டின் வளர்ச்சியில் அக்கறை செலுத்தவில்லை. இரண்டாம் மற்றும் மூன்றாம் தர நகரங்களில், விமானசேவையை துவக்குவதன் மூலம், நாட்டின் சுற்றுலாதுறை மேம்படும்; தொழில்வளர்ச்சியும் அதிகரிக்கும்.

எனவே, நாட்டின் அனைத்து பகுதிகளிலும், விமானசேவையை பரவலாக்கும் முயற்சி மேற்கொள்ளப் பட்டுள்ளது. இதன் மூலம், இந்ததுறையில் வேலை வாய்ப்பு அதிகரிக்கும்.

கேரள மாநிலம் கொச்சிக்கு அடுத்தபடியாக, வதோதரா விமானநிலையம் நாட்டின் இரண்டாவது பசுமை விமான நிலையமாக அமைந்துள்ளது; இது, மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.நாட்டின் வளர்ச்சிக்கு, ரயில்வே துறையையும் மேம்படுத்தவேண்டியது அவசியம். அதன் ஒருபகுதியாக, நாட்டின் முதல் ரயில்வே பல்கலை கழகத்தை, வதோதராவில் அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது; விரைவில், அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் இவ்வாறு அவர் பேசினார்.

Leave a Reply