வனங்களில் வசித்து வருபவர்களின் நலன்களைக்காக்க புதிய வனச்சட்டம் தேவை என்று மத்திய சுற்றுச்சூழல் துறை இணை அமைச்சர் அனில் மாதவ் தவே வலியுறுத்தியுள்ளார்.


தில்லியில் இந்திய தொழிலக கூட்டமைப்பு (சிஐஐ) சார்பில் புதன் கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்றவர் கூறியதாவது: புதியனவற்றை கண்டுபிடிப்பது என்பது இந்தியாவின் மரபணு விலேயே அமைந்தது. கொள்கைகளை வகுக்கும் அதிகாரத்தில் இருப்பவர்கள் இந்தியாவை முழுமையாக புரிந்துகொண்டு அதற்கு ஏற்ப புதியகொள்கைகளை வடிவமைக்க வேண்டும்.


இந்தியாவில் இப்போதுள்ள வனச்சட்டம் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் அமைக்கப்பட்டது. தங்களுக்கு எதிராக புரட்சிசெய்பவர்கள் காடுகளில் தஞ்சமடைவார்கள் என்பதால் அதற்கு ஏற்ப அவர்கள் சட்டம் இயற்றினர். ஆனால், இப்போது சுதந்திர இந்தியாவுக்கு ஏற்ப புதிய வனச்சட்டத்தை இயற்றவேண்டும். காடுகளில் வசிப்பவர்கள்தான் மரத்தைவெட்டி, மனிதர்களுக்கும், விலங்குகளுக்கும் இடையே மோதலை உருவாக்குகிறார்கள் என்பது தவறு. வனங்களில் வசிப்பவர்களும், மலை வாழ் மக்களும் பல்லாயிரம் ஆண்டுகளாக அங்கேயேதான் வசித்து வருகின்றனர்.


சுதந்திரமடைந்து 65 ஆண்டுகளாகியும் நம்மால் வல்லரசாக முடிய வில்லை. ஆட்சியில் இருந்தவர்கள் இந்தியாவை முழுமையாகப் புரிந்துகொண்டு கொள்கைகளை வகுக்காததுதான் இதற்குக் காரணம். தொழில்நுட்பங்களை நாம் வெளியே இருந்து கொண்டு வரலாம். அவற்றை நமது நாட்டின் தேவைக்கு ஏற்ப பயன்படுத்தவேண்டும் என்றார் தவே.

Leave a Reply