வரவுசெலவு கணக்கை தாக்கல்செய்யாத தொண்டு நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

நாடுமுழுவதும் இயங்கிவரும் பல்வேறு தொண்டு நிறுவனங்கள், ஆண்டுதோறும் தங்கள் வரவுசெலவு கணக்கை தாக்கல்செய்யுமாறு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. ஆனால் சுமார் 30 லட்சம் பதிவுசெய்யப்பட்ட தொண்டு நிறுவனங்களில், 10 சதவீதத்துக்கும் குறைவானவையே வரவுசெலவை தாக்கல் செய்துவருகின்றன.

இந்த தொண்டு நிறுவனங்களை ஒழுங்கு படுத்தும் பணிகளை மத்திய உள்துறை அமைச்சகம் மேற்கொண்டு வருகிறது. இதன் ஒருபகுதியாக கடந்த 2 ஆண்டுகளாக வரவு–செலவு கணக்கு தாக்கல் செய்யாத 15 ஆயிரம் தொண்டு நிறுவனங்களின், வெளிநாட்டு நிதி ஒழுங்குபடுத்தும் சட்டத்தின் கீழ் உள்ள பதிவை ரத்து செய்தது.

இதைத் தொடர்ந்து வரவு–செலவு கணக்குகளை தாக்கல்செய்யாத தொண்டு நிறுவனங்களுக்கு மத்திய அரசு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. அத்துடன் இப்படிப்பட்ட தொண்டு நிறுவனங்களுக்கு விதிக்கப்படும் அபராததொகை தொடர்பாக உள்துறை அமைச்சகம் அறிவிப்பு ஒன்றும் வெளியிட்டுள்ளது.

அதன்படி தொடர்ந்து 2 ஆண்டுகளுக்கும் மேலாக தங்கள் வரவுசெலவு கணக்கை தாக்கல்செய்யாத தொண்டு நிறுவனங்களுக்கு, அந்த நிறுவனங்கள் பெற்ற வெளிநாட்டு நிதியில் 10 சதவீதம் அல்லது ரூ.10 லட்சம் இவற்றில் எது குறைவோ அந்ததொகை அபராதமாக விதிக்கப்படும்.

மேலும் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 31–ந் தேதிக்குப்பின் ஓராண்டு முதல் 2 ஆண்டுகள் வரை வரவுசெலவு தாக்கல்செய்யாத நிறுவனங்களுக்கு வெளிநாட்டு நிதியில் 5 சதவீதம் அல்லது ரூ.5 லட்சம் அபராதம் விதிக்கப்படும்.

டிசம்பர் 31–ந்தேதிக்கு பிறகு 6 மாதத்தில் இருந்து ஓராண்டுவரை காலம் கடத்துவோருக்கு 4 சதவீதம் அல்லது ரூ.2 லட்சமும், 3 மாதத்தில் இருந்து 6 மாதம் வரை நிலுவை வைத்திருப்பவர்களுக்கு 3 சதவீதம் அல்லது ரூ.50 ஆயிரமும் அபராதம் விதிக்கப்படும்.

 

இதைப்போல 3 மாதங்களாக தாக்கல் செய்யாதோருக்கு வெளிநாட்டு நன் கொடையின் 2 சதவீதம் அல்லது ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து உள்துறை அமைச்சக அதிகாரிகள் கூறுகையில், ‘விதி மீறல்களில் ஈடுபடும் ஏராளமான தொண்டு நிறுவனங்கள் நாட்டில் உள்ளன. உள்துறை அமைச்சகம் தற்போது வெளியிட்டுள்ள நெறி முறைகள் அனைத்தும் அப்படிப்பட்ட தொண்டு நிறுவனங் களுக்கானவை. நேர்மையான தொண்டு நிறுவனங்கள் ஒரு போதும் துன்புறுத்தப்படாது’ என்று தெரிவித்தனர்.

2 responses to “வரவுசெலவு கணக்கை தாக்கல்செய்யாத தொண்டு நிறுவனங்களுக்கு அபராதம்”

Leave a Reply