பாஜக ஆட்சிமீதான நம்பிக்கை காரணமாக, நாட்டில் வரி செலுத்துவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார். .

தில்லியில் புதன் கிழமை நடைபெற்ற தகவல் தொழில்நுட்ப பொறியாளர்கள் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய மோடி இதைத்தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது:


வேகமாக வளர்ந்துவரும் நாடான இந்தியாவின் எதிர்காலம் தொழில்நுட்பத்தின் கைகளில் உள்ளது. இந்ததொழில்நுட்பம், நாடு எதிர்நோக்கியிருக்கும் பிரச்னைகளுக்கு தீர்வுகாணும் வகையில் இருக்க வேண்டும்.


அண்மையில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்தது. இதனால், இந்தியாவில் பெட்ரோல், டீசல்விலை சற்று அதிகரித்ததால் மக்கள் அவதிக்குள்ளாகினர்.


மின்சார வாகனங்களுக்கு மக்கள் மாறுவதுதான் இந்தப்பிரச்னைக்கு தீர்வாக இருக்கும். ஆகவே, மக்கள் எளிதில் வாங்கக்கூடிய தொகையில், அதிக விலையில்லாத, உடனடியாக சார்ஜ் ஆகக்கூடிய பேட்டரியைக் கொண்ட மின்சார வாகனங்களைத் தயாரிப்பதற்கு உள்நாட்டு நிறுவனங்கள் முன்வர வேண்டும்.


நாட்டில் வரி செலுத்துவோரின் எண்ணிக்கை முன்பைவிட தற்போது அதிகரித்துள்ளது. வரி செலுத்தா விட்டால் தண்டனை கிடைக்கும் என்ற அச்சத்தால் அவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கவில்லை. மாறாக, பாஜக அரசின் மீதான நம்பிக்கை காரணமாக, வரி செலுத்துவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அதாவது, தாங்கள் செலுத்தும் வரிப் பணம், மக்கள் நலனுக்காக முறையாகப் பயன்படுத்தப் படுகிறது என்று அவர்கள் கொண்டுள்ள நம்பிக்கையே அதற்கு காரணமாகும். அவர்களை நான் பாராட்டுகிறேன்.

அரசுக்கு வரி செலுத்துவது நமது ஆட்சி நிர்வாகத்தில் ஓர் அங்கமாகும். ஆனால், அதையும் தாண்டி சமூகப்பொறுப்பும் வரி செலுத்துவோருக்கு இருக்க வேண்டும். நேர்மையாக வரி செலுத்துவது மட்டுமன்றி, தங்களால் இயன்றளவில் சமூகத்துக்கு ஏதாவது செய்யவேண்டும்.


நமது கலாசாரத்தில், தொழில், வர்த்தக நிறுவனங்களை விமர்சிப்பதை மட்டுமே நாம் விரும்புகிறோம். உண்மையில், பலமுன்னணி பன்னாட்டு நிறுவனங்கள், சமூகசேவையில் சிறப்பாக ஈடுபட்டு வருகின்றன. அதுமட்டுமன்றி, தங்களது ஊழியர்களையும் சமூக சேவையில் ஊக்குவித்து வருகின்றன. நாட்டின் எதிர்காலம் தொழில்நுட்பத்தின் கையில் இருந்தாலும், இயற்கை வளங்களை பாதுகாப்பதில் நாம் பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டும்.
வேளாண் துறையில் நிறைவேற்ற வேண்டிய பணிகள் ஏராளம் உள்ளன. விவசாயிகளின் நலனுக்காக, புதிய கண்டுபிடிப்புகளை இளைய சமுதாயம் உருவாக்க வேண்டும். நீரை பயன்படுத்துவதில் நாம் அலட்சியமாக இருக்கிறோம். ஆனால், நீரை சிக்கனமாகப் பயன் படுத்துவது, எதிர்காலத் தேவைக்கு பாதுகாப்பது, மறுசுழற்சி செய்வது ஆகியவை அவசியமாகும். தண்ணீர் வீணாவதை தடுக்க விவசாயிகள் சொட்டு நீர்ப்பாசன முறைக்கு மாற வேண்டும்.


பல நேரங்களில் அரசால் செய்யமுடியாததை, மக்களின் பழக்கவழக்கத்தால் செய்துவிட முடியும். அதன்படி, தூய்மை இந்தியா திட்டம், மக்களின் கலாசாரத்தில் ஓர் அங்கமாக மாறவேண்டும் என்று பிரதமர் மோடி கூறினார்.

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.