உத்தராகண்ட் மாநிலத்தின் வளர்ச்சியில், மக்களின் நலன்களில் ஆளும் காங்கிரஸுக்கு அக்கறையில்லை என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

உத்தராகண்டில் 70 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கு ஒரேகட்டமாக வரும் 15-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதையொட்டி அங்குள்ள நகரில் பாஜக சார்பில் நேற்றுநடைபெற்ற பிரச்சாரகூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் ஆட்சிக்காலத்தில் சத்தீஸ்கர், ஜார்க்கண்ட், உத்தராகண்ட் மாநிலங்கள் உருவாக்கப்பட்டன. சத்தீஸ்கர், ஜார்க் கண்டில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. அந்தமாநிலங்கள் வேகமாகவளர்ச்சி அடைந்து வருகின்றன. சத்தீஸ்கரில் நக்ஸல் தீவிரவாதபிரச்சினை இருந்தும் அந்த மாநிலம் சீராக வளர்ந்து வருகிறது.

ஆனால் உத்தராகண்ட் மாநிலம் பின் தங்கிய நிலையில் உள்ளது. மாநிலத்தின் வளர்ச்சியில் மக்களின் நலன்களில் ஆளும் காங்கிரஸுக்கு அக்கறை யில்லை. தொலைநோக்கு திட்டம் இல்லை. வேலைவாய்ப்புகளை தேடி உத்தராகண்ட் மக்கள் வேறுமாநிலங்களுக்கு இடம்பெயர்ந்து வருகின்றனர். இதை தடுக்க முதல்வர் ஹரிஷ்ராவத் தவறிவிட்டார்.

பாஜக ஆட்சிக்கு வந்தால் சுற்றுலாதுறையை மேம்படுத்துவோம். மூலிகை வளங்களை அதிகரிப்போம். மத்திய அரசின் முயற்சியால் உலகளாவிய அளவில் யோகா பிரபலமடைந் துள்ளது. பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மக்கள் யோகாவை கற்றுக்கொள்ள உத்தராகண்டின் ஹரித்வார், ரிஷிகேஷுக்கு வருவதற்கு ஆர்வமாக உள்ளனர். அதற்கான வாய்ப்புகள் ஏற்படுத்தித்தரப்படும். இதன்மூலம் உலக சுற்றுலா மையமாக உத்தராகண்ட் உருவெடுக்கும்.

மத்தியில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்ற போது ஊழல் விவகாரங்கள் பூதாகரமாக வெடித்தன. எனது ஆட்சியில் ஊழலை அனுமதிக்க மாட்டேன். ஏழைகளின் நலனுக்காக ஊழல், கறுப்புப்பணத்துக்கு எதிராக தொடர்ந்து போரிடுவேன் இவ்வாறு அவர் பேசினார்.

Leave a Reply