இன்று தை அமாவாசை.  இந்துக்களுக்கு மிகவும் புனிதமானநாள்.  பூவுலகில் வாழ்பவர்களுக்கு மட்டுமல்ல பூவுலகை விட்டு சென்றவர்களுக்கும் மரியாதை செலுத்தும் நாள்.  அமாவாசை நம்பிக்கை வைத்து இறைவனை வழிபடுகிறவர்களும் குடும்பத்திலிருந்து பிரிந்து மறைந்த முன்னோர்களுக்கு சாந்தி செய்யும் நாள்.  அந்த நாளில் அனைத்து ஆலயங்களிலும் குறிப்பாக நீர்நிலைகளோடு அமைந்துள்ள கோவில்களில் கூட்டம் அலைமோதுவது நாம் அறிந்ததே.  

ஆக கூட்டம் கூடும் எதிர்பார்ப்புள்ள கோவில்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தேவை.  தடுப்பு நடவடிக்கைகள் தேவை.  பாதுகாப்பு ஏற்பாடுகள் தேவை.  இவையெல்லாமும் நாம் அறிந்ததே.  ஆனால் இவ்வளவு அறிந்தும் இன்று திருவண்ணாமலையில் தீர்த்தவாரியில் சடங்கு செய்ய அலைமோதிய கூட்டத்தில் கூட்ட நெரிசலினால் கரையிலிருந்து நீருக்குள் தள்ளப்பட்டு 4 பேர்கள் உயிரிழந்துள்ளார்கள் என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சியையும், வேதனையையும் தருகிறது.

கூட்டம் கூடும் தன்மையும் இந்த நாளின் முக்கியத்துவத்தையும் உணர்ந்து கோவில் நிர்வாகமும் அறநிலைதுறையும் காவல்துறையும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை ஏற்படுத்தி இருக்க வேண்டும்.  இறைவனை வழிபட வந்த இடத்தில் உயிரிழப்பு என்பது எந்த வகையிலும் ஒப்புக் கொள்ள முடியாததொன்று.

இத்தகைய விபத்தில் உயிரிழந்த 4 பேருக்கு அரசு தகுந்த இழப்பீட்டை அறிவிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.  அதுவும் குறிப்பாக மகாமகம் போன்ற ஆன்மீக விழாக்களில் கட்டுக்கடங்காத எண்ணிக்கையில் மக்கள் கலந்து கொள்ளும் நிகழ்வுகளும், இந்த ஆண்டில், வரும் காலத்தில் நடைபெற உள்ளதால் இன்னும் மிக அதிகமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும், பாதுகாப்பு நடவடிக்கைகளும் வேண்டும் என்பதையும் எச்சரித்துள்ளது இந்த சம்பவம்.

தமிழக அரசு இத்தகைய நிகழ்வுகளில் தனி கவனம் செலுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.  இத்தகைய கூட்டம் கூடும் இடங்களில் ஆம்புலன்ஸ் வசதி, தீயணைப்பு வீரர்களின் எண்ணிக்கை, அவசர சிகிச்சை மையங்கள், அருகில் உள்ள மருத்துவமனைகளில் சிறப்பு ஏற்பாடுகள் போன்றவற்றையும் அதிக எண்ணிக்கையிலும் அதிக கவனத்துடனும் ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.

        இப்படிக்கு
                                 என்றும் மக்கள் பணியில்
                                    
                             (டாக்டர். தமிழிசை சௌந்தரராஜன்)

Leave a Reply