உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள தனது சொந்தமக்களவை தொகுதியான வாராணசியில் பாஜக தொண்டர்களுடன் பிரதமர் நரேந்திரமோடி வியாழக்கிழமை (டிச.22) கலந்துரையாடவுள்ளார்.
உத்தரப் பிரதேச மாநில சட்டப்பேரவைக்கு அடுத்த ஆண்டு பொதுத்தேர்தல் நடைபெறவுள்ளது. இத்தேர்தலில் வெற்றிபெற்று மாநிலத்தில் ஆட்சியமைக்க வேண்டும் என்ற முனைப்புடன் பாஜக தீவிரமாக பணியாற்றி வருகிறது.


இந்நிலையில், வாராணசி மக்களவை தொகுதிக்கு பிரதமர் நரேந்திரமோடி வியாழக்கிழமை செல்கிறார். அங்கு டீசல் என்ஜின் தயாரிக்கும் ஆலைப் பகுதியில் பாஜக தொண்டர்களுடன் பிரதமர் மோடி கலந்துரை யாடவுள்ளார். இதில், வாராணசி மக்களவை தொகுதிக்கு உட்பட்ட 5 சட்டப் பேரவைத் தொகுதிகளைச் சேர்ந்த 20 ஆயிரம் பாஜக தொண்டர்கள் கலந்து கொள்ளவுள்ளனர். இவர்கள் அனைவரும், வாக்குச் சாவடி நிலையிலான பாஜக தொண்டர்கள் ஆவர்.


பின்னர், பனாரஸ் பல்கலைக்கழகத்தில் புற்று நோய் சிகிச்சை மையம் மற்றும் நவீன மருத்துவமனை அமைக்கும் பணியை அடிக்கல்நாட்டி பிரதமர் மோடி தொடக்கிவைக்கவுள்ளார். அதை தொடர்ந்து, கபீர் நகருக்கு செல்லும் மோடி, அங்கு நடைபெற்றுவரும் வளர்ச்சி பணிகளை ஆய்வுசெய்யவுள்ளார். உயர் மதிப்புடைய ரூபாய் நோட்டுகளை வாபஸ்பெறும் முடிவை அறிவித்தபிறகு, வாராணசி தொகுதிக்கு பிரதமர் மோடி செல்வது இது முதல் முறையாகும். மேலும், வாராணசியில் அவர் நிகழாண்டில் மேற்கொள்ளும் 5-ஆவது சுற்றுப்பயணம் இதுவாகும்.


 இதனிடையே, மகாராஷ்டிர மாநிலம், மும்பையில் பிரதமர் வரும் 24-ஆம் தேதி பல்வேறு ரயில்வேதிட்டங்களை தொடக்கி வைக்கவுள்ளார். அதைத்தொடர்ந்து நடைபெறும் பொதுக் கூட்டத்திலும் பங்கேற்று பேசவுள்ளார்.
மும்பையில் கடந்த ஆண்டு நடைபெற்ற அம்பேத்கர் நினைவிட அடிக்கல்நாட்டு விழாவில் மோடி கலந்து கொண்டபோது, அதில் பாஜக கூட்டணி கட்சியான சிவசேனை தலைவர் உத்தவ்தாக்கரே கலந்து கொள்ளவில்லை.
இந்நிலையில், பிரதமர் மோடி வரும் 24-ம் தேதி கலந்துகொள்ளும் நிகழ்ச்சியில் உத்தவ் தாக்கரே பங்கேற்பார் என சிவசேனை புதன்கிழமை அறிவித்துள்ளது.

Leave a Reply