வார்தா புயலால் சென்னைநகருக்கு ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து தகவல்கள் சேகரிக்கப்படுகிறது என்று மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.


நாகர்கோவில் வேப்பமூடு சந்திப்புபகுதியில் உள்ள நகராட்சி பூங்கா மத்திய அரசின் அம்ருத்திட்டம் மூலம் ரூ.87 லட்சம் செலவில் சீரமைக்கப்பட்டு வருகிறது. இந்த பூங்காவில் மேற்கொள்ளப்படும் சீரமைப்புபணிகளை நேற்று மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் பார்வையிட்டார்.

அப்போது அங்கு அமைக்கப் பட்டுள்ள என்.எஸ்.கிருஷ்ணன் நினைவு ஸ்தூபியை சுற்றிலும் வேலி அமைக்குமாறும், அதனை பார்வையாளர்கள் சுற்றிநின்று பார்க்க வசதி செய்யுமாறும், பூங்காவில் உள்ள மரங்களுக்கு தாவரவியல் பெயர் (பொட்டானிக்கல் நேம்) பலகை வைக்குமாறும் அதிகாரிகளிடம் ஆலோசனை வழங்கினார்.

பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின்போது கூறியதாவது:–


குமரி மாவட்டம் இயற்கைவளம் நிறைந்த மாவட்டம். நாகர்கோவிலில் உள்ள இந்த பெரிய பூங்கா சில ஆண்டுகளுக்கு முன்பு பாழடைந்து கிடந்தது. நான் இந்ததொகுதி எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டபோது 1999–ம் ஆண்டு பலலட்சம் ரூபாய் செலவில் பூங்கா மேம்படுத்தப்பட்டது. அதன்பிறகு மீண்டும் பூங்கா பாழாகி, சமூக விரோத செயல்கள் நடப்பதாக தகவல்கள் வெளியானது. இதுமிகவும் வேதனையை தந்தது.

எனவே தான் இந்தபூங்காவை பிரதமரின் அம்ருத் திட்டம் மூலம் ரூ.87 லட்சம் செலவில் சீரமைக்க ஏற்பாடுசெய்தோம். தற்போது பணிகள் நிறைவடைந்து வருகிறது. இங்கு அனைத்து மக்களும் ‘கார் பார்க்கிங்‘ செய்ய அனுமதிக்கப்படுவதாக தெரிவித்தனர். பூங்காவை பூங்காவாகத்தான் பயன்படுத்தவேண்டும். இனி இந்த பூங்காவில் சமூக விரோத செயல்கள் நடக்காமல் இருக்க மாவட்டநிர்வாகமும், போலீசாரும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


சென்னையில் கரை கடந்த வார்தா புயலால் சென்னை நகரம் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறது. இதுகுறித்த தகவல்களை மத்திய அரசு சேகரித்து வருகிறது. அங்கு ரெயில் மற்றும் விமானபோக்குவரத்து இன்னும் சீராகவில்லை.

புயல் கரையை கடந்தபோது வீசிய சூறைக்காற்றால் சென்னை மற்றும் எண்ணுர் துறைமுகத்தில் நின்ற கப்பல்களுக்கு எந்தபாதிப்பும் ஏற்படவில்லை. புயல் வீசுவதற்கு முன்பே கப்பல்கள் அனைத்தும் துறைமுகத்துக்கு வெளியே பாதுகாப்பான இடத்துக்கு கொண்டு செல்லப்பட்டு நிறுத்தப்பட்டு விட்டது. இதனால் கப்பல்கள் ஒன்றுடன் ஒன்று மோதி சேதம் ஏற்படுவது தடுக்கப்பட்டது. ஆனால் புயல்வீசியபோது துறைமுகத்தில் சின்ன, சின்ன பாதிப்புகள் ஏற்பட்டு உள்ளதாக தெரிய வந்துள்ளது.

இதுபற்றி இன்று (நேற்று) காலையிலும் அதிகாரிகளிடம் தகவல்கேட்டறிந்தேன். மேலும் இதுபற்றிய அறிக்கையும் கேட்கப்பட்டு உள்ளது. அறிக்கை வந்தபிறகு அங்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கை குறித்து முடிவு செய்யப்படும்.

குமரி மாவட்டத்தில் இனயம் துறைமுகம் வந்தே தீரும். துறைமுகத்துக்கான இடத்தை அடையாளம் காணவும், அளவீடு செய்யும் பணியை மேற்கொள்ள விடாமலும் சிலர் தடுத்துவருகின்றனர். யார் தடுத்தாலும் அதனை அமைத்தே தீருவோம்.

குமரி மாவட்டத்தில் 95 ரோடுகள் மோசமாக உள்ளதாக கணக்கெடுக்கப்பட்டு உள்ளது. இதில் 50 சாலைகளின் சீரமைப்பு பணிகள் நடந்து வருகிறது. மேலும் 45 சாலைகளில் பணிகள் நடைபெற உள்ளது.

 

பணம் ‘கருப்பாக‘ மாற சில கருப்பு ஆடுகள்தான் காரணம். இப்பிரச்சினையில் எல்லா வங்கி அதிகாரிகளையும் குற்றம் சொல்ல முடியாது. கருப்பு பண ஒழிப்பு நடவடிக்கைக்கு பல வங்கி அதிகாரிகள் கடுமையாக உழைத்திருக்கிறார்கள்.

ஆனால் சிலர் மட்டுமே கருப்பு பணத்தை மாற்றிக்கொடுக்கும் செயலுக்கு துணை போயிருக்கிறார்கள். அவர்கள் தேசத்துரோகிகளுக்கு சமமானவர்கள். அப்படிப்பட்ட சில வங்கி அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இந்த நடவடிக்கை தொடரும். இவ்விஷயத்தில் ஆதாரப்பூர்வமாக புகார்கள் வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும்.

Tags:

Leave a Reply