மத்தியில் நடைபெறும் ஆட்சி சாமான்ய மக்களுக்கான அரசு என்பதை உணர்த்தும்வகையில் வரும் மே மாதம் முதல் தேதியில் இருந்து பிரதமர், மத்தியமந்திரிகள் உள்ளிட்டோரின் கார்களில் இருந்து சுழலும் சிவப்பு விளக்குகள் அகற்றப்படும் என மத்திய போக்குவரத்து துறை மந்திரி நிதின்கட்காரி அறிவித்துள்ளார்.

டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்தியமந்திரிசபை கூட்டத்துக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மத்தியபோக்குவரத்து துறை மந்திரி நிதின்கட்காரி, ‘இன்று நடைபெற்ற மந்திரி சபை கூட்டத்தில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாக ஒருமுக்கிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

ஆபத்து காலத்தில் அவசரசேவைக்காக செல்லும் வாகனங்களை தவிர பிரதமர், மத்திய மந்திரிகள் ஆகியோரின் கார்களில் இருந்து சுழலும் சிவப்புவிளக்குகள் அகற்றப்பட வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது.

இந்த ஆட்சி சாமான்யமக்களுக்கான அரசு என்பதை உணர்த்தும் வகையில் விஐபி.க்களின் வாகனங்களில் சுழலும் சிவப்பு விளக்குகள் மற்றும் சைரன் ஒலிக்கும் கலாச்சாரத்துக்கு முடிவுகட்ட தீர்மானித்தோம். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிக்கை விரைவில் வெளியிடப்படும்.

முதல்கட்டமாக என்னுடைய காரில்இருக்கும் சிவப்பு விளக்கை கழற்றிவிடுமாறு தெரிவித்துள்ளேன்’ என குறிப்பிட்டார்.

Leave a Reply