மத்தியசாலை போக்குவரத்து, நெடுஞ்சாலைத் துறை மற்றும் கப்பல்துறை அமைச்சர் பொன்.இராதாகிருஷ்ணன், நவராத்திரி மற்றும் விஜய தசமி வாழ்த்துகள் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், "கற்கும்கல்வி மேம்படவும், கற்ற கல்வி பயன் தரவும், செய்யும் தொழில் சிறப்புறவும், தொழில்திறன் அனைத்தும் வளம்பெறவும், நாம் கொண்டாடுகின்ற விழா நவராத்திரி திருநாள்.

நாம் செய்யும் அனைத்து வேலைகளிலும் வருகின்ற இடர்களை வென்று, வெற்றி வாகை சூடுகின்ற விஜயதசமி  நன்னாளை, புதிய அத்தியாயத்தின் துவக்க விழாவாக நாம் கருதுகிறோம். அவ்வகையில், பிரதமர் நரேந்திர மோடி நமது நாட்டின் வளர்ச்சிக்காக கொண்டுவந்துள்ள ‘மேக் இன் இந்தியா’ (இந்தியாவில் தயாரிப்போம்) போன்ற பல நலத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படும் போது, உலகின் முதல் தர நாடுகளின் வரிசையில் இந்தியா முதன்மை பெறும் என்பது திண்ணம். அது போல, நமது நாட்டு மக்களின் நலனுக்காக பிரதமர் மோடி கொண்டு வந்துள்ள

 “ஜன் தன் ”  போன்ற பல திட்டங்களை, குடிசைகளில் வாழும் ஏழை, எளிய மக்களிடம் கொண்டு சேர்க்கும் போது, நமது நாட்டு மக்களின் வாழ்க்கைத்தரம் மேம்பட்டு உயரும் என்பதும் உறுதியான ஒன்று. பிரதமர் கொண்டு வந்துள்ள ‘’தூய்மை இந்தியா’’ போன்ற திட்டங்களை வெற்றிகரமாக நடத்தும்போது, உலக நாடுகள் பாரம்பரியமான நம் நாட்டின் தன்மைகளை சுவீகாரம்செய்ய தாமாக முன்வரும் என்பதும் உறுதி.

இவை அனைத்தும் முழுமையான வெற்றிபெற்று உலகிற்கு வழிகாட்டுகின்ற உயர்ந்த நாடாக நமது இந்தியா திகழவும், அந்த உயர்ந்த நிலையை அடைய,  நம் தமிழர்கள்தான் காரணமாக அமைந்தார்கள் என்ற மகத்தான பெருமையை ஒவ்வொரு  தமிழனும் பெறும்வகையில் அன்னை பராசக்தி அருள வேண்டும் என்று எனது பிரார்த்தனைகளை  தெரிவித்து அனைவருக்கும் நவராத்திரி மற்றும் விஜய தசமி நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்" என்று கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.