நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் வரும் 29ம் தேதி தொடங்குகிறது. 2018-19ம் நிதியாண்டுக்கான பொது பட்ஜெட்டை நிதி அமைச்சர் அருண்ஜெட்லி பிப்ரவரி 1ம் தேதி தாக்கல்செய்ய இருக்கிறார். இந்த பட்ெஜட்டில் வேளாண் துறைக்கு கூடுதல் முக்கியத்துவம் அளிக்கப்படும் என எதிர்பார்க்கப் படுகிறது. வேளாண் உற்பத்தியை அதிகரிக்கும் வகையில் விவசாயகடனுக்கு ரூ. 11 லட்சம் கோடி ஒதுக்க அருண்ஜெட்லி முடிவு செய்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நடப்பு நிதியாண்டில் ரூ. 10 லட்சம் கோடி விவசாயகடன் வழங்க இலக்கு வைக்கப்பட்டது. இதில் கடந்த செப்டம்பர் வரை ரூ. 6.25 லட்சம் கோடி கடன் வழங்கப் பட்டுள்ளது. வழக்கமாக விவசாயிகளுக்கு 9 சதவீத வட்டியில் கடன்வழங்கப்படும். கூடுதல் சலுகையாக ரூ. 3 லட்சம் வரையிலான குறுகியகால கடன்களுக்கு 7 சதவீத வட்டி மட்டுமே வசூலிக்கப்படுகிறது. கடனை உரிய தேதியில் திருப்பி செலுத்தி விட்டால் மேலும் 3 சதவீதம் தள்ளுபடி செய்யப்பட்டு மிகக் குறைந்த அளவாக 4 சதவீத வட்டிமட்டுமே வாங்கப்படுகிறது.
பொதுத் துறை வங்கிகள், கூட்டுறவு வங்கிகள், வட்டார கிராமவங்கிகள் ஆகியவை அதிக அளவில் விவசாய கடன்களை அளிக்கின்றன. அவற்றில் கூட்டுறவு மற்றும் கிராம வங்கிகள் நபார்டுவங்கி உதவியுடன் விவசாய கடன்களை அளிக்கின்றன. நடப்பு நிதியாண்டில் அனைத்து விவசாய கடன் வங்கி கணக்குகளும் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ளன.