விவசாயிகள் நாட்டில் எங்கிருந்தாலும் தங்களது வேளாண் பொருள்களை விற்பனைசெய்யும் வகையில் இணைய வேளாண்சந்தை ஏப்ரல் 14 ஆம் தேதிமுதல் இயங்கும் என பிரதமர் மோடி கூறினார்.

செஹாரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரதமர் மோடி, சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட பயிர்க் காப்பீட்டுத் திட்டத்துக்கான வழிகாட்டும் நெறிமுறைகளை வெளியிட்டார்.

பின்னர் அவர் பேசியதாவது:

பருவம் தவறியமழை, வறட்சி ஆகியவற்றால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளின் நலனை உறுதி செய்வதற்காக, பயிர்க் காப்பீடு, மண்வள அட்டைத் திட்டம், நீர்ப்பாசனத் திட்டம், இயற்கை விவசாயம் உள்ளிட்ட திட்டங்களை மத்திய அரசு தொடங்கியுள்ளது.

விவசாயிகள் கடினமாக உழைத்தாலும், தங்களின் விளை பொருள்களுக்கு உரியவிலை கிடைக்காததால், அவர்கள் மிகவும் பாதிக்கப் படுகிறார்கள். இதனால், அருகில் இருக்கும் ஏதாவது ஒருசந்தையில் தங்களது விளைபொருள்களை விற்கும் நிலை ஏற்படுகிறது. இது போன்ற பிரச்னைகளுக்குத் தீர்வுகாண்பதற்காக, இணையதள கட்டமைப்பு ஒன்றை ஏற்படுத்த மத்திய அரசு முடிவுசெய்துள்ளது.

அதற்காக, "தேசிய வேளாண் சந்தை'' என்ற பெயரில் இணைய தளம் ஒன்று உருவாக்கப்படும். அந்த இணையதளம் சட்ட மேதை அம்பேத்கரின் பிறந்த தினமான ஏப்ரல் 14-ம் தேதி முதல் இயங்கும்.

அந்த இணையதளம் வாயிலாக, விவசாயிகள் தங்களது மொபைல்போனை பயன்படுத்தியே, நல்ல விலை கிடைக்கும் பகுதிக்கு தங்களது விளைபொருள்களை விற்பனைசெய்யலாம்.

இந்திய சுதந்திரத்தின் 75-ஆவது ஆண்டுவிழா வருகிற , 2022-ஆம் ஆண்டு கொண்டாடபடவுள்ளது. அந்த ஆண்டில், விவசாயிகளின் வருவாயை இருமடங்காக உயர்த்துவதற்கு அனைத்து மாநில அரசுகளும், வேளாண் சமூகத்தினரும் உறுதியேற்க வேண்டும். அதற்கான அனைத்து உதவிகளையும் மத்தியஅரசு அளிக்கும்.

இதேபோல, நாடுமுழுவதும் உள்ள 585 மொத்தவிலை கொள்முதல் நிலையங்களையும், வரும் 2018-ஆம் ஆண்டுக்குள், இணைய தளம் வாயிலாக ஒருங்கிணைக்கும் பணிகளை மத்திய அரசு தொடங்கியுள்ளது.

விவசாயிகள், பாரம்பரிய வேளாண் அறிவையும், நவீன தொழிநுட்பங்களையும் பயன் படுத்தி, விவசாயத் துறையை மேம்படுத்த வேண்டும். உள்ளூரின் தேவையை மட்டுமன்றி, வெளி நாடுகளின் தேவையையும் பூர்த்திசெய்யும் வகையில் விவசாயிகள் பாடுபடவேண்டும் என்றார் பிரதமர் மோடி.

இந்நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர்கள் சுஷ்மா ஸ்வராஜ், ராதாமோகன் சிங், முதல்வர் சிவராஜ் சிங் சௌஹான் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply