டெல்லியில் நேற்று 3 நாள் வேளாண் வளர்ச்சி மாநாட்டை பிரதமர் நரேந்திரமோடி தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:

கடந்த 2014 மே மாதம் எனது தலைமை யிலான அரசு மத்தியில் பதவியேற்றது. அதன் பிறகு வேளாண் வளர்ச்சிக்காக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. விவசாயிகளின் நலன்கருதி புதிய பயிர் காப்பீட்டு மசோதா, மண்வள அட்டை ஆகிய திட்டங்கள் அமல் செய்யப் பட்டுள்ளன.

விவசாயிகள் வேளாண்மையை மட்டுமே நம்பியிருக்கக் கூடாது. கூடுதலாக பால்பண்ணை, கோழிப்பண்ணை, உணவு பதப்படுத்துதல் உள்ளிட்ட வேளாண்துறை சார்ந்த தொழில்களிலும் ஈடுபடவேண்டும். அப்போதுதான் வருவாய் பெருகும்.

வரும் 2022-ம் ஆண்டுக்குள் விவசாயிகளின் வருவாயை இரட்டிப்பாக்க மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.

கிழக்கு மாநிலங்களில் மண்வளம், நீர்வளம் நிறைந்து காணப்படுகிறது. எனவே நவீன தொழில் நுட்பங்களைப் பயன் படுத்தி அந்த மாநிலங்களில் 2-வது பசுமைப் புரட்சி ஏற்படுத்தப்படும்.

நாடுமுழுவதும் நீர்வளத்தை பெருக்க சுமார் 90 நீர்ப்பாசன திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன. இதன் மூலம் 80 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசனவசதி பெறும். இதற்காக மத்திய அரசு ரூ.20 ஆயிரம் கோடியை செலவிடுகிறது. இந்த நீர்ப்பாசன திட்டங்கள் நிறைவடையும் போது விவசாயிகள் மிகுந்தபலன் அடைவார்கள்.

தற்போது கோடைகாலம் தொடங்கியுள்ளது. இந்த நேரத்தில் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தில் அனைத்து கிராமங்களிலும் நீர்நிலைகள் தூர்வாரப்பட்டு ஆழப்படுத்தப்படும். புதிய நீர்நிலைகள் உருவாக்கப்படும்.

பாசனத்துக்கு தண்ணீரை மிகவும் சிக்கனமாக பயன்படுத்த வேண்டும். அதற்கு சொட்டு நீர்பாசனம் உள்ளிட்ட நவீன தொழில்நுட்பங்களை கடைப் பிடிக்க வேண்டும். குறைந்த நீரில் நிறைந்த மகசூலைப் பெறுவதே விவசாயிகளின் லட்சியமாக இருக்கவேண்டும்.

இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

Leave a Reply