இந்தியாவின் எழுச்சிக்கு காரணமான விடிவெள்ளிகளில் மிக முக்கியமானவர்; முதலானவர்; விவேகானந்தர் ஏற்றிய எழுச்சி சுடரானது இன்றைக்கும் நம் நாட்டின் முன்னேற்ற பாதைக்கான வெளிச்சங்களில் ஒன்றாய், தீர்க்கமான ஒளியாய் உள்ளது.

விவேகானந்தரின் வாழ்நாளில் நமக்கான உத்வேகமாய், வழிகாட்டுதலாய் பல நிகழ்வுகள் இருப்பினும்,  கடந்த நூற்றாண்டின் இரண்டாம் வருடத்திலேயே இம்மண்ணுலகம் துறந்தவரான இப்பெருமகனார் நம் நாட்டில் வாழ்ந்ததற்கான அடையாளமாய், அவர்தம் சந்ததிகளான நம் நினைவுகளிலிருந்து நீங்காதிருப்பதற்கான பெரும் சின்னமாய் நிமிர்ந்திருப்பது பாரதத்தின் தென்கோடியான கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தர் பாறையில் எழுப்பப்பட்டுள்ள அவரது நினைவு மண்டபம்.

டிசம்பர் 24, 1892ல் விவேகானந்தர் கன்னியாகுமரி வந்தடைந்தபோது, குமரிக்கரையிலிருந்து கடலுக்குள்ளே 500 மீட்டர் தூரத்தில் அமைந்திருந்த இரு பாறைகளாலான இடத்திற்கு நீந்திச் சென்று மூன்று நாட்கள் தியானம் செய்துள்ளார். அவ்விடமே பிற்காலத்தில் விவேகானந்தர் பாறை என்றானது. விவேகானந்தரின் நூறாவது ஆண்டான 1963-ம் ஆண்டு, இந்திய அரசு அவருக்காக ஒரு நினைவுச் சின்னத்தை எழுப்புவதென்று முடிவானபோது கன்னியாகுமரியிலுள்ள விவேகானந்தர் பாறையில் அவரின் நினைவு மண்டபம் கட்டுவதென்பது உறுதி செய்யப்பட்டது. கூடவே கரையிலிருந்து இப்பாறைக்குச் செல்ல பாலமொன்றை கட்டுவதென்பதும் சேர்த்துக்கொள்ளப்பட்டது. 1962-ம்  ஆண்டு கட்ட ஆரம்பிக்கப்பட்ட இம்மண்டபம் 1970-ம் ஆண்டு திறக்கப்பட்டது. தற்போது இந்தியாவின் சுற்றுலாத்தலங்களில் அதி அழகான இடமாய் இருக்கும் இந்நினைவு மண்டபம்,  கட்ட உறுதி செய்யப்பட்டு கட்டி முடிப்பதற்குள் நிகழ்ந்த பிரச்னைகள் கரடுமுரடான வரலாறாகும். மிகப் பெரிய கலவரத்தில் முடிந்திருக்க வேண்டிய இப்பிரச்னைகளிலிருந்து இந்நினைவு மண்டபம் மீண்டெழுந்த கதை அன்றைய அரசியலின் ஆளுமை என்றாலும், விவேகானந்தரின் மாட்சிமை என்றே கொள்ளவேண்டும்.


நினைவு மண்டபம் கட்டும் பணிகள்,  வேலாயுதம் பிள்ளை என்பவரின் தலைமையின் கீழ் முடக்கிவிடப்பட்டு விரைந்து கொண்டிருக்கையில், நம் நாட்டில் எந்தவொரு நல்ல காரியமும் தடையில்லாமல் நிறைவேராது என்பதற்கேற்ப விவேகானந்தர் பாறையில் ஒருநாள்,  கரையிலிருந்து பார்த்தால் தெரியுமளவிற்கு பெரிய சிலுவை ஒன்று நிறுவப்பட்டது. அந்தப் பாறை அங்குள்ள கிறிஸ்தவ மீனவ மக்களின் வாழ்வாதாரமாய் இருந்துள்ளது. மீனவர்கள் இளைப்பாறவும், மீன் வலைகளை காய வைக்கவும், பொருட்களைப் பரிமாற்றவும் என பல வினைகளுக்காக அப்பாறையை பயன்படுத்தியுள்ளனர். விவேகானந்தர் அங்கு தியானம் செய்தமையால் அவரது நூற்றாண்டுச் சின்னமாக அவ்விடத்தில் நினைவு மண்டபம் கட்டப்படுகிறதென்பது அவர்களுக்கும், அப்பாறைக்கும் இருந்த வாழ்வாதார பிணைப்பை துண்டிக்கும் ஒரு செயலாகத்தான் தெரிந்ததே தவிர, விவேகானந்தரைப் பற்றி அவர்கள் அவ்வளவாய் அறிந்திருக்கவில்லை. விவேகானந்தர் அங்கு தியானம் செய்தார் என்பதை சாதாரண நிகழ்வாக் கொண்ட அவர்கள்,  நானூறு ஆண்டுகளுக்கு முன் புனித சேவியர் அங்கு ஜெபம் செய்தார் என்பதை பெரும் காரணியாக் கொண்டு அச்சிலுவையை அங்கு ஒரே இரவில் நிறுவினர்.

சிலுவை நிறுவப்பட்டது பலவகையிலும் எதிர்ப்புகளை கிள்ளிவிட்டது. சிலுவைக்கான காரணத்தை அம்மீனவ மக்களிடம் விசாரிக்கையில்,  அந்தப் பாறையில் பல வருடங்களுக்கு முன் ஒரு பெரிய சிலுவை இருந்ததாகவும், அது காலப்போக்கில் அழிந்துவிட்டதாகவும், ஆகவே இப்போது அவர்கள்  மீண்டும் சிலுவையை நிறுவியுள்ளதாகவும் கூறினர். விசாரணையின் முடிவில் கிறிஸ்தவர்களுக்கும் அந்தப் பாறைக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டு, வருவாய்த்துறையினரால் அச்சிலுவை அகற்றப்பட்டது. இனிமேலும் நினைவு மண்டபத்தை எழுப்பும் செயல் மாநிலத்தின் அமைதியை அசைத்துப் பார்க்கும் என்பதை அறிந்திருந்த அன்றைய தமிழக முதலமைச்சர் பக்தவத்சலம்,  அப்பாறை விவேகானந்தர் மூன்று நாட்கள் தியானம் செய்த இடம் என்பதற்கான அடையாளமாய் ஒரு சிறிய சின்னத்தை ஏற்படுத்துவதோடு நிறுத்திக்கொள்ளலாம் என முடிவெடுத்தார். ’இந்தப் பாறை சுவாமி விவேகானந்தர் தியானம் செய்த இடம்’ என்னும் எழுத்துகளை மட்டும் ஏந்திய பலகை அங்கு ஜனவரி 17,1963ல் நிறுவப்பட்டது.


சலசலப்பு சற்றே ஓய்ந்திருந்த நிலையில்,  இப்பிரச்னை இந்துக்களால் மீண்டும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பினரிடம் கொண்டுசெல்லப்பட்டது. ஆர்.எஸ்.எஸ்சின் அப்போதைய தலைவராய் இருந்த கோல்வால்கர், அமைப்பின் முக்கிய உறுப்பினரும், மாபெரும் சமூக ஆர்வலருமான ஏக்நாத் ரனடேவிடம் இப்பொறுப்பை ஒப்படைத்தார். நினைவு மண்டபம் எழுப்புவதற்கு தடையாய் இருக்கும் காரணிகளை முதலில் ஆராய்ந்தார் ரனடே. அப்போது நினைவு மண்டபத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தவர்கள் இரண்டு முக்கிய பிரமுகர்கள். மாநிலத்தின் அமைதி கெட்டுவிடும் என்றெண்ணிய தமிழக முதலமைச்சர் பக்தவத்சலமும், பாறையின் அழகு கெட்டுவிடும் என்றெண்ணிய அன்றைய மத்திய கலாச்சாரத்துறை அமைச்சர் ஹுமாயூன் கபீரும் அவ்விருவர். நினைவு மண்டபம் கட்டுவதற்கான முதல் கட்ட நடவடிக்கையாய் கல்கத்தா சென்ற ரனடே,  அங்குள்ள பத்திரிகையாளர்களிடம் ’வங்காளத் தொகுதியில் வெற்றி பெற்று மத்திய அமைச்சரான ஹுமாயூன் கபீர், வங்காளத்தின் பெருமையாகிய விவேகானந்தருக்கு நினைவு மண்டபம் கட்டுவதற்கு முட்டுக்கட்டையாயுள்ளார்’ என பேட்டியளிக்க, ஹுமாயூன் தனது ஆட்சேபனையை விலக்கிக்கொண்டார். அடுத்ததாக பக்தவத்சலத்தின் எதிர்ப்பை முறியடிக்க திட்டமிட்ட ரனடே, லால் பகதூர் சாஸ்திரியின் ஆலோசனைப்படி நினைவு மண்டபம் கட்டுவதற்கான ஒப்புதல் கையெழுத்தை 323 பாராளுமன்ற உறுப்பினர்களிடம் பெற்று,  அப்போதைய பிரதமர் நேருவிடம் சமர்ப்பித்தார். பிரதமரின் கட்டளைப்படி முதலமைச்சர் பக்தவத்சலத்திற்கு விவேகானந்தர் நினைவு மண்டபம் கட்டுவதற்கு அனுமதி வழங்குவதன்றி வேறு வழியில்லாமல் போனது.


மண்டபம் கட்டும் பணி மீண்டும் முழுவீச்சில் ஆரம்பிக்கப்பட்டபோது, தமிழகத்தில் மீண்டும் ஏதேனும் பிரச்னை ஏற்படாமல் இருக்க, பக்தவத்சலத்தின் ஆலோசனையின் படி நினைவு மண்டப குழு ஒன்று அமைக்கப்பட்டது. குழுவின் உறுப்பினர்களாக தி.மு.க தலைவர் அண்ணா மற்றும் சில கம்யூனிஸ்ட் தலைவர்களும் நியமிக்கப்பட்டனர். இத்தலைவர்கள் தங்களின் நடுநிலையால் கிறிஸ்தவ மீனவ மக்களை சமாதானம் செய்து, ஏக்நாத் ரனடேவின் தலைமையில் நாடு முழுவதுமுள்ள அனைத்து மாநிலங்களிலிருந்தும் நன்கொடை  பெற்று, 1970-ம் வருடம் விவேகானந்தர் பாறையில் அவருக்கான நினைவு மண்டபம் சிறப்பாய் கட்டிமுடிக்கப்பட்டது.

நன்றி ; ஜூனியர் விகடன்

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.