காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, பிரதமர் மோடி லஞ்சத்தை ஒழிப்பதாகக் கூறி வருவதைப் பச்சைப் பொய் என்றும், ஆட்சி அமைக்க குதிரை பேரத்தில் ஈடுபடுவதற்குத் தமது கட்சித் தலைவர்களைத் தூண்டிவிட்டவரென்றும், அவர் ஒரு சர்வாதிகாரி என்றும் சாடியுள்ளார். 


27.5.2018 – இல் மார்க்சிஸ்ட் கட்சியின் தேசியச் செயலாளர் தோழர் சீத்தாராம் யெச்சூரி பீப்பிள்ஸ் டெமாக்ரசி' கட்சிப் பத்திரிகையில் எழுதியுள்ள தலையங்கத்தில், அரசியல் சட்ட அதிகார மையங்கள் மீது அனைத்து விதமான தாக்குதல்களையும் மத்திய பா.ஜ.க. அரசு ஏவியிருக்கிறது' என்று குறிப்பிட்டுள்ளார்.


ராகுல் காந்தியின் கருத்தும் தோழர் யெச்சூரியின் கருத்தும் ஒரே விதமாக வெளியாகியுள்ளன.அவர்கள் கூறியுள்ள அரசியல் சாசன நிறுவனங்களான, உச்சநீதிமன்றம், தேர்தல் ஆணையம், ஆளுநர் பதவி, இம்மூன்றுக்கும் ஏற்பட்டுள்ள தாக்குதல்களைப் புரிந்துகொள்ள குஜராத், கர்நாடக மாநிலத் தேர்தல்கள் நமக்கு உதவுகின்றன.


தேர்தலில் போட்டியிடும் கட்சிகளோ, சுயேச்சைகளோ சாதியைப் பயன்படுத்தியோ, மதத்தைப் பயன்படுத்தியோ ஆதரவு திரட்டுவது அரசியல் சட்டப்படி குற்றமாகும். அது நிரூபிக்கப்பட்டால், தேர்ந்தெடுக்கப்பட்ட வேட்பாளர் தேர்வு செல்லாது.
குஜராத் தேர்தலில் படேல் சாதியினர் தங்களுக்கு வேலைவாய்ப்பிலும், கல்வியிலும் ஒதுக்கீடு வேண்டும் என்று மாணவர் ஹர்திக் படேல் தலைமையில் கோரிக்கை வைத்தது அரசியல் சட்டத்திற்கு எதிரானது.


குஜராத் தேர்தலில் வெற்றியை நிர்ணயிப்பதற்கு 10 எம்.எல்.ஏ.-க்களே போதும். படேல் சாதியினர் பா.ஜ.க.வில் 20 பேர் இருப்பதாக மதிப்பீடு செய்யப்பட்டது. படேல் சாதித் தலைவர் மாணவர் ஹார்திக் படேல் தனது கோரிக்கையை காங்கிரஸ் கட்சி ஏற்றால், அதற்கு ஆதரவு தருவதாகவும், பாஜ.க. ஏற்க முன்வருமானால் அதற்கு முன்னுரிமை தருவதாகவும் அறிவித்தார். பா.ஜ.க. விடமிருந்து பதில் வரவில்லை. அதனால் கெடு விதித்தார். கெடுவும் முடிந்தது. இதற்கிடையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் ஆட்சி அமைத்தால் படேல் சாதியினருக்கு இடஒதுக்கீடு தரப்படும்' என்று அறிவித்தார்.


அப்போதும்கூட பிரதமர் அக்கோரிக்கையை அலட்சியப்படுத்தினார். காரணம், படேல் சாதியினர் வசதியானவர்கள் என்று புள்ளிவிவரங்கள் கூறின. கொள்கையில் கோணல் இல்லாமல் நின்றார் பிரதமர் மோடி. பத்துக்கும் குறைவான எம்.எல்.ஏ.க்கள் வித்தியாசத்தில்தான் குஜராத்தில் நூலிழையில் பி.ஜே.பி. ஜெயித்தது. 


அடுத்து, கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பு லிங்காயத்துக்களையும், வீரசைவர்களையும் இருவேறு சிறுபான்மை மதங்களாகக் கர்நாடக காங்கிரஸ் அரசு அறிவித்தது. அதனுடைய உள்நோக்கம் லிங்காயத்து வாக்கு வங்கி பா.ஜ.க. வுக்கு ஆதரவாகாமல் தடுப்பதுதான். 71 ஆண்டு சுதந்திர இந்தியாவில் முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள்போல லிங்காயத்துகளும் சிறுபான்மை மதமாக்கப்பட்ட நடவடிக்கை கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சியில்தான் நடந்தது. 
கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் பெரும்பான்மை பெற்ற தனிக்கட்சியாக இருந்த பா.ஜ.க.வை ஆட்சியை அமைக்குமாறு ஆளுநர் அழைத்தார். முதல்வராக பி.எஸ். எடியூரப்பாவுக்குப் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். அதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.


ராகுல் காந்தி, தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா நடுநிலையற்றவர் எனக் குற்றம்சாட்டி மாநிலங்கள் அவையில் 60 எம்.பி.-க்களின் ஆதரவுடன் ஒரு மனுவை அளித்துத் தலைமை நீதிபதியைப் பதவி நீக்கம் செய்யும் சட்ட நடவடிக்கையில் ஏற்கெனவே இறங்கியிருந்தார். மாநிலங்களவைத் தலைவர் வெங்கய்ய நாயுடு அம்மனுவைத் தள்ளுபடி செய்தார். உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டும், ராகுல் காந்தியின் நோக்கம் நிறைவேறவில்லை.
உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி மீது ராகுலுக்கு இருந்த சந்தேகம் நீடித்து வந்த நிலையில், கர்நாடக மாநில ஆளுநரின் அழைப்பாணையை எதிர்த்து, உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவிடமே மேல்முறையீடு செய்யப்பட்டது. தலைமை நீதிபதி நடுநிலையோடு அவ்வழக்கை மூன்று நீதிபதிகளைக் கொண்ட அமர்வுக்கு அனுப்பி வைத்தார். வழக்கை விசாரித்த அந்நீதிபதிகள் கர்நாடக மாநில ஆளுநர் அளித்த 15 நாள் அவகாசத்தை, 48 மணி நேரமாகக் குறைத்து, பெரும்பான்மையை நிரூபிக்குமாறு எடியூரப்பாவுக்கு உத்தரவிட்டனர்.


குறைந்த அவகாசத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல், வாக்கெடுப்புக்கு முன்பாகவே முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு துயரம் கப்பிய முகத்தோடு எடியூரப்பா வெளியேறினார்.


உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு சரியானது என்று ராகுல் காந்தியே உரத்துப் பாராட்டினார். உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியின் மீதுதான் ராகுல் காந்தி முன்னர் குற்றம் சுமத்தினார் என்பது நினைவுகூரத்தக்கது.
உச்சநீதிமன்றத் தீர்ப்பு பாதகமாக வழங்கப்பட்டால் குறை கூறுவதும், சாதகமாக வருமானால் பாராட்டுவதும் சராசரிகளுக்கு உரியவை.


கர்நாடக ஆளுநர் களங்கமுள்ளவர் என்றும், அவர் பி.எஸ். எடியூரப்பாவுக்குச் சார்பாக ஆட்சியமைக்க முதலில் அவரை அழைத்துவிட்டதாகவும் ராகுல்காந்தி குறை கூறினார். சர்க்காரியா கமிஷன் வழிகாட்டுதல்படியும் சட்ட வல்லுநர்களின் ஆலோசனைப்படியும் முதலில் ஆட்சியமைக்கத் தனிப்பெரும் கட்சியை அழைக்கலாம். அடுத்து கூட்டணியை அழைக்கலாம். தேர்தலுக்கு முந்திய கூட்டணியாக இருந்தால், முதலில் அதையே அழைக்கலாம். காங்கிரஸ் – ஜனதா தளம் கூட்டணி தேர்தலுக்குப் பிந்தைய கூட்டணிதான்.


ஆனாலும் ஆளுநரை பா.ஜ.க. சார்பானவர் என்றே ராகுல் பிரச்சாரப்படுத்தினார். சட்டசபையில் எடியூரப்பா பதவி விலகிய பிறகு, ஜனதா தளத் தலைவர் குமாரசாமியை அரசமைக்க இதே ஆளுநர்தான் அழைத்தார். குமாரசாமிக்கு முதலமைச்சராகப் பதவிப் பிரமாணமும் இதே ஆளுநர்தான் செய்து வைத்தார்.
குற்றம்சாட்டப்பட்ட ஆளுநர் – இப்போது குற்றமற்றவராகி ராகுலின் மதிப்பிற்குரியவராகவும் ஆகிவிட்டார்.


1975 – இல் அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் இந்திரா காந்தி தேர்தலில் வெற்றி பெற்றது செல்லாது என்று தீர்ப்பு வெளியாகி உச்சநீதிமன்றமும் அதை உறுதிப்படுத்திய பிறகு, பிரதமர் இந்திரா எமர்ஜென்சி' என்ற நெருக்கடி நிலையை ஜனாதிபதியை பிரகடனம் செய்ய வைத்தார்.


லோக்நாயக் ஜெயபிரகாஷ் நாராயணன், பாபு ஜெகஜீவன் ராம், சோஷலிஸ்ட் தலைவர் ஜார்ஜ் பெர்ணான்டஸ் முதலிய தலைவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். பத்திரிகைகள் தணிக்கை செய்யப்பட்டன. சுதந்திர இந்தியாவில் நெருக்கடி நிலையை அறிவித்த பிரதமர் இந்திராவை, சர்வாதிகாரி' என்று யாரும் சொல்வதில்லை. ஆனால் பிரதமர் மோடியை சர்வாதிகாரி' என்று ராகுல்காந்தி சொல்கிறபோது, தமது பாட்டியைத் தனக்கு வசதியாக அவர் மறந்துவிட்டதாகவே தெரிகிறது.


பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக ஏறக்குறைய எல்லா எதிர்க்கட்சிகளும் பெங்களூரில் ஒன்று திரண்டு மேடையில் உற்சாகமாக கைகளை உயர்த்தி, மோடி ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வரத் திட்டமிட்ட முதல் காட்சியை ஊடகங்களில் பார்த்தோம்.


அகிலேஷ் யாதவ், சோனியா காந்தி, தேவகவுடா, மாயாவதி, சந்திரபாபு நாயுடு, சந்திரசேகர ராவ், மம்தா பானர்ஜி, சீத்தாராம் யெச்சூரி, ஸ்டாலின் முதலியோருக்கு மோடிதான் முதல் எதிரி என்பதில் எந்த ஐயமும் இல்லை. ஆனால், மோடியை அப்புறப்படுத்திவிட்டு அந்த இடத்தில் அமரவைக்க வேண்டிய இன்னொருவரைப் பற்றி யாரும் எந்த முடிவுக்கு வர முடியவில்லை. மர்மம் நிறைந்த இந்த மாய ஒற்றுமையை வெளிக்காட்டிக் கொள்வதற்குகான காரணம், இச்சந்தர்ப்பம் இன்னொரு முறை சாத்தியப்படுமா என்ற சந்தேகம்தான்.


சர்க்கஸில் ஆடும், புலியும் அருகருகே நிற்பதைப் பார்த்திருக்கிறோம். விதான் செளதா அரங்கத்தில் இவர்கள் திரண்ட விதம் அதைத்தான் நினைவூட்டியது. சென்ற மாதம் நடந்த மேற்கு வங்க உள்ளாட்சித் தேர்தலில் 40 பேர் படுகொலையானதைக் கண்டித்து அறிக்கைவிட்ட தோழர் சீத்தாராம் யெச்சூரி, மம்தா பானர்ஜி நின்ற அதே மேடையில் நிற்கிறார். ராகுலை மாற்றுப் பிரதமராக ஏற்க முடியாது என்று அடுத்த இரு நாள்களில் அறிக்கை விட்ட சந்திரபாபு நாயுடுவும் அதே மேடையில். நிதிஷ்குமாருக்கு நிழலாக உள்ள பா.ஜ.க.வை ஒழித்தால், நிதிஷ்குமார் நிர்கதியாகப் போவார் என எண்ணுகிற பிகார் லல்லு பிரசாத் யாதவின் மகன் தேஜஸ்வியும் அதே மேடையில்.


அதர்மக் கூட்டணி' என்று இதனைக் கூற ஒரே ஒரு காரணம் போதும். கர்நாடகத் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர்களை 224 தொகுதிகளிலும் பா.ஜ.க.வைவிடக் கடுமையாக எதிர்த்த கட்சி மதச்சார்பற்ற ஜனதா தளம் (ம.ஜ.த.)தான். 
தேர்தலுக்குப் பிறகு 78 இடத்தில் ஜெயித்த காங்கிரஸ், 37 இடத்தில் மட்டுமே ஜெயித்த ம.ஜ.த.வுடன் நிபந்தனையற்ற கூட்டணிக்காக சோனியா காந்தியே வலிய வந்து தொலைபேசியில் பேசியதாக தேவகவுடாவே கூறினார். பா.ஜ.க. ஆட்சியை மத்தியில் நீடிக்கவிடக் கூடாது என்பதும், காங்கிரஸ் இல்லாத மத்திய ஆட்சி அமைய வேண்டும் என்பதும் வெறுப்பு அரசியலின் வெளிப்பாடாகும். 
சுமத்தப்பட்ட குற்றத்தைச் சந்தேகத்துக்கு இடமளிக்காமல் அரசுத் தரப்பு நிரூபிக்கத் தவறுமானால், சந்தேகத்தின் பலனை சம்பந்தப்பட்ட குற்றம்சாட்டப்பட்டவருக்கே அளித்து, அவர் விடுதலை செய்யப்படுவதைப் பல வழக்குகளில் பார்த்திருக்கிறோம்.


அரசியல்வாதிகளில் பலர் இப்படித்தான் சந்தேகத்தின் பலனால் சமூகத்தில் உலவக் கூடியவர்களாகத் தெரிகின்றனர். நபர்களைவிட நாடு பெரிது; பதவிகளைவிடப் பணிகளே முக்கியம்.


தேசத்துக்கு இப்போதைய அவசரத் தேவை, வளர்ச்சி. அதற்குத் தேவை வேலைவாய்ப்புகளை வழங்கும் தொழிற்சாலைகள். அதற்குத் தேவை, வெளிநாட்டு மூலதனம். அதற்குத் தேவை, நிலையான ஆட்சி. அதற்குத் தேவை மத்தியிலும் மாநிலங்களிலும் வாரிசு இல்லாத ஆட்சி.

நன்றி தினமணி

நன்றி சிதம்பரநாதன்

Leave a Reply