தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் போட்டியிடும் பாஜக மற்றும் கூட்டணிகட்சி வேட்பாளர்களை ஆதரித்து ஓசூர் அந்திவாடியில் நடந்த பொதுக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டார். கூட்டத்தில் அவர் பேசியதாவது:

தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டப் பேரவை தேர்தல் வித்தியாசமான தேர்தலாகும். தமிழக மக்கள் அய்யாவிடம் கோபம்கொண்டால் அம்மாவிற்கும், அம்மாவிடம் கோபம் கொண்டால் அய்யாவிற்கும் வாக்களித்து ஆட்சியில் அமர வைத்துவந்தனர்.

தற்போது, தமிழக வரலாற்றில் முதல் முறையாக 3-வது சக்தி வெளியேவந்துள்ளது. அந்த 3-வது சக்தி பாஜக. தமிழகமக்களுக்கு எவ்வித நன்மையும் கிடைக்காமல் சோகத்தில் உள்ளனர். முன்பெல்லாம் இந்தியாவில் எங்காவது பிரச்சினை என்றால் 3 மாதத்திற்கு பிறகுதான் டெல்லிக்கு தெரியவரும். ஆனால், சென்னையில் வெள்ளபாதிப்பு ஏற்பட்டபோது நான் உடனே வந்து  பார்த்தேன். வெள்ள பாதிப்பின் போது, தமிழக மக்கள் ஒருவருக்கு ஒருவர் உதவிகரம் நீட்டினர்.

இந்த தேர்தல் வெற்றிக்காக நடக்கும் தேர்தல் அல்ல. தமிழகமக்களின் சூழ்நிலையை மாற்றக் கூடிய தேர்தல். தமிழகத்தில் லஞ்சம் தலை விரித்தாடுகிறது. லஞ்சத்தை ஒழிக்கவும், இளைஞர்களை முன்னேற்ற பாதையில் கொண்டுசெல்லவும் பாஜக ஆட்சி அமையவேண்டும். தமிழக அரசியல் வாதிகள் லஞ்சத்தில் மூழ்கி உள்ளனர். பாஜக லஞ்சத்திற்கு எதிராக உள்ளது.

மத்தியில் கடந்த 2 ஆண்டு பாஜக ஆட்சியில் லஞ்சம்இல்லாத ஆட்சியாக செயல்பட்டு வருகிறது. 2 வருடங்களுக்கு முன்பு செய்தித்தாளில் தினமும் ஊழல், கருப்புபணம் குறித்து செய்திகள் வெளியாகி கொண்டிருந்தது. கடந்த ஆட்சியில் ரூ.1.76 கோடி நிலக்கரி ஊழல் நடந்தது. பாஜக ஆட்சியில் நியாயமான உற்பத்தி, ஒருரூபாய் கூட லஞ்சம் இல்லாமல் தொழிற்சாலைகளுக்கு நிலக்கரி வழங்கிவருகிறோம். இதன் மூலம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கிறது.

இதே போல் 2 ஜி, 3 ஜியில் காற்றை திருடி பலகோடி ஊழல் செய்தனர். இந்த ஊழலில், தமிழகத்தை சேர்ந்த சிலருக்கு முக்கிய பங்கு உள்ளது. கடந்த ஆட்சியில் விவசாயிகளின் பெயரில் தயாரிக்கப்பட்ட யூரியா, தனியார் தொழிற் சாலைக்கு சென்றது. இதனால் விவசாயிகள் கள்ளச் சந்தையில் வாங்கும் நிலை ஏற்பட்டது. தற்போது, யூரியா விவசாயிகளுக்கு நேரடியாக கிடைக்கிறது.

காஸ் மானியத்தில் ரூ.21 கோடி ஊழல் நடந்தது. பாஜக அரசில் காஸ்மானியம் நேரடியாக ஏழைமக்களின் வங்கி கணக்கில் சேரும் வகையில் நடவடிக்கை எடுத்துள்ளோம்.

ஏழை மக்களின் பசியைபோக்க மாம்பழம் கொடுத்தால் பசி தீருமா. மாஞ்செடி கொடுத்து அதனை வளர்க்கத் தேவையான உதவிகளை செய்தால்போதும், மரம் வளர்ந்து கனி கிடைக்கும்.

ஹெலிகாப்டர் ஊழல் செய்தவர்களுக்கு தண்டனை வழங்கவேண்டும். ஏழை மக்களுக்கு மூடிக் கிடந்த வங்கி கதவுகள், நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் திறந்து விட்டோம். சிறு வியாபாரிகளுக்கு வங்கிகள் கடன் வழங்குவதில்லை. அதற்காகதான் முத்ரா யோஜனா திட்டம் கொண்டு வந்துள்ளோம்.

காஸ் மானியம் விட்டு கொடுக்கக்கோரி மக்களிடம் கோரிக்கை வைத்தேன். இதனை ஏற்று 1 கோடி மக்கள் மானியம் வேண்டாம் என விட்டுகொடுத்துள்ளது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. நாட்டில் 5 கோடிபெண்கள் விறகு அடுப்பில் சமைக்கின்றனர். அவர்கள் புகையால் பாதிக்கப்பட்டு வந்தனர். அவர்களுக்கு எனது யோசனையில் காஸ்இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பாஜக வேட்பாளர்களை வெற்றிபெற செய்ய வேண்டும். மத்திய அரசின் அனைத்து திட்டங்களும் தமிழகத்திற்கு கிடைக்க முன்னுரிமை வழங்கப்படும் இவ்வாறு அவர் பேசினார்.

Leave a Reply