பாகிஸ்தான் மற்றும் சீனா வுடனான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ள நிலையில், வெளிநாடுகளுக்கான இந்தியதூதர்கள் மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி நேற்று உரையாற்றினார்.

வெளிநாடுகளுக்கான இந்திய தூதர்கள் 4 நாள் மாநாடு (8-வது) டெல்லியில் நேற்றுமுன்தினம் தொடங்கியது. இதை மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தொடங்கி வைத்தார். உலகம் முழுவதும் பணிபுரிந்து வரும் சுமார் 120 நாடுகளுக்கான இந்தியதூதர்கள் இதில் பங்கேற்றுள்ளனர்.

இரண்டாம் நாளான நேற்று பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு உரையாற்றியதாக வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் கோபால் பாக்லே நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்தார்.

வல்லரசு நாடுகளுடனான உறவை பலப்படுத்தி கொள்வது, பாகிஸ்தான், சீனா நாடுகளுடனான உறவில் ஏற்பட்டுள்ள உரசல் உள்ளிட்ட பல்வேறு வெளியுறவுக்கொள்கை தொடர்பான பிரச்சினைகள் குறித்து இந்த மாநாட்டில் விரிவாக விவாதிக்கப்பட்டு வருகிறது.

சர்வதேசளவில் ஏற்பட்டுள்ள முக்கிய முன்னேற்றங்கள் மற்றும் அதற்கேற்ப இந்தியா தனதுகொள்கையை எவ்வாறு உருவாக்கிக்கொள்ள வேண்டும் என்பது குறித்து இதில் ஆலோசிக்கப்பட உள்ளது.

தாங்கள் பணியாற்றும் நாடுகளுடனான இந்தியாவின் உறவு குறித்து சம்பந்தப்பட்ட நாடுகளின் தூதர்கள் இந்தமாநாட்டில் விரிவாக எடுத்துரைக்க உள்ளனர். குறிப்பாக, அமெரிக்க, ரஷ்யா ஆகிய வல்லரசு நாடுகளுடனான உறவுபற்றி அந்த நாடுகளுக்கான தூதர்கள் விளக்குவர்.

சமீபத்தில் ஜம்முகாஷ்மீர் எல்லையில் 2 ராணுவ வீரர்களின் தலையை பாகிஸ்தான் ராணுவம் துண்டித்து கொலைசெய்த நிலையில் இந்த மாநாடு நடைபெறுகிறது. இதில் இந்த விவகாரம் குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளது.

மேலும் வளமான ஆப்பிரிக்க மற்றும் வளைகுடா நாடுகளுடனான உறவை பலப் படுத்துவது மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் அரசியல் நிலவரம் குறித்தும் இந்த மாநாட்டில் விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply