வெளிநாடுகளில் இருந்து உதவிகளை பெறுவதில்லை என்றகொள்கையை கடந்த காங்கிரஸ் அரசில் இருந்து 14 ஆண்டுகளாக மரபாக அரசு பின்பற்றிவருகிறது என்று மத்திய அமைச்சர் அல்போன்ஸ் கண்ணன் தானம் விளக்கம் அளித்துள்ளார்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளமாநிலத்துக்கு, பல்வேறு மாநிலங்களில் இருந்து நிதியுதவியும், நிவாரணப் பொருட்களும் வழங்கப்பட்டு வருகின்றன. மத்திய அரசுசார்பில் இதுவரை 680 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

ஆனால், கேரள அரசு கோரிக்கை விடுக்காமலே, கேரளமாநிலத்தின் நிலையை பார்த்து, ஐக்கிய அரபு அமீரக அரசு 700 கோடி ரூபாய் நிதியு தவியை மாநில புனரமைப்புக்கு தருவதாக அறிவித்தது. ஆனால், இந்த அறிவிப்புக்கு நன்றிதெரிவித்த மத்திய அரசு, வெளிநாடுகளில் இருந்து உதவி பெறுவதில்லை என்று கூறி மறுத்துவிட்டது.

கடந்த 14 ஆண்டுகளாக வெளிநாடுகளில் இருந்து எந்த விதமான நிதியுதவியையும் பெறுவதில்லை என்பதை கொள்கையாக வைத்திருக்கிறது அரசு என்று விளக்கம் அளித்தது. ஆனால், மத்திய அரசின் இந்த அறிவிப்புக்குக் கேரள அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்தது.

போதுமான உதவியை மத்திய அரசு வழங்காத போது, தாமாக முன்வந்து அளிக்கும் ஐக்கிய அரசு அமீரக உதவியை பெறவிடாமல் மறுப்பது அரசியல் காழ்ப் புணர்ச்சியாகும் என்று கேரள அரசியல்வாதிகள் விமர்சித்தனர்.

இதுதொடர்பாக கேரள நிதியமைச்சர் தாமஸ் ஐசக் ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில், மழையால் பாதிக்கப்பட்ட எங்கள் மாநிலத்தின் புனரமைப்புக்கு 2200 கோடி ரூபாய் கேட்டிருந்தோம், ஆனால், மத்தியஅரசு 600 கோடி ரூபாய் மட்டுமே அளித்தது.

ஐக்கிய அரபு அமீரகத்திடம் இருந்து கேரள அரசு உதவி ஏதும் கேட்க வில்லை. அவர்கள் தாமாகவே முன்வந்து உதவி அளிக்கிறார்கள் எனத்தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், கேரள அரசியல்வாதிகளுக்கு விளக்கம் அளித்து கேரள மாநிலத்தைச் சேர்ந்தவரும், மத்திய அமைச்சருமான அல்போன்ஸ் கண்ணன்தானம் டெல்லியில் நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

வெளிநாடுகளில் எந்தவிதமான நிதியுதவிகளையும் பெறுவதில்லை என்றமுடிவு, கடந்த 14 ஆண்டுகளுக்கு முன் கடந்த காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக்கூட்டணி அரசால் எடுக்கப்பட்டது. அப்போது இருந்து, இந்தக்கொள்கையை ஒரு மரபாக அரசு பின்பற்றி வருகிறது.

முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் காலத்தில், கடந்த 2004-ம் ஆண்டு சுனாமி ஏற்பட்டபோது ஏராளமான பொருட்சேதங்கள், உயிரிழப்புகள் ஏற்பட்டன. அப்போது, பல்வேறுநாடுகள் இந்தியாவுக்கு முன்வந்து நிதியுதவி அறிவித்தன. ஆனால், அந்த நிதியுதவியைப் பெறுவதற்கு அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் மறுத்துவிட்டார். இதை அப்போதிருந்தே அரசு கொள்கையாக பின்பற்றி வருகிறது இவ்வாறு அல்போன்ஸ் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.