ஸ்மார்ட்சிட்டி திட்டத்துக்கான 3-வது பட்டியலை மத்தியஅரசு வெளியிட்டது. இதில் தமிழகத்தின் மதுரை, சேலம், தஞ்சாவூர், வேலூர் மற்றும் பிரதமர் மோடியின் தொகுதியான வாரணாசி உள்ளிட்ட 27 நகரங்கள் இடம் பிடித்துள்ளன.

இந்தப்பட்டியலை வெளியிட்ட மத்திய நகர்ப்புற மேம்பாட்டுத்துறை அமைச்சர் எம்.வெங்கய்ய நாயுடு கூறும்போது, “ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் நடப்பு நிதியாண்டில் 12 மாநிலங்களை சேர்ந்த 27 நகரங்கள் தேர்வு செய்யப் பட்டுள்ளன. இதற்கான போட்டியில் 63 நகரங்கள் இடம்பிடித்திருந்தன. எனினும் பல்வேறு அளவுகோல்களின் அடிப்படையில் 3 சுற்றுகளாக நடைபெற்ற போட்டியின் அடிப்படையில் இந்தப்பட்டியல் இறுதி செய்யப் பட்டது” என்றார்.

இதில் அதிகபட்சமாக மகாராஷ்டிர மாநிலத்தைச்சேர்ந்த 5 நகரங்கள் இடம்பிடித்துள்ளன. இதுபோல தமிழ்நாடு, கர்நாடகாவின் தலா 4, உத்தரப்பிரதேசத்தின் 3, பஞ்சாப், ராஜஸ்தான், மத்தியப் பிரதேசத்தின் 2, ஆந்திரா, ஒடிசா, குஜராத், நாகாலாந்து, சிக்கிம் தலா 1 நகரங்கள் இடம்பிடித்துள்ளன.

ஆக்ரா, அஜ்மிர், அமிர்தசரஸ், அவுரங்காபாத், கல்யான்-ஜலந்தர்,கான்பூர், டோம்பிவலி, குவாலியர், ஹூப்ளி-தார்வாட், கோஹிமா, கோடா, மதுரை, மங்களூரு, நாக்பூர், நம்சி, நாசிக், ரூர்கேலா, சேலம், ஷிமோகா, தானே, தஞ்சாவூர், திருப்பதி, துமகூரு, உஜ்ஜயினி, வடோதரா, வாரணாசி, வேலூர் ஆகியவை ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் 3-வது பட்டியலில் இடம்பிடித்துள்ள நகரங்கள் ஆகும்.

ஸ்மார்ட்சிட்டி திட்டத்தை மத்திய அரசு அறிமுகம்செய்தது. இதன்படி, நாடுமுழுவதும் 100 நகரங்கள் அனைத்து அடிப்படை வசதிகளுடன் கூடிய நகரங்களாக தரம் உயர்த்தப்படும். இதற்காக 5 ஆண்டுகளில் மத்தியஅரசு தலா ரூ.500 கோடியை வழங்கும். இதே அளவுதொகையை சம்பந்தப்பட்ட மாநில அரசுகளும் ஒதுக்கும். மீதம் உள்ள தொகை கடன் மற்றும் இதரவகையில் திரட்டப்படும்.

இது வரை 3 கட்டமாக அறிவிக்கப்பட்ட பட்டியலில் மொத்தம் 27 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை சேர்ந்த 60 நகரங்கள் இடம் பிடித்துள்ளன. இந்த நகரங்களை ஸ்மார்ட்சிட்டியாக தரம் உயர்த்த மொத்தம் ரூ.1.44 லட்சம் கோடி முதலீடு செய்யப்படும் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

உத்தராகண்ட் மற்றும் ஜம்முகாஷ்மீர் உள்ளிட்ட 9 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை சேர்ந்த நகரங்கள் இந்தப்பட்டியலில் இது வரை இடம் பெறவில்லை.

Leave a Reply