நாடு முழுவதும் 20 நகரங்களில் 'ஸ்மார்ட் சிட்டி' திட்டப்பணிகளை பிரதமர் நரேந்திர மோடி புனேயில் நேற்று தொடங்கிவைத்தார். அதன்படி முதல்கட்டமாக ரூ.1,770 கோடியில் 83 திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

கடந்த 2014-ம் ஆண்டு மத்திய பட்ஜெட்டில், நாடுமுழுவதும் 100 ஸ்மார்ட் சிட்டிகள் உருவாக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இத்திட்டத்துக்காக ரூ.48 ஆயிரம் கோடி முதலீடுசெய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இதில் முதல் கட்டமாக புனே, புவனேஸ்வரம், கொச்சி, விசாகப்பட்டினம், காக்கிநாடா, சென்னை, கோவை உட்பட 20 நகரங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

இந்தநகரங்களை ஸ்மார்ட் சிட்டியாக மாற்றுவதற்கான முதல்கட்டப் பணிகளை மகாராஷ்டிர மாநிலம் புனேயில் பிரதமர் நரேந்திர மோடி நேற்று தொடங்கிவைத்தார். அதன்படி புனேயில் 14 திட்டப்பணிகளும் இதர 19 நகரங்களில் 69 திட்டப் பணிகளும் மேற்கொள்ளப்பட உள்ளன. இந்தத்திட்டங்களின் மொத்த மதிப்பு ரூ.1,770 கோடியாகும்.

ஸ்மார்ட் சிட்டி தொடர்பான பொதுமக்களுக்கான சிறப்புபோட்டியையும் பிரதமர் மோடி தொடங்கிவைத்தார். இதில் வெற்றி பெறுபவர்களுக்கு ரூ.10 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம்வரை பரிசு வழங்கப்பட உள்ளது.

விழாவில் பிரதமர் மோடி பேசியதாவது: மத்திய அரசின் மிகப் பெரிய திட்டங்களில் ஸ்மார்ட் சிட்டியும் ஒன்றாகும். மக்களின் தொழில் திறன் மேம்படும்போது இந்தியாவில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படும்.

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் நகரங்களை எவ்வாறு தேர்வுசெய்தீர்கள் என்று சிலர் என்னிடம் கேட்டனர். நாங்கள் எந்த நகரத்தையும் தேர்வு செய்ய வில்லை. இந்தப் பெருமை எல்லாம் அந்தந்த நகரங்களின் மக்களையே சேரும். ஒவ்வொரு நகரமக்களின் உழைப்பை அடிப்படையாக கொண்டே நகரங்கள் தேர்வுசெய்யப்பட்டுள்ளன.

கிராமங்களை விட்டு வெளியேறி நகரங்களில் மக்கள் குடியேறத் தொடங்கியிருப்பது மிகப்பெரிய பிரச்சினையாக கருதப்பட்டது. என்னைப் பொறுத்த வரை இது பிரச்சினையோ, தடைக் கல்லோ இல்லை. நகர மயமாதல் வளர்ச்சிக்கான ஒரு வாய்ப்பு. அதை சரியாகப் பயன் படுத்திக் கொள்ள வேண்டும்.

ஒவ்வொரு நகருக்கும் தனித்தன்மைகள் இருக்கின்றன. அதை திறம்பட பயன்படுத்தவேண்டும். வறுமைக்கு எதிராக அனைத்து நகரங்களும் தீரமாகப் போரிடவேண்டும். வளர்ச்சிக்கு அடித்தளமிட்டு உழைக்கவேண்டும். இதன் மூலம் நாம் குப்பையில் இருந்து கோபுரத்தை உருவாக்க முடியும்.

Leave a Reply