ஸ்ரீகுருஜி கோல்வால்கர்

…..’ஹிந்து’ என்ற சொல் சமீபகாலத்தில் தோன்றிய சொல் என்பதோ, அது அந்நியர்களால் நமக்கு அளிக்கப்பட்ட பெயர் என்பதோ சரியல்ல. உலகிலேயே மிகப்பழமையான நூலான ரிக் வேதத்தில் வரும் ’ஸப்தஸிந்து’ என்ற பெயர், நமக்கும் நம் நாட்டிற்கும் அடைமொழியாகப் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளதைக் காண்கிறோம். மேலும், சம்ஸ்கிருத மொழியில் உள்ள ‘ஸ’ என்ற எழுத்து, புராதன மொழிகளிலும் ஐரோப்பிய மொழிகளிலும் ‘ஹ’ என்று மாறி வருவது நாம் அறிந்ததே. எனவே அந்தச்சொல், ‘ஹப்தஹிந்து’ என்று மாறி, பிறகு ஹிந்து என்ற சொல்லாக வழங்கி வருகிறது. ‘ஹிந்து’ என்ற சொல் நம் முன்னோர் இட்ட பெயர். பிற்காலத்தில் அந்நியர்களும் இதே பெயராலேயே நம்மை அழைத்தார்கள்.

பிருகஸ்பதி ஆகமத்தின்படி, ஹிமாலயம் என்பதிலிருந்து ‘ஹி’ என்ற எழுத்தையும் இந்து ஸரோவர் (குமரிக்கடல்) என்பதிலிருந்து (இ)ந்து என்ற எழுத்துக்களையும் எடுத்துக்கொண்டு ‘ஹிந்து’ என்ற பெயரைத் தோற்றுவித்திருக்கிறார்கள். இவ்வாறு தேசம் முழுவதையும் குறிக்கும் சொல்லாகிறது ‘ஹிந்து’.

ஹிமாலயம் ஸமாரப்ய யாவதிந்து ஸரோவரம்
தம் தேவநிர்மிதம் தேசம் ஹிந்துஸ்தானம் ப்ரசக்ஷ்யதே (பிருகஸ்பதி ஆகமம்)

(இமயமலை முதல் இந்து ஸரோவரம் (குமரிக்கடல்) வரை பரந்துள்ளதும், இறைவனால் தோற்றுவிக்கப்பட்டதுமான நிலப்பரப்பு ஹிந்துஸ்தானம் என்று அழைக்கப்படுகிறது)

நெருக்கடிகள் மலிந்த ஆயிரம் ஆண்டு காலத்தில் ஹிந்து என்ற சொல்தான் நம்மைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. பிருதிவிராஜ் காலத்திலிருந்து நம் நாட்டுக் கவிஞர்கள், சரித்திர ஆசிரியர்கள், சமுதாயத் தலைவர்கள், அரசியல் நிபுணர்கள் அனைவரும், நம்மையும் நமது தர்மத்தையும் ‘ஹிந்து’ என்ற பெயரால்தான் குறிப்பிட்டு வருகின்றனர். சுதந்திரப் போராட்ட வீர ர்களான குரு கோவிந்த சிம்மன், வித்யாரண்யர், சிவாஜி போன்றோரின் கனவு ‘ஹிந்து ஸ்வராஜ்ய’த்தை நிறுவுவதே. ‘ஹிந்து’ என்ற சொல் அப்படிப்பட்ட வீரர்களின் லட்சிய வாழ்க்கை, தீரச் செயல்கள் அனைத்தையும் நம் நினைவிற்குக் கொண்டு வருகிறது. இவ்னவாறு ‘ஹிந்து’ என்ற சொல், நம் மக்களின் ஒருமைப்பாட்டையும் உயர்வையும் சிறப்பையும் குறிக்கும் சொல்லாக உள்ளது. நம் சமுதாயத்தைக் குறிப்பது ‘ஹிந்து’ என்ற சொல்லே.

நூல் : ஸ்ரீகுருஜி சிந்தனைக் களஞ்சியம், பாகம் 11, பக்.129-130

Comments are closed.