பிகாரில் பக்தர்களை பலிகொண்ட ரயில்விபத்துக்கு மாநில அரசைக் குற்றம்சாட்டியுள்ள லோக் ஜனசக்தி, ராஷ்ட்ரீய ஜனதாதளக் கட்சிகள், சம்பவத்துக்கு பொறுப்பேற்று முதல்வர் நிதீஷ்குமார் பதவி விலகவேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளன. ஆளும் ஐக்கிய ஜனதா தளத்துடன் கூட்டணியிலிருந்து சமீபத்தில் வெளியேறியுள்ள பா.ஜ.க-வும் இச்சம்பவம்தொடர்பாக பிகார் அரசைக் குறைகூறியுள்ளது.
திங்கள்கிழமை மாநிலங்கள் அவையில் இந்தவிவகாரத்தை எழுப்பிய லோக் ஜன சக்தியின் தலைவர் ராம்விலாஸ் பாஸ்வான் மற்றும் ராஷ்ட்ரீய ஜனதாதளக் கட்சியின் ராம்கிருபால் யாதவ் ஆகியோர், தமாரா காட்டில் ராஜ்யராணி எக்ஸ்பிரஸ் மோதி ஏராளமானவர்கள் இறந்துள்ளனர். ஆனால் 10 மணி நேரமாகியும் சிறப்பான ஆட்சிநடத்துவதாகக் கூறிக்கொள்ளும் நிதீஷ்குமார் அரசு இதுவரை எந்தமீட்பு மற்றும் நிவாரண பணிகளையும் மேற்கொள்ளவில்லை என்று குற்றம்சாட்டினர்.
அவையிலிருந்த பா.ஜ.க உறுப்பினர்களும் அவர்களுடன் இணைந்து பிகார் அரசுக்கேதிராக கோஷமிட்டனர்.பாஜக மாநிலங்களவை துணைத்தலைவர் ரவிசங்கர் பிரசாத், விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தாராளமாக நிதியுதவி அளிக்க வேண்டும் எனவும், விபத்துகுறித்து விசாரணை நடத்தி, கவனமில்லாமல் செயல் பட்டவர்களை தண்டிக்கவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.