பாஜகவில் இணைந்துள்ள 10 கோடி உறுப்பினர்களையும் கட்சியின் ஊழியர்களாக மாற்ற நிர்வாகிகள் பாடுபடவேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக் கொண்டார்.

பாஜகவின் 2 நாள் தேசியசெயற்குழு கூட்டம் பெங்களூருவில் வெள்ளிக்கிழமை தொடங்கவுள்ளது. இதையொட்டி வியாழக் கிழமை பெங்களூரு வந்த, பிரதமர் நரேந்திர மோடி, கட்சி நிர்வாகிகளிடையே உரையாற்றினார்.

அப்போது மோடி பேசியதாவது:

பாஜக.,வை மத்தியில் ஆட்சியில் அமரவைத்த 17 கோடி வாக்காளர்களில் 10 கோடிபேரை கட்சியின் உறுப்பினர்களாக பாஜக மாற்றியுள்ளது. இதற்காக கட்சி நிர்வாகிகளுக்கு வாழ்த்துகள். இந்த 10 கோடி புதிய உறுப்பினர்கள் தான் கட்சியில் முதன்மையானவர்கள். அவர்களுக்கு உரியமரியாதை அளிக்கப்பட வேண்டும்.

தேர்தலில் பாஜகவுக்கு வாக்களித்தவர்களை, கட்சி நடவடிக்கையில் ஈடுபடுத்தும் தொண்டர்களாக மாற்றியிருப்பது மிகப்பெரிய சாதனையாகும்.

சமூகத்திற்காக கட்சி முன்னெடுக்கும் நடவடிக்கைகளில் புதிய உறுப்பினர்களை பங்குபெறச்செய்ய வேண்டும்.

இந்த 10 கோடி உறுப்பினர்களில் குறைந்த பட்சம் 10,000 பேரையாவது, தூய்மை இந்தியா திட்டத்துக்கான பிரசாரத்திற்கு எதிர்பார்க்கிறேன்.

பெண் குழந்தைத் திட்டம், நேரடி மானியத்திட்டம் உள்ளிட்டவற்றை மக்களிடம் கொண்டுசெல்வதில் தொண்டர்கள் துணையாக இருக்க வேண்டும்.

முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு மத்திய அரசு பாரத ரத்னாவிருது வழங்கியதில் மக்களும், பாஜக தொண்டர்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதன் மூலம் நமதுபலம் கூடியிருக்கிறது.

ராம் மனோகர் லோஹியா, தீன்தயாள் உபாத்யாய உள்ளிட்டோர் காந்தியை போலவே வாழ்ந்தவர்கள். அவர்கள் எப்போதும், சமூகத்தின் அடித்தட்டு மனிதர்கள் குறித்து சிந்தித்தனர் என்றார்.

Leave a Reply