தமிழகத்தில் எந்தநேரத்தில் தேர்தல் வந்தாலும் அதை சந்திக்க தயாராக இருப்பதாக, தமிழக பாஜக தலைவர் டாக்டர் தமிழிசை சௌந்தர ராஜன் தெரிவித்துள்ளார் .

பாஜக நாடுமுழுவதும் 10 கோடி உறுப்பினர்களைச் சேர்த்து உலகிலேயே பெரியகட்சி என்ற அந்தஸ்தைப் பெற்றுள்ளது. இதனை அனைத்து மாநில பாஜக தலைமை அலுவலகங்களிலும் கொண்டாடும்படி கட்சிமேலிடம் கேட்டுக் கொண்டது.

அதன்படி, சென்னையிலுள்ள மாநில பாஜக தலைமையகமான கமலாலயத்தில் மாநிலத்தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை இனிப்பு வழங்கிக் கொண்டாடினர்.

அதைத்தொடர்ந்து தமிழிசை செளந்தரராஜன் செய்தியாளர்களிடம் கூறியது:

பாஜகவில் 10 கோடி உறுப்பினர்களைச் சேர்த்து உலகிலேயே பெரியகட்சி என்று நிரூபித்துள்ளோம். இத்தகைய சாதனைக்குத் திட்டமிட்ட பிரதமர் நரேந்திரமோடி, அதைச் செயல்படுத்திய அகில இந்தியத் தலைவர் அமித்ஷா, உழைத்த கட்சிதொண்டர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.

தமிழகத்தில் "மிஸ்டுகால்' மூலம் இது வரை 35 லட்சம் உறுப்பினர்கள் சேர்ந்துள்ளனர். இன்னும் 10 நாள்கள் உள்ளதால் உறுப்பினர்கள் எண்ணிக்கை மேலும் உயரும் என எதிர்பார்க்கிறோம்.

எவ்வளவு உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டாலும், அவர்கள் அனைவரையும் நேரில்சென்று சந்திக்கும் "மகா மக்கள் தொடர்பு இயக்கம்' 2 மாதங்கள் நடைபெற உள்ளது. மாவட்ட அலுவலகங்களில் சனிக் கிழமை தோறும் நடைபெறவுள்ள இந்த முகாம்களில் மக்கள் தங்கள் குறைகளை மனுக்கள் மூலம் தெரிவிக்கலாம்.

தமிழகத்தில் பல மருத்துவ மனைகளில் அடிப்படை வசதிகூட இல்லை. இது குறித்து அனைத்து மருத்துவ மனைகளுக்கும் நேரில் சென்று ஆய்வு செய்வதற்காக பாஜக சார்பில் ஒரு மருத்துவ குழுவை நியமித்துள்ளோம். அந்த குழுவினர் அனைத்து மருத்துவ மனைகளுக்கும் சென்று ஆய்வுசெய்து அறிக்கை சமர்ப்பிப்பார்கள். அதை அரசுக்கு அனுப்புவோம்.

பாஜக.,வைப் பொருத்தவரை எந்தநேரத்தில் தேர்தல் வந்தாலும் சந்திக்க தயாராக உள்ளது. வரும் 2016-ம் ஆண்டு சட்டப் பேரவைத் தேர்தலில் மக்கள் எதிர்பார்க்கும் மாற்றத்தை பாஜக ஏற்படுத்தும்.

ஊழலை எதிர்த்தும், மதுவுக்கு எதிராகவும் தொடர்ந்து குரல்கொடுப்போம். மேக்கேதாட்டுவில் கர்நாடக அரசு அணை கட்டும் விஷயத்தில் மத்திய அரசு எந்தஅனுமதியும் வழங்கவில்லை. தமிழகம் வஞ்சிக்கப்பட கூடாது என்பதில் பாஜக உறுதியாக இருக்கும்.

ஆந்திரத்தில் 20 தமிழர்கள் சுட்டு கொல்லப்பட்டதற்கு மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை என்று குறை கூறுவது தவறு.

சம்பவத்தைக் கேள்விப் பட்டதுமே உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் ஆந்திர அரசுடன் தொடர்புகொண்டு அறிக்கை அனுப்ப உத்தரவிட்டார். ஆந்திர மாநில உயரதிகாரிகள் அனைவரும் சனிக் கிழமை மத்திய அரசு முன் ஆஜராகி அறிக்கை அளித்துள்ளனர் என்றார்.

Leave a Reply