பிரதமர் மோடி தலைமையிலான, தேஜ., கூட்டணி அரசு இரண்டாவது முறையாக பதவியேற்று, 100 நாட்கள் நிறைவடைந்துள்ள நிலையில், ஜம்முகாஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளித்த சட்டப்பிரிவை ரத்துசெய்தது, ‘முத்தலாக்’ தடைசட்டம் உள்ளிட்ட பல்வேறு சாதனைகள் நிகழ்த்தப்பட்டுள்ளதாக, மத்திய அமைச்சர், பிரகாஷ் ஜாவடேகர் கூறியுள்ளார்.

மேலும் அவர் கூறியதாவது : ஜம்மு – காஷ்மீருக்கு சிறப்புஅந்தஸ்து அளித்த, 370வது சட்டப்பிரிவு ரத்து. மற்ற மாநிலங்களை சேர்ந்தவர்கள், காஷ்மீரில் சொத்துவாங்க முடியாது; பிற மாநிலங்களை சேர்ந்த ஆண்களை திருமணம் செய்யும், காஷ்மீர் பெண்களுக்கு சொத்துரிமைகிடையாது என்பது போன்ற விதிகள் அடங்கிய, சட்டப்பிரிவு, 35 ஏ ரத்து செய்யப்பட்டது. வழக்கொழிந்த, 58 சட்டங்கள் நீக்கப்பட்டன.

தனி நபர்களை பயங்கரவாதிகளாக அறிவிக்கும் வகையில் சட்டதிருத்தம் மேற்கொள்ளப்பட்டது. சாலை போக்குவரத்தில் ஒழுங்கு முறையை ஏற்படுத்தும் வகையில், மோட்டார் வாகன சட்ட திருத்தமசோதா நிறைவேற்றப்பட்டது. நிலவின் தென் பகுதியை ஆய்வு செய்ய, ‘சந்திரயான் – 2’ விண்கலம் ஏவப்பட்டது.

பொருளாதார சீர்திருத்தம் முழுவீச்சில் மேற்கொள்ளப்பட்டது. அடுத்த ஐந்து ஆண்டுகளில், 350 லட்சம் கோடி ரூபாய்மதிப்புள்ள பொருளாதார நாடாக இந்தியாவை மாற்றுவதற்கான இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. தொழில்துவங்க கடன் வழங்குவதற்கான வங்கி நடைமுறைகள் எளிமையாக்கப்பட்டன. வருமானவரி கணக்கு தாக்கல்செய்ய, ஆதார் கார்டை பயன்படுத்த அனுமதி. அனைவருக்கும் சம உரிமை அளிக்கும் வகையில், முத்தலாக் நடைமுறைக்கு தடை. குழந்தைகளை பாலியல் பலாத்காரம் செய்வோருக்கு மரணதண்டனை. அடுத்த ஆண்டுக்குள், 1.95 கோடி ஏழை குடும்பங்களுக்கு வீடு கட்டித்தருதல் வரும், 2022க்குள், அனைத்து வீடுகளுக்கும் மின் வசதி, சமையல், ‘காஸ்’ வசதி.

வரும், 2024க்குள், கிராமப் புறங்களில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் வசதி. விவசாயிகளின் வருமானத்தை இரண்டுமடங்காக உயர்த்தும் திட்டத்தில், 6.73 கோடி பேருக்கு பயன். சிறுவிவசாயிகள் ஐந்து கோடி பேருக்கு, மாதந்தோறும், 3,000 ரூபாய் ஓய்வூதியம் அளிக்கும் திட்டம் துவக்கம். ரயில்வே துறைக்கு உத்வேகம் அளிக்கும் வகையில், 2030க்குள், அந்ததுறையில், 50 லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்வது. இவ்வாறு கூறினார்.

Comments are closed.