மோடி தலைமையிலான அரசு, அடுத்த, 100 நாட்களில் மிகப்பெரிய சீர்திருத்த திட்டங்களை செயல்படுத்த உள்ளோம்.

மாதந்தோறும், லட்சக் கணக்கான இளைஞர்கள், தொழிலாளர் சந்தைக்கு வந்துகொண்டு இருக்கின்றனர். அவர்களுக்கான வேலை வாய்ப்பை உருவாக்க, நாட்டின் பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்க வேண்டும். வங்கிகளின் வாராக்கடன், வங்கிசாரா நிதி நிறுவனங் களின் பிரச்னையால், சமீபத்திய காலாண்டில், நாட்டின் பொருளாதார வளர்ச்சி குறைந்துள்ளது.

 

மோடியின் முதல், 100 நாட்களில், மிகப்பெரிய அளவிலான சீர்திருத்த திட்டங்கள் செயல்பாட்டிற்கு வர உள்ளன.அதில், அடிப்படை கட்டமைப்பு வசதி திட்டங்களுக்கு தேவையான நிதியை திரட்டுவதற்கும், வரிவருவாயை அதிகரிப்பதற்கும், பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்கவும் முன்னுரிமை அளிக்கப்படும்.

முக்கியமாக, தொழிலாளர் சட்டம், தனியார் மயமாக்கல், புதிய தொழில்களுக்கு தேவையான நிலவங்கி அமைப்பது உட்பட, பல்வேறு சீர் திருத்தங்கள் அமலுக்கு வர உள்ளன. தொழிலாளர் நலச் சட்டங்களில் உள்ள சிக்கல்களுக்கு தீர்வுகாணப்படும்.தொழிலாளர்கள் தொடர்பான, 44 சட்டங்கள், ஊதியம், தொழில் உறவு, சமூகபாதுகாப்பு நலனுடன், பணியாளர் ஆரோக்கியம், பாதுகாப்பு மற்றும் பணிச்சூழல் என, நான்கு பிரிவுகளின் கீழ், ஒன்றிணைக்கப்படும்.

இதனால், நிறுவனங்கள், அவற்றின் தொழிலாளர்கள் மற்றும் அதிகாரிகள் இடையிலான பிரச்னைகளுக்கு, மிகவிரைவாக தீர்வுகாண முடியும். பொதுத்துறை நிறுவனங்கள் வசம், மிகப்பெரிய அளவிற்கு, பயன்படுத்தப்படாத நிலம் உள்ளது; அவற்றைவைத்து, நிலவங்கி உருவாக்கப்படும். இந்நிலங்கள், தொழில்துவங்க முன் வரும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு வழங்கப்படும். இதனால், தொழில்களுக்கு, விவசாய நிலங்களை கையகப்படுத்தும் போது பிரச்னைகள் எழாது.

தொழில் பிரிவுகளுக்கு, இந்தநிலம் வழங்கப்படும். இதனால், நிலம் கையகப்படுத்துவது தொடர்பான சட்டபிரச்னைகள் தவிர்க்கபடும். இழப்பை சந்தித்து வரும்,பொதுதுறையை சேர்ந்த, 44 நிறுவனங்கள், தனியார் மயமாக்கபடும். ‘ஏர் இந்தியா’ நிறுவனத்தை சுலபமாக விற்பனைசெய்ய, அதன், அன்னிய நேரடி முதலீட்டு வரம்பை தளர்த்துவது குறித்தும் பரிசீலிக்கப்படும்.

தற்போது, பல்வேறு அமைச்சகங்களின் கீழ், ஏராளமான பொதுத்துறை நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இதனால், முடிவுகள் எடுப்பது தாமதமாகிறது.ஆகவே, அனைத்து பொதுத்துறை நிறுவனங்களையும், சுயாட்சி அதிகாரமுள்ள ஓர் அமைப்பின் கீழ் கொண்டுவர, முடிவு செய்யப்பட்டுள்ளது.இதன்மூலம், பொதுத்துறை நிறுவனங்களின் விற்பனை அல்லது வளர்ச்சிக்கு தேவையான நடவடிக்கை களை விரைந்து மேற்கொள்ள முடியும்.

நிடி ஆயோக் துணை தலைவர், ராஜீவ் குமார்

Comments are closed.