நாடுமுழுவதும் சமூகத்தில் மாற்றம் ஏற்படுத்திய, செல்வாக்கு மிக்க 100 பெண்களை அடையாளம் காணும் பணியை பேஸ்புக் சமூக வலை தளத்துடன் இணைந்து மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் தொடங்க உள்ளது.

இதற்காக அமைச்சகத்தின் பேஸ்புக்பக்கத்தில் சிறந்த பெண்களின் விவரம் வெளியிடப்படும். இதில் அதிக பரிந்துரைகளை பெறும்பெண்களின் பட்டியல், நடுவர் குழுவின் முன் வைக்கப்பட்டு, இவர்களில் 100 பெண்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். இத்திட்டம் இன்று (ஜூலை 15) தொடங்கவுள்ளதாக அரசு செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.

இத்திட்டம் மக்களை சென்றடைய ஆதரவுகேட்டு நடிகர் அமிதாப் பச்சன், நடிகைகள் அனுஷ்கா சர்மா, தீபிகா படுகோனே, மாதுரி தீட்சித், கிரிக்கெட்வீரர்கள் மகேந்திர சிங் தோனி, விராட்கோலி ஆகியோருக்கு மத்திய பெண்கள் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சர் மேனகா காந்தி கடிதம் எழுதியுள்ளார்.

"பிறர்வாழ்வில் மாற்றம் ஏற்படுத்திய, நீங்கள் அறிந்த ஒரு வரை நியமனம் செய்யலாம். இது தவிர மக்களும் தங்கள் நியமனங்களை அனுப்புவதற்கு, அவர்களை உங்களின் தனிப்பட்ட பேஸ்புக், ட்விட்டர் பக்கங்கள் மூலம் நீங்கள் ஊக்கப்படுத்தலாம்" என்று மேனகா அக்கடிதத்தில் கூறியுள்ளார்.

இந்த திட்டம் குறித்து மேனகா காந்தி கூறும் போது, "நமது நலனுக்காக, சமூக மாற்றத்துக்காக பாடு படும் பெண்கள் நம்மை சுற்றிலும் உள்ளனர். அவர்களுக்கு போதுமான அளவில் நாம் நன்றி தெரிவிப் பதில்லை. அவர்களை கவுரவிக்க தற்போது வாய்ப்பு ஏற்படுத்தி தரப்பட்டுள்ளது" என்றார்.

பெண் குழந்தைகளுக்கான திட்டத்தை பிரதமர் நரேந்திரமோடி அடுத்த ஆண்டு ஜனவரி 22ம் தேதி தொடங்கி வைக்கும் போது, இந்த 100 பெண்களும் குடியரசுத் தலைவரால் கவுரவிக்கப்பட உள்ளனர்.

பொதுமக்கள் தங்கள் நியமனங்களை இன்றுமுதல் செப்டம்பர் 30ம் தேதிவரை, மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சக பேஸ்புக்பக்கத்தில் பதிவு செய்யலாம்.

Leave a Reply