தமிழக பாஜக. தலைமை அலுவலகமான கமலாலயத்தில, லோக்நாயக் ஜெயப்பிரகாஷ் நாராயணனின் 113-வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. விழாவில், பா.ஜ.க. மாநில தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன், கலந்து கொண்டு ஜெயப்பிரகாஷ் நாராயணனின் உருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

அதைத் தொடர்ந்து டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

வருகின்ற 2016 தேர்தல் மூலம், தமிழக மக்களுக்கு ஊழலற்ற, அடக்குமுறை அற்ற, அனைத்து அடிப்படை வசதிகள் கூடிய ஆட்சியை அமைக்க பா.ஜ.க. முழுமூச்சாக பாடுபடும் என்பதை ஜெயப்பிரகாஷ் நாராயணனின் பிறந்த நாளில் மக்களுக்கு விடுக்கும் செய்தியாக தெரிவிக்கிறேன்.

ஏனென்றால், தமிழகம் இன்று அத்தகைய கட்டாய காலகட்டத்தில் இருந்து கொண்டிருக்கிறது. தமிழகத்தை பொறுத்தவரையில் எல்லா துறைகளிலும் ஊழல் மலிந்திருக்கிறது. மக்களுக்கான அடிப்படை வசதிகள் கூட கிடைப்பதில்லை.

மக்களுக்கான திட்டங்களை மக்களிடம் எடுத்து செல்வதில் மத்திய அரசு மும்முரமாக இருந்து வருகிறது. அதில் ஒரு பகுதிதான், ‘இந்திர தனுஷ்’ தடுப்பூசி திட்டம்.

ஆனால், இந்த திட்டம் தமிழகத்தில் நிறைவேற்றப்படும் போது, அதில் பெரும்பாலும் முதல்வரின் படம் இடம் பெற்றிருக்கிறது. மத்திய அரசின் திட்டம் என எடுத்துரைக்கப்படுவதில்லை.

டாஸ்மாக் கடைகளை அகற்றி தமிழகத்தில் பூரண மதுவிலக்கு கொண்டு வர வேண்டும் என்று தமிழக பா.ஜ.க. தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. அக்டோபர் 2-ந் தேதியிலாவது அறிவிப்பு வரும் என்று எதிர்பார்த்தோம். ஆனால், காந்தியும் வந்து சென்று விட்டார், ஆனால் டாஸ்மாக் ஆறாக தமிழகத்தில் பெருக்கெடுத்து ஓடிக் கொண்டிருக்கிறது.

உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் படி, தமிழகத்திற்கு 2½ லட்சம் கோடி ரூபாய் வருவாய் வருமேயானால், 26 ஆயிரம் கோடி ரூபாய் உங்களுக்கு தேவையில்லையே, 2½ லட்சத்திற்குள் மக்கள் நல திட்டங்களை செய்தால் போதுமே.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply