விடுதலைப் புலிகளுக்கு எதிரான இறுதிகட்டப் போரின்போது இலங்கை ராணுவம் கொடிய போர்க் குற்றங்களில் ஈடுபட்டதாக எழுந்தபுகார்கள் உண்மையான வைதான் என்று அரசு விசாரணைக்குழு அறிக்கை தாக்கல் செய்துள்ளது.

போர்க்குற்றம் தொடர்பாக உள்நாட்டு அளவில் விசாரணை நடத்தும் போது அதில் வெளிநாட்டு நீதிபதிகளையும் சேர்க்க வேண்டும் என்ற ஐநா மனித உரிமைகள் ஆணையத்தின் பரிந்துரைகள் ஏற்கப்பட வேண்டும் என்றும் அந்த அறிக்கை தெரிவிக்கிறது.
இலங்கையில் 2009-ம் ஆண்டில் ராணுவத்துக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே இறுதிக்கட்ட போர் நடைபெற்றது. இதில் சுமார் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அப்பாவி தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்டதாக புகார்கள் எழுந்தன.

உள்நாட்டு போர் நிறைவடைந்தப் பிறகு காணாமல் போனவர்கள் தொடர்பாக விசாரிக்க முன்னாள் அதிபர் மகிந்தராஜபக்ச பதவிக் காலத்தில் ஓய்வுபெற்ற நீதிபதி மாக்ஸ்வெல் பரணகம தலைமையில் சிறப்புக் குழு நியமிக்கப்பட்டது.முதலில் காணாமல் போனவர்கள் குறித்து மட்டும் விசாரித்த இக்குழுவின் விசாரணை வரம்பு, போர்க் குற்ற புகார்களை விசாரிப்பதற்கும் விரிவுபடுத்தப்பட்டது.
இந்நிலையில் 178 பக்க விசாரணை அறிக்கையை குழுவின் தலைவர் நீதிபதி மாக்ஸ் வெல் பரணகம அண்மையில் அதிபர் சிறிசேனவிடம் வழங்கினார். இந்த அறிக்கை நேற்று முன்தினம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அதில் கூறியிருப்பதாவது:

[su_quote]இறுதிக்கட்ட போரில் இலங்கை ராணுவம் கொடுங்குற்றங்களை புரிந்தது என்று சுமத்தபட்ட புகார்கள் நிரூபணமாகி உள்ளன. இவற்றை இன்னும் திட்டவட்டமாக நிரூபித்தால் ராணுவத்தில் இடம் பெற்ற சில வீரர்கள் கொடும் குற்றங்களை புரிந்ததும் அது போர்க் குற்றம் என அறுதியிட்டு சொல்லவும் முடியும்.[/su_quote]

போர்க் குற்றப்புகார்கள் தொடர்பாக நீதித்துறை விசாரணைக்கு உத்தரவிடலாம். இலங்கை சட்ட அமைப்புக்கு உட்பட்டு போர்க்குற்றங்கள் பிரிவு ஒன்று தனியாக ஏற்படுத்தப்படவேண்டும்.

இறுதிகட்ட போரின் போது நடந்த கொடுமைகளை காட்சிப்படுத்தி ‘நோபயர் ஸோன்’ என்ற தலைப்பில் பிரிட்டனை சேர்ந்த சேனல் 4 தொலைக் காட்சி வெளியிட்ட வீடியோ போலியல்ல, உண்மையானது தான்.

தமிழ் சிறைக்கைதிகளை இலங்கை ராணுவவீரர்கள் கொடூரமாக கொலைசெய்யும் இந்த வீடியோ பதிவுகள் நிஜமானவை தான் என்பதற்கு போதிய ஆதாரங்கள் உள்ளன. இந்த வீடியோகாட்சிகள் பற்றி நீதிபதி தலைமையில் விசாரணை நடத்துவது தான் நியாயமாகும்.

நடேசன், புலித்தேவன் உள்ளிட்டோர் வெள்ளைக்கொடியுடன் வந்தபோது படுகொலை செய்யப்பட்டசம்பவம் தொடர்பாகவும் நீதிபதி ஒருவர் தலைமையில் விரிவான விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும்

இறுதிகட்டப் போரின் போது சரணடைய வந்த விடுதலைப் புலிகள் ராணுவத்தால் ஈவிரக்கமின்றி கொல்லப்பட்டனர் என்ற புகார்களை அடியோடு நிராகரித்து விட முடியாது. சட்டநியதி மீறி நடந்துள்ள கொலைகள் மற்றும் சரணடைய வந்தவர்கள் கொல்லப்பட்டது பற்றி நீதிபதி தலைமையில் விசாரிக்கப்பட வேண்டும்.
போர்க் குற்றம் பற்றிய விசாரணை நம்பகத்தன்மை மிக்கதாக இருக்க வேண்டும் என்றால் சர்வதேச நீதிபதிகள் இந்த விசாரணையில் இடம் பெற வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.