நாடு முழுவதும் சட்ட விரோதமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 75 ஆயிரம் டன் பருப்பு பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. துவரம்பருப்பின் விலை 200 ரூபாயை தாண்டிவிட்டது. இதனால் பெரும் சிரமத்துக்கு ஆளாகியுள்ள பொது மக்கள் பருப்பை பயன்படுத்த முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

 உற்பத்தி கணிசமாக குறைந்து விட்டபோதிலும் , பருப்பு வகைகளை மொத்த வியாபாரிகள் பதுக்கி வைத்திருப்பதே விலை உயர்வுக்கு காரணமாக கூறபடுகிறது. உத்திரபிரதேசம், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் பருப்புவகைகள் அதிகளவில் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த மாநிலங்களில் பருவமழை சரிவர பெய்யாததால், பருப்பு உற்பத்தி வெகுவாக குறைந்துவிட்டது. சுமார் 20 லட்சம் டன் பருப்பு உற்பத்தி குறைந்து விட்டதாக புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. பருப்பின் விலையை கட்டுக்குள் கொண்டு வர மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. ஏற்றுமதி, இறக்குமதி மற்றும் மொத்த விற்பனைக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப் பட்டுள்ளது. பருப்பு வகைகள் பதுக்கலை தடுக்க வேண்டும் என்றும், பதுக்கிவைப்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தவிட்டது.

இதனை தொடர்ந்து , அந்தந்த மாநிலங்களை சேர்ந்த பொது விநியோகத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் இறங்கியுள்ளனர். சோதனை சாவடிகளில் உணவுப் பொருட்கள் ஏற்றி செல்லும் லாரிகள் சோதனை செய்யப் பட்டபின் அனுப்பப்படுகின்றன. ஆந்திரா, கர்நாடகா, தெலங்கானா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் பதுக்கி வைத் திருந்த பருப்புவகைகள் சமீபத்தில் பறிமுதல் செய்யப்பட்டன. விலை உயர்வை கட்டுக்குள்வைக்க வெளிநாட்டில் இருந்து பருப்புவகைகள் இறக்குமதி செய்யப்படும் என மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி தெரிவித்துள்ளார்.

பதுக்கலை தடுக்க மாநில அரசுகள் உடனடி நடவடிக் கைகளில் இறங்கவேண்டும் என வலியுறுத்தினார். இறக்குமதி செய்யப்படும் பருப்பு வகைகள் மாநிலங்களுக்கு பிரித்து கொடுக்கப்படும் என தெரிவித்த அருண் ஜெட்லி, பருப்பு விலை விரைவில் கட்டுக்குள்  என நம்பிக்கை தெரிவித்தார்.

இந்நிலையில், நாடு முழுவதும் உள்ள குடோன்கள், பருப்பு ஆலைகள் உள்ளிட்டவற்றில் தொடர்ந்து அதிரடிசோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. பதுக்கி வைத்திருக்கும் பருப்புவகைகள் அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்படுகிறது. 6077 இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் சுமார் 75 ஆயிரம் டன் பருப்புவகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply